மாமழை
மூத்தவள்
இரண்டாமவள்
கடைச்செல்லம்
கூட நானும்.

மெளனத்தை உடைத்து
சொற்சோழி பரப்பியவள்
அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்!

எல்லாரும் ஒவ்வொரு விரலா
எல்லா விரலையும் நீட்டுங்க
தலைக்குமேல தூக்குங்க
வீடெல்லாம் மரம் முளைச்சாச்சு
ஆட்டுங்க ஆட்டுங்க வேகமா
இப்ப எல்லா மரமும் ஆடுது
வாங்க வெளியில ஓடிடலாம்!

பெருசா மழை வரப்போகுது
வாங்க வெளியில ஓடிடலாம்!
பேசாம இருக்க மாட்டீங்க?
மழை வருதாம் மழை!
சும்மா வீட்டுக்குள்ள ஓடிகிட்டு!
கூப்பாட்டு அம்மாவையும் மீறி
கதவுகள் திறபட்டுக் கிளம்பின
நாலிரு கழல்களும் விருட்டென.
அய்ய்ய் மழை! அய்ய்ய் மழை!
அம்மா நெசமாலுமே மழைம்மா!

அடித்த சாரலில் சட்டெனப் பூத்தது
அம்மாவின் முகத்தில் வெட்கப்பூ!!

பழமைபேசி,
கோலியர்வில், டெனஸி

© TamilOnline.com