மைசூர் சௌடையா
அந்தக் கச்சேரியில் வித்வான் பாடிக் கொண்டிருந்தார். பலத்த கரகோஷத்துக்கிடையே அபாரமாக நடந்து கொண்டிருந்தது அவரது சீடரான இளைஞர் குரு பாடியதை அப்படியே வயலினில் வாசித்துக் கொண்டிருந்தார், நடுவில் ஒரு சிறு தவறு செய்துவிட்டார். அவ்வளவுதான், குருவின் விழிகள் சிவந்து விட்டன. அந்த அவை பெரியது என்பதையோ, பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையோ மறந்த அவர், இளைஞனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார். குருவின் விழிகளின் சிவப்பு சீடனின் கன்னத்தில். கண்கள் கண்ணீர் சொரிந்தன. தலை கவிழ்ந்தார் சீடர். சபை ஸ்தம்பித்தது.

சில நிமிடங்களில் சீடர் தலை நிமிர்ந்தபோது அவர் முகத்தில் எப்போதும்போல மலர்ச்சி. மட்டுமல்ல; குருவைச் சரியாகப் பின்தொடர்ந்து அபாரமாக வாசிக்கவும் செய்தார். அன்றைய கச்சேரி குருவுக்கும் சீடனுக்கும் அதுவரை என்றும் நிகழாத கச்சேரியாக அமைந்து நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. கச்சேரி முடிந்து அனைவரும் புறப்பட்டனர். குரு சீடனைப் பார்த்தார். சீடனின் கன்னத்தில் அவரது ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் மாறாமல் இருந்தது.

"டேய், ரொம்ப அடிச்சுட்டேனா, வலிக்கறதா?".

"அதெல்லாம் ஒண்ணுமில்லைண்ணா"

"இல்லை, உன் கன்னமே சொல்றதே உண்மையை" கண்கலங்கினார் குரு.

"அதனாலென்ன. எல்லாம் என் நன்மைக்காகத்தானே!"

"ஆமாண்டாப்பா. ஆமாம். உன்மேல எனக்கென்ன கோபம். எல்லோருக்கும் முன்னாடி அவமானப்படுத்தணும்னு எனக்கு ஆசையா என்ன? என்னமோ கச்சேரி நடக்கும்போது சங்கீதத்துல ஏதாவது தப்பாயிடுத்துன்னா என்னால பொறுக்க முடியறதில்லை. கோபப்பட்டுடறேன். கை நீட்டிடறேன். நீ ஏதும் மனசில வச்சிக்காத. பொட்டில மருந்து இருக்கும். போட்டுக்கோ" என்றார்.

குரு, சீடர் இருவரது கண்களுமே அப்போது கலங்கி இருந்தன. இப்படி குரு-சிஷ்ய உறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அவர்கள் பிடாரம் கிருஷ்ணப்பா-மைசூர் சௌடையா.

மைசூரை அடுத்த திருமகூடலு என்ற ஊரில், அகஸ்தியேஸ்வர கௌடா, சுந்தரம்மா தம்பதியினருக்கு 1895 ஜனவரி 1 அன்று மகனாகப் பிறந்தார் சௌடையா. உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். தந்தை சம்ஸ்கிருதத்திலும் இசையிலும் வல்லுநர். தாயாரோ இசையோடுகூட நடனத்திலும் தேர்ந்தவர். அவரையே முதல் குருவாகக் கொண்டு இசை கற்கத் தொடங்கினார் சௌடையா. ஐந்து வயதானதும் உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலே படிக்க அருகில் இருக்கும் நரசிபுரத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். தினந்தோறும் ஆற்றைக் கடந்து படகில் சென்று படித்து வந்தார். ஆனால் கல்வியைவிட இசையிலேயே அவரது மனம் லயித்தது. தாயார் சொல்லித் தந்திருந்த ஏதாவதொரு பாடலைப் படகில் செல்லும்போது முணுமுணுப்பது வழக்கமானது. ஒருமுறை சௌடையாவுடன் பயணம் செய்த அவ்வூர் மடத்துப் பண்டிதர் அவருடைய கைகளைப் பார்த்து அவர் எதிர்காலத்தில் சிறந்த இசை விற்பன்னராக வருவார் என்பதை அறிந்தார். அதை சௌடையாவின் பெற்றோர்களிடமும் தெரிவித்து, சௌடையா இசை பயில்வதற்கு அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தார்.

Click Here Enlargeசௌடையாவின் பள்ளிப் படிப்பு நின்றது. இசை வகுப்பு தொடங்கியது. முதலில் இளைய மாமா சுப்பண்ணாவிடமும் பின் ஒன்றுவிட்ட சகோதரர் பக்கண்ணாவிடமும் இசை பயின்றார். அது வெகுநாள் நீடிக்கவில்லை. பக்கண்ணாவுக்குச் சௌடையா தனக்குப் போட்டியாக உருவாவது பிடிக்கவில்லை. அதனால் மற்றொரு மடாதிபதிமூலம் ஜோதிடம் பார்க்க வைத்து "இவனுக்கு இசை வரவே வராது" என்று சௌடையாவின் பெற்றோரிடம் சொல்ல ஏற்பாடு செய்தார். சௌடையா தம் முடிவில் உறுதியாக இருக்கவே அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

சௌடையாவின் ஆர்வம் அறிந்த உறவினர் ஒருவர் அவரை மைசூருக்கு அழைத்துச் சென்று, புகழ்பெற்ற வித்வானாகவும், மைசூர் அரண்மனையின் ஆஸ்தான பண்டிதராகவும் இருந்த பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சிஷ்யராகச் சேர்த்து விட்டார். அப்போது சௌடையாவிற்கு வயது 15. குருவிடம் இருந்து இசையின் சகல நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். பிடாரம் கிருஷ்ணப்பா வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், வயலினிலும் தேர்ந்தவர். வாய்ப்பாட்டுக்கான குரல்வளம் சௌடையாவிடம் அமையவில்லை என்பதையும், பருவ வயதில் குரல் உடையும்போது (இதை மகரக்கட்டு என்பது) அது கச்சேரிக்குச் சரியாக அமையாது என்பதை உணர்ந்த அவர், சௌடையாவுக்கு வயலின் கற்பிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவரிடம் பயின்றார் சௌடையா.

ஒருமுறை "சிவகங்கை சுவாமிகள்" என்றழைக்கப்பட்ட மடாதிபதி ஒருவர் மைசூர் வந்திருந்தார். அவர் முன்னிலையில் பிடாரம் கிருஷ்ணப்பாவின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. மாலை கச்சேரி துவங்கும் நேரம். வயலின் வாசிப்பவர் வரவில்லை. காத்திருந்தும் பலனில்லை. உடனே கிருஷ்ணப்பா, சீடர் சௌடையாவை வயலின் வாசிக்க அழைத்தார். சௌடையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதுவரை தனியாக கச்சேரி வாசித்து அனுபவம் பெறாத தான் எப்படி வாசிப்பது என்று தயக்கம்.

"துணிகூடச் சரியாக உடுத்தத் தெரியாத நான்போய் எப்படி உங்கள் கச்சேரிக்கு...." என்று இழுத்தார்.

"உடை உடுத்துவதற்கும் கச்சேரிக்கும் என்ன சம்பந்தம்? உன் திறமை எனக்குத் தெரியும். வா வந்து வாசி" என்றார் குரு.

சிஷ்யர் பணிந்தார். மேடை ஏறினார். சௌடையாவின் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது. சிவகங்கை சுவாமிகள் உட்பட எல்லாரது பாராட்டும் கிடைத்தது. குருவிடம் இசை பயின்றுகொண்டே அவருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் குருவும் சிஷ்யரும் இணைந்து நாடெங்கும் பயணம் செய்து கச்சேரிகள் செய்தனர். அதே சமயம் தனியாக வயலின் கச்சேரி செய்யும் வாய்ப்பும் சௌடையாவைத் தேடி வந்தது. குருவின் அனுமதி பெற்று 'வயலின் சோலோ' கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். அவரது புகழ் தென்னிந்தியா முழுமைக்கும் பரவியது.

பாலக்காடு மணி, புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை போன்றோர் சௌடையாவை ஊக்குவித்து, அவருக்குப் பக்கம் வாசித்தனர். வீணை துரைசாமி ஐயங்கார், எஸ்.ஜே. ஸ்ரீநிவாச ஐயங்கார் ஆகியோருடன் இணைந்து வீணை - வயலின் டூயட் கச்சேரி செய்தும் புகழ்பெற்றார் சௌடையா. இக்காலகட்டத்தில் பிரபல வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்குமாறு அழைப்பு வந்தது சௌடையாவிற்கு. குருவிடம் தகவல் சொன்னார். அவரும் அனுமதி தரவே அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர் இருவருக்கும் வாசிக்க ஆரம்பித்தார். செம்பை, சௌடையா, பழனி சுப்பிரமணியப் பிள்ளை கூட்டணிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கச்சேரி வாய்ப்புகள் பெருகின. தனது திறமையெல்லாம் காட்டி வாசித்துப் புகழ் பெற்றார். 'வயலின் சக்கரவர்த்தி' என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.

அதுநாள்வரை நான்கு தந்திகளைக் கொண்டதாக இருந்த வயலினை மேலும் இசை கூட்டுவதற்காக ஏழு தந்திகள் கொண்டதாக மாற்றி அமைத்தார் சௌடையா. தமது குருவுக்குப் பக்கமாக அதனை வாசித்துக் காட்டி அனுமதி பெற்ற பிறகே மற்றக் கச்சேரிகளில் பயன்படுத்த ஆரம்பித்தார். ஏற்கனவே இன்னிசை வேந்தராகப் புகழ்கொண்டிருந்த சௌடையாவிற்கு ஏழு தந்தி வயலின் மேலும் புகழ் சேர்த்தது. பிரபல வித்வான்கள் பலரும் சௌடையா தமக்கு வாசிக்க வேண்டும் என விரும்பி அழைத்தனர். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாசய்யர், ஜி.என்.பி., மதுரை மணி, ஆலத்தூர் சகோதரர்கள் இவர்களோடான இவரது இசைக்கூட்டணிகள் மிகவும் புகழ்பெற்றதானது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி மைசூரிலும் பெங்களூரிலும் நிகழ்வதற்கு சௌடையாவே காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் எம்.எஸ்ஸிற்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசித்தும் அவருக்குக் கௌரவம் செய்தார். இளங்கலைஞரான புல்லாங்குழல் மாலியை ஊக்குவித்தவரும் சௌடையாவே. அவருடன் இணைந்து பல கச்சேரிகளுக்கு வாசித்திருக்கிறார்.

புதிது புதிதாகக் கார்களை வாங்குவதும் மாற்றுவதும் சௌடையாவின் வழக்கம். அதனால் தனது சேமிப்பை இழந்திருக்கிறார். 'வாணி' என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். அதனாலும் பண நஷ்டம் ஏற்பட்டது. சிலகாலம் பேருந்துப் போக்குவரத்துத் தொழிலிலும் ஈடுபட்டார். அதன் நெளிவுசுளிவுகள் தெரியாததாலும், சரியாக மேற்பார்வை செய்யாததாலும் அத்தொழிலிலும் நட்டம் ஏற்பட்டது. ஆனால் சௌடையா இதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சோலோ, பக்கவாத்தியம் என இரண்டிலுமே முத்திரை பதித்த சௌடையா, ரசிகத்தன்மைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர பணத்திற்கோ, புகழுக்கோ, கௌரவத்திற்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சன்மானம் ஏதும் எதிர்பார்க்காமல் பல கச்சேரிகள் செய்திருக்கிறார். அதனாலேயே அவருக்கு பாமரர்முதல் படித்தவர்கள், சமஸ்தான மன்னர்கள், சக வித்வான்கள் எனப் பலரும் ரசிகர்களாக இருந்தனர். சௌடையா பற்றி செம்பை, "முதற் சந்திப்பிலே பூத்த நட்புணர்வு, காலம் தேயத்தேய மிகுந்த மணத்தையே கொடுத்தது. இதற்குக் கலை ஒரு பாலமாக அமைந்தது. 'அண்ணனும் தம்பியுமோ' என்று பலரும் எண்ணும் நிலைக்கு எங்களிடம் ஒருபொழுதும் குறைபாடு நேர்ந்ததே இல்லை" என்கிறார்.

இசைபயிலும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் என்ன என்பது பற்றி சௌடையா, "கலை பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் ஆசிரியர்களிடத்து நல்லெண்ணமும் பற்றும் பாசமும் மிகுதியாக இருக்க வேண்டும். பயிற்சிகளிலே துடிப்பும் உழைப்பும் இருக்க வேண்டும். அவர்கள் நல்ல பழக்கங்களை வளர்த்து தீயவற்றையெல்லாம் விலக்க வேண்டும். விடாமல் 'சாதகம்' செய்ய வேண்டும். அது அவர்களுக்கு எப்போதும் 'சாதகத்தை'த் தரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சௌடையா, குருவின்மீது மிகுந்த பக்தி உடையவர். குரு தொடர்ந்து நடத்திவந்த ராமநவமி உற்சவத்தை இவரும் விடாது நடத்தினார். நண்பர்களுடன் 'ராம மண்டலி' என்ற அமைப்பை நிறுவிப் பொதுச்சேவை செய்ததுடன், "ஐயனார் கல்லூரி" என்பதை நிறுவி, ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் பக்தி வளரவும் காரணமாக அமைந்தார். இளம்கலைஞர்களை ஊக்குவிப்பவராகவும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவுபவராகவும் இருந்த சௌடையாவைத் தேடி விருதுகளும், பாராட்டுக்களும் குவிந்தன. 'கானகலா சிந்து', 'சங்கீதரத்னா' போன்ற பட்டங்கள் தேடி வந்தன. 1939ம் ஆண்டு மைசூர் ஆஸ்தான வித்வானாக கௌரவிக்கப்பட்ட சௌடையா, 1940ல் மைசூர் சமஸ்தானத்தின் 'சங்கீத ரத்னாகர' விருதைப் பெற்றார். 1952ல் மைசூர் சட்ட மேல்சபை அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். 1957ம் ஆண்டு கிடைத்த 'சங்கீத கலாநிதி' விருது அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. 1959ல் ஜனாதிபதி விருது பெற்றார்.

இசை வல்லுநராக மட்டுமல்லாமல் சிறந்த வாக்கேயக்காரராகவும் சௌடையா விளங்கினார். 'திருமகூட' என்ற முத்திரையுடன் பல கீர்த்தனைகள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார். அவருக்கமைந்த வி. சேதுராமையா, கண்டதேவி அழகிரிசாமி, மைசூர் ராமரத்னம், குரு ராசப்பா, சின்னப்பா, சி.ஆர். மணி போன்ற பல சிஷ்யர்கள் அவரது பாணியைக் கையாண்டு அவருக்குப் புகழ் சேர்த்தனர்.

1967 ஜனவரி 19ம் நாளன்று தமது 73ம் வயதில் சௌடையா காலமானார். தம் இறுதிநாள் வரை உழைத்த சௌடையா, அந்த வயதிலும் ஆறு கச்சேரிகள் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் என்பது அவரது திறமைக்கும் அயராத உழைப்பிற்கும் சான்று. அவரது நினைவாக பெங்களூரில், வயலின் வடிவில் நிர்மாணிக்கப்பட்ட 'சௌடையா மெமோரியல் ஹால்' இன்றும் அவர் புகழை இசைத்துக் கொண்டிருக்கிறது.

(தகவல் உதவி : எல்லார்வி எழுதிய 'இசைமணிகள்' மற்றும் சு.ரா. எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்')

பா.சு. ரமணன்

© TamilOnline.com