பலாப்பழ அல்வா
தேவையான பொருட்கள்:
பலாப்பழத் துண்டுகள் - 2 கிண்ணம்
வெல்லம் (பொடித்தது) - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
முந்திரி - சிறிதளவு

செய்முறை:
நார் இல்லாத (மிதமாகப் பழுத்த) பலாச்சுளைகளை கொட்டை எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். அரைத்த விழுதை அடுப்பில் வைத்து, தண்ணீர் வற்றியவுடன் வெல்லக் கரைசலை விட்டுச் சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். அடியில் ஒட்டாமல் சுருள வந்தவுடன் மீதி நெய்யை ஊற்றிக் கிளறி இறக்கும்போது சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு அலங்கரிக்கவும். பலாப்பழ அல்வாவைக் காற்றுப் புகாமல் பத்திரப்படுத்தினால் நெடுநாள் கெடாமல் இருக்கும்.

குறிப்பு:
பலாப்பழம் கொழுப்புச்சத்து இல்லாதது. நார்ப்பொருள் கொண்டது. தாதுப் பொருட்கள், விடமின்கள் கொண்ட சத்தான பழவகை இது.

கோமதி ஜானகிராமன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com