மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2005 நவம்பர் 17 முதல் 28-ம் தேதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி அவர்கள் வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ரமோனுக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தந்திருந்தார்.

அம்மா தம்மைக் காணவந்த ஒவ்வொரு வரையும் பரிவோடு அரவணைத்து அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக வகுப்புகள், சேவை, கேள்வி-பதில், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அமிர்த வசனங்கள்:

"சிலர் 'இறைவனைக் கண்களால் காண முடியுமா? கண்களால் காணாத ஒன்றை நான் நம்ப மாட்டேன்' என்று சொல்வ துண்டு. மனிதனைப் பொறுத்தவரை அனைத்திற்கும் ஓர் எல்லை உண்டு. அவன் காண்பதற்கும், கேட்பதற்கும் எல்லையுண்டு. அதை அவன் சிந்திப்பதே இல்லை. மின்கம்பியில் செல்லும் மின்சாரத்தைக் காண முடியாது. அதனால் மின்சாரமே கிடையாது என்று சொல்ல முடியுமா? கம்பியைத் தொட்டால் ஷாக்கடிக்கும். அது அனுபவமாகும்."

"இறைவனைக் கண்களால் காண முடியாது. அவரே அனைத்திற்கும் காரண மாகத் திகழ்கிறார். மாங்கன்று முளைக்க வேண்டுமெனில் மாங்கொட்டை தேவை. அதுபோல் மாங் கொட்டை வர மாமரம் தேவை. இவை இரண்டும் தோன்ற மற்றொரு காரணம் தேவை. அந்தக் காரணமே இறைவன். இறைக் குணங்களை நாம் பெறுவது ஒன்றே அவரை அறிவதற்கான வழியாகும். அகங்காரத்தை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது இறைத்தன்மையை நம்மால் அனுபவிக்க முடியும்."

"நமது பக்தி, 'பார்ட் டைம்' பக்தியாகும். ஏதாவது தேவை ஏற்பட்டால் நாம் இறைவனை நினைப்போம். தேவைகள் தீர்ந்துவிட்டால் இறைவனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் விரும்பியது நடக்காமல் போய் விட்டாலோ நமது நம்பிக்கையை இழந்து விடுவோம். இதுவே நமது நிலை. ஆனால், எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் பிரஹலாதன் மனம் தடுமாறவில்லை. இடையூறுகள் அதிகரிக்க அதிகரிக்க அவன் இறைவனின் பாதங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டான். பிரஹலாதனின் வாழ்வும், பக்தி பாவமும் இன்றும் ஆயிரக்கணக்கானோரின் இதயங் களுக்கு ஒளி வழங்குகின்றன."

"இறைவன் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட தத்துவமாவார். அப்படிப்பட்ட இறைவனை அறியும் வழியையே ரிஷிகள் விக்கிரக ஆராதனையின் மூலமும், பிற ஆன்மிக சாதனைகளின் மூலமும் நமக்கு வழங்கி யுள்ளார்கள்."

சூறாவளியால் பாதிக்கப்பட்ட நியூ ஆர்லியன்ஸ் பகுதி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், டிசம்பர் 8-ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் மாதா அமிர்தா னந்தமயி மையம் (M.A.Center) 'புஷ்-கிளின்டன் காட்ரீனா நிதிக்கு' ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கியது. இந்த நிதிக்கு அதிகப்படியான நன்கொடை கொடுத்து உதவிய அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுள் மாதா அமிர்தானந்தமயி மையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com