பொன்னீலன் எழுதிய 'தேடல்' நாவலிலிருந்து....
ஐப்பசி மாச மழைக்காலம். பகல் பதினொரு மணி. பளீரென்ற நீல நிறத்தில் வானம் சுள்ளென்று விழும் மழை வெயில் மேற்கே கருவுற்றுக் கனத்த சாம்பல் மேகங்கள் கடலிலிருந்து தரையை நோக்கிச் சுருள்சுருளாக வியாபிக்கின்றன. அவற்றின் நிழல் படர்ந்து, கடல் கெட்டி நீலமாக இருள்கின்றது. நுரைக் கொண்டைகளைச் சிலுப்பிக் கொண்டு சிற்றலைகள் ஊர்ந்து திரியும் கடற்பரப்பெங்கும் மீனவர்களின் கட்டு மரங்கள் முக்கோணப் பாய்களின் கீழே துடுப்பு போடும் மீனவர்களின் கறுப்பு வடிவங்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதுபோல் ஊரும் அலைவரிசைகள் வெள்ளையும் கறுப்பும் கலந்த குறுமணற் கரையில் விஸ்வரூபமெடுத்துப் பேரிரைச்சலோடு குட்டிக்கரணம் போடும் ஆசையில் நெளிகின்றன. கரையில் பேரலைகளின் ஆர்ப்பாட்டத்தால் நீலக்கடலோடு சிறிதும் ஒட்டாத பால் வெள்ளையாகத் திரை மடக்கு திரைந்து கலங்கிக் கொண்டிருந்தது.

மிக்கேலின் கட்டுமரம் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அதன் பாய்மரம் மடக்கப்பட்டு விட்டது. திரைமடக்குக்குக் கொஞ்ச தூரத்திலேயே அது நிதானித்தது. அலை முதுகுகள் உராய்ந்து அது உயர்ந்துயர்ந்து தாழ்ந்தது.

சளக் சளக்கென்று கட்டுமரத்தில் மோதும் சிற்றலைகளின் நீர்த் திவலைகளில் நனைந்தபடி கட்டுமரத்தின் நடுவே மண்டியிட்டிருந்தான் தாசன். நீலச் சுறாவை வெறும் துளவையால் குத்திக் கொன்றுவிடும் வலிமையுள்ள அவனுடைய திரட்சியான இரும்பு உடம்பு வெயிலில் பளபளத்தது. துளவைக் கட்டையை அவன் நடுப்பாகத்தில் இரண்டு கையாலும் கெட்டியாகப் பிடித்திருந்தான். அலையின் போக்கைப் பொருட்படுத்தாதவாறு வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் சாய்த்து, துளவையை மாறிமாறிக் கடல் நீரில் குத்தித் துளாவினான். அவன் முன்னால் மிக்கேல் - அவர்தான் கட்டுமரத்தின் சொந்தக்காரர் - முழங்காலிட்டு கட்டுமரத்தின் விளிம்புகளைப் பிடித்தபடி தன் பூனைக் கண்களால் அலைகளின் போக்கையும், கடற்கரையயும் கவனித்து, அதற்குத் தக்கவாறு தாசனை எச்சரித்துக் கொண்டிருந்தார். தாசனின் பின்னால் தன் நீண்ட கால்களை நீட்டி உட்கார்ந்து, தன் நெடிய கைகளால் துளாவிக் கொண்டிருந்தார் சில்வருசு. தாசனை அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். "தொடுலே... தொடுலே.. நம்ம மரந்தான் மொத மொதக் கரையேறணும்" என்று வாய் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தார். மேடும் பள்ளமாகத் தத்தளித்த நீர்ப் பரப்பில் கட்டுமரம் சினைமீன்போல் தடுமாறியது.

கரையிலோ, அலையின் இரைச்சலை மீறி ஜனங்களின் ஆரவாரம். தாசன் நிமிர்ந்து பார்த்தான். கட்டுமரம் ஒன்று கரையில் ஒதுங்கிக் கொண்டிருந்தது. சைமனின் கட்டுமரம் தான் அது. தாசனுக்கு ஒரே எரிச்சல். தன் முன்னே முழங்காலிட்டிருந்த மிக்கேலின் முதுகில் அவன் துளவையால் இடித்தான். "என்னவே நிதானம்? அவன் நமக்கு முன்ன போயிட்டான் பார்த்தீரா!" என்றான். துளவையை மரத்தினுள் போட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் மரத்தின் விளிம்புகளைப் பிடித்துக்கொண்டு அவன் எழுந்தான். பாதி குனிந்த நிலையில் கடற்கரையைக் குனிந்து பார்த்தான். வெயிலில் பளபளக்கும் மணல் - மணலில் கூடி நின்று ஆரவாரிக்கும் சனத்திரள். இந்த சனத்திரளிலிருந்து விலகி - ஒதுங்கி - அதோ அந்தக் கட்டுமரத்தின் பக்கத்தில் - அது சில்வி தானே! அவள் பக்கத்தில் சிவப்பு லுங்கியும் நீலச் சட்டையுமாக நிற்கும் இளைஞன்..? ரூபனேதான்! தேளிமீன் கொட்டியது போலிருந்தது தாசனுக்கு. பல்லைக் கடித்தான்.

"ஏல, அங்க என்னலே பாக்குற?" சில்வருசு தன் துளவையால் தாசனின் தோள்பட்டையில் இடித்தான்.

"ஒம்ம மக சில்வி - அதா பாரும்!" என்று சொல்ல தாசன் ஆசைப்பட்டான். மரத்தினுள் மண்டியிட்டு, இடப்பக்கம் சாய்ந்து, நீரில் துப்பினான். அடுத்த அலையின் பிரவேசத்துக்காக அவன் முன்னே கடல் குழிந்தது. வசதியான நேரம் - சிரமமின்றி அலையைக் கடந்து விடலாம். அவன் துளவைக் கோலைக் கையில் எடுத்தான். பேரலை ஒன்று மரத்தைத் தூக்கியது. தாசனின் கைகள் இடமும் வலமுமாக வேகமாக அசைந்தன. "தொடுவும் வே!" என்று சில்வருசுவைத் துரிதப்படுத்தினான்.

"தொடுலோய் - தொடுலோய் - தொடுலோய்!"

கரையில், முட்டளவு நீரில் கைகளை உயர்த்திக் கூவிக் குதித்துக் கொண்டிருந்தான். மிக்கேலின் இளைய மகன் வின்சென்ட் கடற்பறவையின் கூச்சல் போல அவனுடைய கூர்மையான குரல் திரை இரைச்சலினிடையே கேட்டது. மிக்கேல் தன் சிப்பிப் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

"எலே தாசா பார்த்தியா! மறு வருஷம் இந்தப் பய கடலுக்கு வந்திருவான்!"

"தொடுலோய் - தொடுலோய் - தொடுலோய்!"

வின்சென்டின் கூச்சல் முன்னைவிடவும் தெளிவாகக் கேட்டது. திமிங்கலம் போல ஒரு பேரலை பின்னாலிருந்து மரத்தை மோதிற்று. பின் கரணம் அடிக்கப்போவது போல கட்டுமரத்தின் முன் பகுதி ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. மிக்கேல் படக்கென்று உட்கார்ந்து கொண்டான்.

"தொடுலோய் - தொடுலோய் - தொடுலோய்!"

சில்வருசுவும், தாசனும் தங்கள் வலிமை முழுவதையும் கைகளில் திரட்டி வேகமாகத் துளாவினார்கள். மரத்தின்மீது அலை மூர்க்கத்தனமாகக் கவிழ்ந்தது. மிக்கேல் நீரினுள் குதித்தார். தொடர்ந்து தாசனும் சில்வருசும் துளவைகளைத் தூர வீசிவிட்டுத் திரையினுள் குதித்தார்கள். மரம் மூன்று குட்டிக் கரணம் போட்டு கரைக்கு வந்தது. தாசன் நீருக்குள்ளிருந்து புடைத்துக் கட்டுமரத்தைப் பிடிக்க வேகமாக நீந்தினான்.

(2)

ஈரமான கடற்கரை மணலில் கட்டுமரம் கிடந்தது. அதனோடு வலையையும் உமலையும் சேர்த்துக் கட்டியிருந்த கயிறுகளை தாசன் வேகமாக அவிழ்த்தான். அவனும் சில்வருசுமாக உமலை மரத்திலிருந்து இறங்கினார்கள். சுற்றி நின்ற கூட்டம் உமல் மீது பாய்ந்தது. முதல் ஆளாக உமலுக்குள் கையை விட்ட வின்சென்ட் ஒரு விளமீன் குட்டியைத் தூக்கிக் கொண்டு நொங்கு விற்பவனை நோக்கி ஓடினான். இன்னொரு தோல் சுருங்கிய மெலிந்த கிழவன், ஒரு பெரிய குட்டியைத் தூக்கினான். அவனுடைய குழி விழுந்த கண்கள் பிரகாசித்தன. அப்போதே கள் குடித்து விட்டவனைப் போல அவன் நாக்கால் சொடக்குப் போட்டான். ஒரு கிழவி எடுத்த பெரிய மீனைப் பிடுங்கிய மிக்கேல், அதைத் திரும்ப உமலினுள் போட்டு விட்டுக் கிழவியை அப்பால் தள்ளினான். கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே, உமலைச் சுற்றிச் சுற்றி வந்து இலவசமாக மீன் எடுப்பவர்களை அப்பால் தள்ளினான்.

இப்போது மீனைச் சுற்றி வியாபாரிகள் கூடினார்கள். வெளிநாட்டு ஏற்றுமதியின் காரணமாக இறால் ஒரு விலைமதிக்க முடியாத சரக்காகி விட்டது. கொச்சியிலும் எர்ணாகுளத்திலும் ஆலப்புழையிலும் இருக்கும் பெரிய ஏற்றுமதிக் கம்பெனிகளின் வேன்கள் ஆள் நுழைய முடியாத கடற்கரை முடுக்குகளிலெல்லாம் நுழைந்து திரிந்தன. ஊரிலுள்ள படித்த இளைஞர்கள், இந்தக் கம்பெனி வேன்களுக்கு மீன் வாங்கிக் கொடுக்கும் தரகர்களானார்கள். மீனுக்காக கடலில் வலை வீசிய மீனவர்களுக்காக இந்த ஏஜண்டுகள் கரையில் பணம் வீசினார்கள்.

இவ்வாறு
பணம் வீசிய ஏஜண்டுகளில் மிக்கேல் மகன் ரூபனும் ஒருவன். படித்த இளைஞனான அவனுக்குத் தகப்பனின் கடல் தொழிலில் விருப்பமில்லை. விலையுயர்ந்த வெளிநாட்டு லுங்கியும், மடிப்புக் கலையாத சட்டையும் அணிந்து கொண்டு, அவன் கடற்கரையில் தரகனாக அலைந்தான். அவனுக்கு ஒரு உதவியாளன் - கமலூசு. ஒடுங்கிய மூஞ்சியும், மெலிந்த உடலுமாக குடல் நீக்கப்பட்ட வாளை மீன் போல இருந்தான் அவன். அவனும் பத்தாவது படித்தவன் தான். ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு, விசிலடித்துப் பாடியவாறு இருவரும் கூட்டத்தை நெரித்துக் கொண்டு மீன் அருகே வந்தார்கள். அங்கே நின்று கொண்டிருந்த பூதநாதனைக் கண்டதும் ரூபன் முகத்திலிருந்த உற்சாகம் மறைந்து விட்டது. கண்களில் ஒருவித அசுவை பரவியது.

பூதநாதன் அந்த வட்டாரத்திலேயே பெரிய வியாபாரி. மிகப்பெரிய ஆலப்புழை கம்பெனியின் ஏஜண்டு. சொந்த ஊர் திருவனந்தபுரம் ஆனாலும் பத்து வருசமாக அவர் சீவிதம் பெரும்பாலும் இந்தக் கடற்கரையில்தான் கடற்கரைக்காரராகவே ஆகிப் போனார். பெரிய தொந்தியின் அடியில் தொங்கலாக வேட்டியைக் கட்டிக் கொண்டும், பட்டன் இடப்படாத அரைக் கைச் சட்டையின் காலரை மேலே தூக்கி விட்டுக் கொண்டும், கண்களைச் சுருக்கியவாறு இழுத்துப் பேசும்போது, அவர் உள்ளூர்க்காரராகவே மாறி விடுவார். சிலசமயம் அவர் தன் தடித்துச் சிவந்த கழுத்தில் சிலுவையை கூடத் தொங்க விட்டிருப்பார். ஆனாலும் அவரைக் கண்டதும் ரூபனுக்கு மனதில் கசப்பு பொங்கியது. அவரை மீறி அவனால் அங்கே வியாபாரம் செய்ய இயலவில்லை. அவர் வைத்ததுதான் விலை. மீறி யாராவது போட்டி போட்டால், போட்டியை உற்சாகப்படுத்தி, எதிரிக்குப் போதை ஏற்றி, வசமான நேரத்தில் பின்வாங்கி, எதிரியை மண் கவ்வ வைப்பதில் வல்லவர் அவர்.

வெளியிலும் காற்றிலும் வெம்பிச் சிவந்திருந்த தன் பளபளப்பான வழுக்கைத் தலையைச் சொறிந்து கொண்டே, பூதநாதன் ரூபனைப் பார்த்து விஷமத்தனமாக முறுவலித்தார். இறங்கியிருந்த லுங்கியைச் சற்றே தூக்கி விட்டுவிட்டு மீன்மீது குனிந்தார். கை நிறைய இறால் மீனை அள்ளி, அதன் தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் ஒரு வினாடி யோசனை செய்தார். பின் ஒரு திருட்டுப் புன்னகையோடு ரூபனைப் பார்த்தார்.

"கிலோவுக்கு எழுவது நிக்குமா?" ஒன்றுமறியாத அப்ராணி போல் கேட்டார் அவர்.

ரூபன் பதில் சொல்லவில்லை. எச்சரிக்கையோடு தன் தகப்பனாரை ஓரக் கண்ணால் பார்த்தான்.

மிக்கேலுக்கு அசாத்திய கோபம். அவர் பூதநாதன் கையிலுள்ள மீனைப் பிடுங்கி உமலினுள் போட்டார்.

"ஏ, மீன் வாங்கவா வந்திருக்கியே?" அவர் ஏளனமாய்க் கேட்டார். "கிலோவுக்கு அம்பதுக்கு மேலே ஒரு ஒற்ற இறால் நின்னா என் செவிய அறுத்து வைப்பேன். இல்லாட்டா நீ வைப்பியா?" என்று சவால் விட்டார். எடை அதிகமான இறாலுக்குத் தான் மதிப்பு அதிகம். அதுதான் உயர்ந்த தரம்.

பூதநாதன் பயந்து விட்டவன் போல் பாவனை செய்தான். மறுகணம் அவனுடைய அலட்சியமான சிரிப்பு கடற்கரை எங்கும் கேட்டது.

(3)

ஏலம் போடுபவனான பீத்தர் கூட்டத்தின் நடுவே குந்தியிருந்தான். அவன் போட்டிருந்த மஞ்சள் நிறக் கந்தல் சட்டையின் தோள்பட்டை கிழிந்து எலும்பு தெரிந்தது. தன் மெலிந்த கையால் அவன் மணலைத் தடவிச் சமப்படுத்தி இறுக்கி, மீனைக் கொட்டிக் குவிப்பதற்கு வசதியான ஒரு திட்டாக்கினான். தாசனும், சில்வருசுவும் உமலை முழங்காலுக்குத் தூக்கி, மீனை அந்தத் திட்டின் மீது கொட்டினார்கள்.அச்சில் வார்க்கப்பட்டவை போல செம்பொன் நிறத்தில் பளபளக்கும் இறால் மீன்கள்! இரண்டு விரல் பருமன், அரை வட்டமாகச் சுருண்ட உடல், புத்தம் புதிய செம்புக் கம்பித் துண்டுகள் போலக் கை கால் மீசைகள்!

குந்திய நிலையிலேயே ஒரு தேரைப்போல பீத்தர் மீன் அருகே நகர்ந்தான். செம்பொன் குவியலில் வெள்ளித் துண்டுகளாக மினுங்கிய மற்ற மீன்களைக் கிண்டிப் பொறுக்கித் தனியாகக் குவித்தான். குழம்பு வைப்பதற்குரிய மீன் இது. இந்த மீனைத் தாசன் இரு கூறுகளாகப் பங்கிட்டான். ஒரு கூறு மிக்கேல் குடும்பத்துக்கு, மறுகூறு அவனுக்கும் சில்வருக்கும். ஆள்பாதி. மிக்கேலுக்குரிய பங்கை அள்ளி அவன் உமலினுள்ளே போட்டான். தனக்குரியதையும் சில்வருக்குரியதையும் சேர்த்து இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டு சற்றுத் தள்ளி ஒரு கட்டுமரத்தில் உட்கார்ந்திருந்த ரூபியிடம் போனான்.

ரூபி அவனைக் கவனிக்கவில்லை. கனவு காண்பவள் போல் பார்வையைக் கடல் மீது மிதக்க விட்டிருந்தாள். நெற்றிச் சுருள்களும் கன்னச் சுருள்களும் காற்றில் படபடத்தன. தாசன் தன் உடம்பைக் கவனித்தான். அரையில் லங்கோடு, உப்பு நீரில் ஊறிய கருத்த உடம்பு முழுவதும் வெள்ளை மணல். "ஆனாலும் என்ன, குளிச்சிச் சட்டை போட்ட பெறவு பாரு - ஐயாவ!" என்று பெருமிதத்தோடு தன்னுள் சொல்ல்கிக் கொண்டான்.

"ஏ.. இந்தா, என் பங்கும் இருக்கு.. பிடி!" கண்ணைச் சிமிட்டியவாறே அவன் இரண்டு கைகளையும் அவளிடம் நீட்டினாள்.

"உன் பங்கு எனக்கெதுக்கு?" அவள் முறுவல் கலந்த ஒரு முறைப்போடு எழுந்து சிறிது விலகினாள்.

தாசன் மீன்களை அவள் காலடியில் போட்டான்.

"கள்ளு குடிக்கணும். சுட்டு வையி" என்றான், மிடுக்காக.

"ஏ... நான் என்ன ஒன் வேலக்காரியா?" சில்வி வெடுக்கென்று கேட்டாள். மீனை எடுப்பதற்காகக் குனிந்தாள்.

நடு வகிடெடுத்துச் சீவப்பட்ட அவள் தலையில் தாசன் நறுக்கென்று குட்டினான்.

"ரூபன் கிட்ட ஈன்னு பல்லைக் காட்டிட்டு நில்லு! நான் மீன் சுடச் சொன்னா மட்டும் வேலைக்காரியா என்னன்னு கேளு!"

"அது என் இட்டம்!"

அவள் கோபத்தோடு நிமிர்ந்தாள். குட்டுப்பட்ட தன் தலையைத் தடவினாள்.

"ஏ... ஒன் இட்டமா? பெறவு நான் ஒன்னக் கட்டிக்கிட்டா?"

"வெவ்வெவ்வே!" அவள் முகத்தைக் கோணி அழகு காட்டினாள்.குனிந்து மணலில் கிடந்த மீன்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கினாள்.

"இனிமேலும் அவன்கிட்ட இளிக்கிறதப் பார்த்தேன் பல்ல ஒடச்சுப் போடுவேன்" என்று அவளை எச்சரித்து விட்டு தாசன் ஏலம் நடக்கும் இடத்துக்குத் திரும்பினான்.

ஏலம் நடந்து கொண்டிருந்தது.

"எண்ணூத்தி நாப்பத்திரண்டு" ஒருதரம் எண்ணூத்தி நாப்பத்திரண்டு.." பீத்தர் ராகம் போட்டவாறு தன் காக்கைக் கண்களைத் திருப்பி ரூபனின் முகத்தை ஆராய்ந்தான். ரூபன் கமலூசின் உள்ளங்கையைச் சுரண்டினான்.

"தொள்ளாயிரம்" கமலூசு கத்தினான். தன் எலி மூஞ்சியை பூதநாதன் பக்கம் மமதையோடு திருப்பினான்.

"ஆயிரம்" பூதநாதன் அலட்சியமாகக கேட்டான். ஆம்பிளையானா இனிமேல் கேளு பார்ப்போம் என்று சவால் விடுபவனைப் போல ரூபனை ஏறிட்டுப் பார்த்தான்.

பூதநாதன் தன்னைச் சிக்க வைப்பதற்காக வலை வீசுகிறார் என்பதை ரூபன் புரிந்து கொண்டான். என்றாலும் சுற்றிலுமுள்ளவர்கள் ஆரவாரித்துத் தூண்டும்போது அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை. "ஆயிரத்து அம்பது" என்றான் விறைப்பாக.

தொள்ளாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் ஒரு காசு பெறாது. நூற்றி ஐம்பது நஷ்டம். ஒருவிதத் தோல்வி உணர்வு ரூபனைக் கவ்விக் கொண்டது. கமலூசிடம் மீனை அள்ளச் சொல்லிவிட்டு தாசனிடம் வந்தான்.

"வேத்து சாதிக்காரன் நம்மள அடக்குரான்" என்றான் குரோத உணர்வுடன்.

"எலே, ஒன்ன யாரு அவருக்குப் போட்டியா கேக்கச் சொன்னது?" தாசன் இமைகளை இடுக்கிக் கொண்டே முறுவலித்தான்.

"நீ என்னத்துக்குலே சில்லி தலையில குட்டின?" என்றான் ரூபன்.

"அதுக்கு ஒனக்கென்னலே?" தாசன் முறைத்தான்.தொடர்ந்து, "நீ அவள ரொம்ப நெருங்குறது நல்லதில்ல!" என்று எச்சரித்தான்.

"அது அவரவர் சாமர்த்தியம்!" ரூபன் சிரித்தான். பின் நேச பாவத்தோடு தாசனின் தோளில் கை போட்டான்.

"இன்னிக்கி ஒனக்கு நிறய பணம் கிடைக்குமில்லையாலே, கள்ளு வாங்கித் தாலே"

பொன்னீலன்

© TamilOnline.com