தென்றல் பேசுகிறது...
"ஒரு வெப்கேம், ஸ்மார்ட் ஃபோன் மூலம் தன்னையே எடுத்துக்கொண்ட படத்தை (ஃபேஸ்புக் போன்ற) சமூக ஊடகத்தில் வலையேற்றிக் கொள்வது" என்ற பொருளைக் கொண்ட சொல் செல்ஃபி (selfie). 2013ன் மிகப் பிரபலமான சொல்லாக இதை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது. தன்னைப்பற்றி எதுவும் யாருக்கும் தெரிவது அவசியமில்லை என்ற காலம் மலையேறி, நல்லது கெட்டது என்ற பேதமில்லாமல் தன்னைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் பெருமிதத்தோடு சமூக ஊடகத்தில் பறையறையும் காலத்தில் இருக்கிறோம். செல்ஃபி படங்களில் சமீபத்திய பித்து என்னவென்றால் தான் படியில் உருண்டு விழுந்து அதைப் படம் எடுத்துப் போடுவதாம்! தனது படங்களைப் போட்டு, அது தவறான கண்களில் பட்டு அதன் காரணமாகத் தவறி விழுந்தவர்களையும், அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களையும் குறித்துச் செய்திகளில் படிக்கிறோம்; அல்லது, ஃபேஸ்புக் போன்றவற்றில் ஒரு குழுவாகச் சேர்ந்துகொண்டு சக மாணவ/மாணவியைக் கடுமையாகக் கேலிசெய்து, அதைத் தாளமுடியாமல் அவர் உயிர்துறப்பது குறித்தும் படிக்கிறோம். இதன் நீதி சமூக ஊடகம் தவறானதென்பதல்ல. எந்தக் கருவியும், அது எத்தனை நவீனம் அல்லது பழமையானதென்றாலும், அதைப் பயன்படுத்துகிறவரைப் பொருத்தே நல்லதாகவோ கெட்டதாகவோ ஆகிறது. இதை நாமும் புரிந்துகொண்டு, நமது குழந்தைகளுக்கும் பக்குவமாக அறிவுறுத்துவது ஒவ்வொருவரின் கடமை.

*****


தென்றல் இந்த இதழில் 14ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எத்தனை நீண்ட பயணமும் முதல் சிற்றடி எடுத்து வைப்பதில் தொடங்குகிறது என்பார்கள். தென்றலின் பயணமும் அப்படித்தான் தத்தித்தத்தி எடுத்து வைத்த முதல் அடியில் தொடங்கியது. ஆனால் இன்றைக்கு வட அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் என்று உலகெங்கும் பரவி நிற்கிற, சிறந்தவற்றை நேசிக்கிற வாசகர்களுக்குத் தமிழின் நறுமணம் குன்றாத தரமான படைப்புகளைப் பரிமாறுகிற பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்ட காலத்திலும் அதன் விளம்பரதாரர்கள் தமது ஆதரவுக் கரத்தைப் பின்னிழுத்துக் கொள்ளவில்லை. சாதனையாளர்கள், தமிழறிஞர்கள், மனிதநேயர்கள் என்று விதவிதமான, செயல்படத் தூண்டுகிற தோன்றல்களின் நேர்காணல்கள், வாழ்க்கைச் சரிதங்கள், உயரெண்ணங்களை விதைக்கிற சிறுகதைகள், நுட்பமான கவிதைகள் என்று சளைக்காமல் தென்றலுக்குத் தந்து வருகிற உலகளாவிய எழுத்தாளர்களும் தென்றலின் உயர்வுக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். அமெரிக்க வாசகர்களுக்குத் தென்றல் இலவசமாகத் தரும் வரிவிளம்பர (Classifieds) வசதி பயனுள்ளதாக இருக்கிறதென்பது நீங்கள் எழுதும் கடிதங்களில் தெரிகிறது. வரும்நாட்களிலும் நமது பார்வை மேல்நோக்கியே இருக்கும். அதற்குத் தமிழ்ச் சமுதாயத்தின் திணிந்து திரண்ட தோள்கள் என்றும்போல இனியும் ஆதாரமாக நிற்கும் என்பதே தென்றலின் ஆழ்ந்த நம்பிக்கை.

*****


திரைத்துறை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், இவரது கவிதைக்குச் சுயவெளிச்சத்திலேயே ஒளிர்கிற தனித்துவம் உண்டு. சமுதாய அக்கறையும் இலக்கியச் செறிவும் கொண்ட படைப்புகளின் சொந்தக்காரரான கவிஞர் யுகபாரதியின் நேர்காணலை இந்த இதழ் தாங்கி வருகிறது. தமிழ், தமிழர், தமிழ்ச் சமுதாயம் என்று மிகுந்த கரிசனத்தோடு பேசுவதோடல்லாமல், அதை நடைமுறையில் கொண்டுவருவதும் சாத்தியம் என்பதை நிரூபிப்பவர்களில் ஒருவர் டாலஸின் வேலு ராமன். இவர் நிறுவியுள்ள சாஸ்தா தமிழ் அறக்கட்டளை அதற்கொரு சான்று. அவருடைய நேர்காணல் அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அமையும். மைசூர் சௌடையா, பொன்னீலன் குறித்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்று செழிப்பும் வனப்புமாக வந்து நிற்கிறது தென்றல். இதில் முக்குளிப்பதும் முத்தெடுப்பதும் சுவைஞரின் திறனைப் பொருத்தது!

வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

டிசம்பர் 2013

© TamilOnline.com