தமிழில் குறும்படங்கள்: சிறிய படம், பெரிய செய்தி!
தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரத் துவங்கியிருக்கும் குறும்படங்கள் (short films) ஒரு பெரிய அளவில் சமூக விழிப்புணர்வுச் சாதனமாக மாறி வருகின்றன. கடந்த சில வாரங்களில் நான் கண்ட சில குறும்படங்களையும் அவற்றின் இயக்குனர்களைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இயக்குனர் லீனா மணிமேகலை

இவரை ஒரு குறும்பட இயக்குனர் என்பதை விட, தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப் பட்டோரின் குரலை வெளிக்கொணரப் போராடும் ஒரு போராளி என்றே சொல்வேன். இதனைக் குறும்படம், கவிதை, புத்தகங்கள், நிகழ்ச்சிகள் என்று பலவாறாகக் கனவுப்பட்டறை (kanavuppattarai.com) மூலமாக நிகழ்த்துகிறார். திரைப்படத் துறையில் பெயர்பெற்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கும் இவர் எஸ்.ராமகிருஷ்ண னின் 'உலக சினிமா' புத்தகத் தயாரிப்பிலும் பணி புரிந்திருக்கிறார். சமூக நாட்டம் கொண்டோருக்குத் திரைத்துறை மீது தோன்றியிருக்கும் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாகத் "திரை" என்ற மாத இதழைக் கொண்டு வருகிறார். டொராண்டோ சர்வதேசக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படத்துக்கான விருதை இவரது 'தீர்ந்து போயிருந்த காதல்' பெற்றிருக்கிறது.

இவர் நவம்பரில் ஒரு நாள் தனது குறும்படங்கள் மற்றும் புத்தகங்களுடன் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்துக்கு வந்திருந்தார். மாத்தம்மா, பறை ஆகிய இரு படங்களும் திரையிடப்பட்டன. நேரமின்மையால் மூன்றாவது படமான Break the Shackles திரையிடப் படவில்லை.

மாத்தம்மா

அரக்கோணத்துக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் உடல் நலமிழந்த பெண் பிள்ளைகளை மாத்தம்மாவின் கோயிலில் விட்டு 'மாத்தம்மா, இனி இது என் பிள்ளை இல்லை. உன் பிள்ளை. நீயே பாத்துக்க' என்று பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். பிள்ளையின் பெயரும் மாத்தம்மாவாகிறது. பிள்ளைகள் நலமடைவதாக நம்பிக்கை. அந்தப் பெண் அதன் பிறகு ஊராரின் சொத்து. அவள் திருவிழாக்களில் கூத்தாட வேண்டும். கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் போக வேண்டும். திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பிறக்கும் பிள்ளைகளுக்கு யார் அப்பா என்று சொல்ல முடியாது.

மாத்தம்மாக்களுக்கு ஊர்ப் பஞ்சாயத்து மூலமாகவோ சட்டத்தின் மூலமாகவோ எந்த உரிமைகளோ, பாதுகாப்போ கிடையாது. மாத்தம்மாக்கள் சீரழியும் பெண்களின் கூட்டம்.

பறை

இதன் கதை சொல்லும் பாங்கும், படத்தின் கதையம்சமும் எனக்கு The Untouchable Country குறும்படத்தை நினைவூட்டின. ஆனாலும் காமுக வன்முறைகளுக்கு முக்கியத்துவம் தந்து இப்படம் எடுக்கப்
பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் சிறு தொண்டமாதேவி கிராமத்தில் இருக்கும் தலித் பெண்கள் அவ்வூரிலிருக்கும் "மேல்" சாதியினரால் தொடர்ந்து காமுக வன்முறை களுக்கு உள்ளாக்கப் படுவதும் இதனை அரசின் எந்த அலுவலரும் கண்டும் காணாமலிருப்பதும் படத்தின் மையக்கருத்து.

கற்பு என்கிற கதையாடலுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம், அதனை அழிப்பதன் மூலம் அப்பெண்களை மேலும் சீரழிக்கலாம் என்பது போன்றவை தலித் இன மக்களை நசுக்க மேல்சாதியினர் பயன்படுத்தும் உத்திகள் என்பது இப்படத்தின் அடிநாத மாக ஒலிக்கிறது. காமுக வன்முறைகள் மீதான புள்ளி விபரங்கள், இம்மக்கள் அரசமைப்பினால் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதைத் தெளிவாகச் சொல்கிறது.

படங்களின் முடிவில் ஒரு கலந்துரையாடல் இருந்தது. சில பெண்கள் நடுங்கும் குரலில் லீனா மணிமேகலைக்கு நன்றி சொன்னார் கள். சிலருக்கு நம்ப முடியாமல் இருந்தது. சிலர் இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டார்கள். உண்மையான நடப்புகளை வெளியில் கொண்டு வந்து சொல்வதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இவர் எதிர்கொள்ளும் சவால்களைக் காணும் போது, நமது அரசமைப்பும் ஆளும் வர்க்கமும் தாழ்த்தப்பட்டோரை அடிமை
யாக்கிச் சுரண்டிக் கொண்டிருக்கும் முறையைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாயிருப்பது புரியும்.

அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் யாரோ ஒரு பெண் வந்து "எனக்கெல்லாம் ஒங்கள மாதிரி ஆகத்தான் ஆசையிருந்துச்சு; ஆனா பாருங்க இப்படி ஆயிட்டேன்; ஒங்களப் பாக்கச் சந்தோஷமாயிருக்கு" என்று சொல்லிப் போனார். உண்மைகள் எவ் வடிவிலேனும் எங்காவது எப்படியும் வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கை விளைகின்றது.

இவருக்கும், திரையிட ஏற்பாடு செய்த கனெக்டிகட் தமிழ்ச்சங்கத்துக்கும் நன்றி.

இயக்குனர் பா. சிவக்குமார்

டிசம்பர் 11 அன்று இவர் யேல் பல்கலைக் கழகத்துக்கு வந்திருந்தார். சிலரைப் பார்த்ததுமே மனதுக்குப் பிடித்து விடுகிறது. அந்தவகை ஆள் இவர். எத்தனையோ உலகளாவிய விருதுகளை வாங்கியிருந்த போதும் இவரிடமிருக்கும் எளிமையும், அகந்தையின்றி உறவாடும் தன்மையும் எனக்குப் பிடித்துப் போயின. திரையிடப் பட்ட இவரது இரண்டு குறும்படங்கள்.

உருமாற்றம்

சுற்றுச்சூழலைப் பற்றிய விசனங்கள் ஓங்கி வரும் இந்த வேளையில் இவரது இந்தப் படம் பல விதமான அதிர்வுகளை ஏற்படுத்து கிறது. ஆலை மயமாக்கல், தொழில் வளர்ச்சி, சுய முன்னேற்றம், அயல் நாட்டுப் ப(ய)ணம் போன்றவற்றிற்காக எவற்றை நாம் விலையாகக் கொடுக்கிறோம் என்று எண்ண வைக்கிறது.

படத்தில் தாத்தாவாக நடித்திருப்பவரும் (ஆர்.சி.சக்தி என்று சொன்னதாக நினைவு), அவருக்கு நண்பராக நடித்திருப்பவரும் (நம்மாழ்வார், இவர் நிஜ வாழ்வில் பல விவசாயச் சீர்திருத்தங்களைச் செய்பவர்) மிக நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுக் கிடையேயான நட்பு நன்றாகக் காட்டப் பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் பிரியும் வேளை பல காரணங்களுக்காகக் கண் களை ஈரமாக்கியது.

அந்த வீட்டுக்குள் நிலவும் பாரம் நம் மனத்தை ஒவ்வொரு காட்சியமைப்பிலும் தாக்கிக் கொண்டேயிருக்கிறது. தாத்தாவுக் கும் பேரனுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், முக்கியமாய் அந்தத் தோட்டத்தில் நிகழ்வது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இப்படம் சுற்றுச் சூழலுக்கான விருதை வாங்கியது சாலப் பொருத்தம்.

ஆயிஷா

இதன் மூலக்கதை நடராஜன் என்ற ஆசிரியரால் எழுதப்பட்டது. முன்பொரு முறை தங்கமணி இதை எனக்குப் படிக்கக் கொடுத்தார். மங்கலாய் நினைவிருந்தது கதை. நம் நாட்டில் ஆசிரியர்களின் நிலை, மாணவர்களுக்குத் தரப்படும் தண்டனைகள், அவற்றின் பின்விளைவுகள், தேடினால் கண்டுபிடித்துவிடக் கூடிய சிறந்த ஆசிரியர்கள், இள மனதின் ஆர்வங்கள், தேடல்கள், அவர்களின் குடும்பப் பின்னணிகள் இவற்றையெல்லாம் அரை மணிக்குள் அடக்கியிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் சிவக்குமார்.

ஆயிஷாவுக்கு அறிவியல் சொல்லித் தரக் கிடைத்தது ஓர் அருமையான ஆசிரியை (அர்ச்சனா).

இருவருக்கிடையேயும் நிலவும் அன்பைப் பல ஆசிரியர்களோடு நான் உணர்ந்திருக் கிறேன். அந்த ஆசிரியையை அரித்துக் கொண்டிருந்தது ஆயிஷாவின் ஒரு கேள்வி: "ஏன் மிஸ் கேரொலைன் ஹெர்ஷல் மாதிரியோ, மேரி க்யூரி மாதிரியோ ஒரு பெண் விஞ்ஞானி நம் நாட்டில் உருவாக வில்லை?" என்னை அரிக்கிறது அவளின் இன்னு மொரு கேள்வி: "ஏன் மிஸ் இந்த மாதிரிப் புத்தகங்களெல்லாம் தமிழில் இல்லை?"

அதன் பின் நடந்த கலந்துரையாடல் குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே போனவிதம் படங்கள் பார்வையாளர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்தியது. நன்றி சிவக் குமார், இந்தப் படங்களைக் கொண்டு வந்து எங்களுக்காகத் திரையிட்டமைக்கும், எங்களோடு கலந்துரையாடியமைக்கும்.

இவரது பணிகளைப் பற்றிய அதிக விபரங்களை அறிய: http://www.180creators.com/

ஒரு காலத்தில் அரசின் செய்தி ஊடகத் துறை செய்து வந்த விழிப்புணர்வு வேலை களை இன்று லீனா, சிவா போன்ற தனி நபர்கள் செய்து வருகிறார்கள். இவர்களது முயற்சிகளை ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை.

சுந்தர பாலசுப்பிரமணியம்

© TamilOnline.com