டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்யநாதன்
"நீ என்ன செய்கிறாய்?" என்று அந்தப் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் கேட்டதற்கு "டென்னிஸ் விளையாடுகிறேன்" என்றார் நிருபமா. சிறிய பரிசோதனைக்குப்பின் மருத்துவர் மீண்டும் "நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். பதிலுக்கு நிருபமா மீண்டும் "டென்னிஸ் விளையாடுகிறேன்" என்றார். எரிச்சலுடன் அவர் "அதுதான் முன்னமேயே சொல்லிவிட்டாயே, வேறு என்னதான் செய்கிறாய்?" என்றார். நிருபமா மீண்டும் "டென்னிஸ் மட்டும்தான் விளையாடுகிறேன்" என்றாராம். அந்த மருத்துவர் குழம்பிப் போயிருக்கிறார். முழுநேர டென்னிஸ் பந்தய ஆட்டக்காரராய், அதுவும் ஒரு பெண் பங்கேற்பது, இந்தியாவில் நினைத்துப் பார்க்க இயலாத காலத்தில் பல சாதனைகளை இவர் செய்திருக்கிறார்.

இதுபோன்ற பல சுவையான சம்பவங்களுடன் தனது சுயசரிதையை 'The Moonballer' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தென்றலுக்காக மின்னஞ்சல் மூலம் அவருடன் உரையாடியதின் தொகுப்பு இது.

'த மூன்பாலர்'
The Moonballer என்று பெயரிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு என்கிறார். "டென்னிஸில் பந்தை உயரத் தூக்கி அடித்துப் பொறுமையாக விளையாடி எதிரியின் பொறுமையை இழக்கச் செய்வதற்கு மூன்பால் என்பார்கள். நான் பொழுதுபோக்காக முதலில் விளையாட ஆரம்பித்தபோது அப்படித்தான் தொடங்கினேன். அது ஆரம்பத்தில்தான். போட்டியில் இந்த முறையில் ஆடி வெல்வது என்பது இயலாத காரியம். ஒரு சாதாரண ஆட்டக்காரராகத்தான் என் டென்னிஸ் வாழ்க்கையைத் துவங்கினேன் என்பதை குறிப்பிடத்தான் புத்தகத்துக்கு இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். மேலும் இந்த தலைப்பு ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது" என்கிறார்.

தன் டென்னிஸ் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களையும், வெற்றிகளையும் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே இருந்ததாம். பல பத்திரிகைகளுக்கும் டென்னிஸ் பற்றி தொடர்ந்து எழுதிய அனுபவத்தால் துணிந்து இந்தப் புத்தகத்தை எழுதமுடிந்தது என்கிறார்.

பதினேழு வயதில் இந்தியாவில் தேசிய அளவிலான பல டென்னிஸ் போட்டிகளில் வென்றுவிட்டார். இந்தியாவில் அந்தச் சமயத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் கிடையாது. அடுத்த நிலை வாய்ப்புகளைத் தேடியபோது ஐரோப்பாவில் லக்சம்போர்க் நாட்டில் பயிற்சி செய்ய வாய்ப்புக் கிடைத்தது. பதினேழு வயதில் குறைந்த அளவு பணத்துடன் அயல்நாட்டில் தனியாக வாழ்ந்து பயிற்சிபெற்று, போட்டிகளில் கலந்துகொண்டு நடத்திய வாழ்க்கை மிகக் கடினமானது. அந்த அனுபவம் வாழ்க்கையில் எந்த சோதனையையும் எதிர்கொள்ளத் தயார் செய்தது என்கிறார். அந்த அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் சுவையாகப் பகிர்ந்திருக்கிறார்.



அமெரிக்க இந்தியர் டென்னிஸ் ஆர்வம்
நிருபமா வைத்யநாதன் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் டென்னிஸ் பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தங்கள் குழந்தைகள் டென்னிஸ் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார். சில சமயங்களில் ஆர்வக்கோளாறும் தடையாக இருக்கிறது என்கிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்றவருடன் ஒப்பிடுகிறார்கள். வளர்ச்சியும் வெற்றியும் விரைந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வாரம் ஒருமுறை பெறும் டென்னிஸ் பயிற்சி அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது என்கிறார்.

இந்தியப் பெற்றோர்களுக்கு படிப்புதான் முதலில், விளையாட்டு இரண்டாவதுதான். உண்மையிலேயே குழந்தைகள் மிகத் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களை முழுநேர டென்னிஸ் ஆட்டக்காரராக அனுமதிப்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார்.

அவர் பெற்றோர்களுக்குக் கூறும் அறிவுரை: பொறுமையாக இருங்கள். குழந்தைகளின் திறமை வளர வாய்ப்புக் கொடுங்கள். மிகவும் திறமை கொண்டவராக இருந்தால் அவரை முழுநேர ஆட்டக்காரர்களாக்குவது பற்றி நிதானமாகச் சிந்தித்து முடிவெடுங்கள் என்கிறார்.

அமெரிக்காவில் வாழும் பல இந்தியர்களுக்குப் பணம் ஒரு தடையில்லை. தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்க முடியும். United States Tennis Association (USTA) அமைப்பு வளர்ந்து வரும் திறமையான ஆட்டக்காரர்களுக்கு பல வசதிகளைச் செய்து தருகிறது. இருந்தாலும் இளவயதில் முழுநேர டென்னிஸ் ஆட்டக்காரராக முடிவெடுப்பது எளிதல்ல. பல கருத்துக்களை விவாதித்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.

வளர்ந்துவரும் ஆட்டக்காரர்கள் வெற்றி தோல்வியைப் பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது. மற்ற விளையாட்டுக்களைப் போல் டென்னிஸ் குழுவாக ஆடும் விளையாட்டல்ல. அதனால் ஆடுபவருக்கும், பெற்றோருக்கும் மன உளைச்சல் அதிகம் ஏற்படும். அதைச் சந்திக்கும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இந்த வகையில் உதவ "Parenting a Wimbledon Champion" என்ற தனது அடுத்த புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிட்டார்!

இந்தியாவின் டென்னிஸ்
இந்தியாவில் டென்னிஸின் வளர்ச்சி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்கிறார். அகில இந்திய டென்னிஸ் அமைப்பு இதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த அமைப்பில் இருக்கும் எவரும் டென்னிஸ் விளையாடியதில்லை. தன்னைப்போல் அனுபவமிக்க ஒருவர் இந்த அமைப்பிற்கு ஆலோசகராக இருந்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் டென்னிஸ் வளர வாய்ப்புண்டு என்ற எண்ணத்தில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெற்றதாகக் கூறுகிறார். இவருடைய உதவியை அகில இந்திய டென்னிஸ் அமைப்பு நிராகரித்து விட்டது என்று வருந்துகிறார்.

சானியா மிர்ஸா போன்ற திறமைசாலிகள் அவ்வப்போது தோன்றலாம். ஆனால் அதுமட்டும் இந்தியாவில் இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்கிறார். பள்ளிகளில் ஆரம்பித்து டென்னிஸ் விளையாட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். உள்ளூர், மாவட்டம், மாநிலம் என்று பல நிலைகளில் போட்டிகள் வைத்து திறமைசாலிகளை வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற திட்டமிட்ட அணுகுமுறைதான் டென்னிஸ் வளர உதவும் என்கிறார்.

இறுதியாக
'தி மூன்பாலர்' டென்னிஸைப்பற்றி மட்டும் எழுதப்பட்ட புத்தகமில்லை. சிறுவயதில் கோயம்பத்தூரில் வளர்ந்த அனுபவங்கள், ஐரோப்பாவில் தனியாகப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்கள், சைவ உணவைப் பற்றிய தனது அனுபவங்கள் என எல்லாத் தரப்பினரும் சுவைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை அமைத்திருக்கிறார். தென்றல் வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவர் வேண்டுகோள்.



நிருபமா வைத்யநாதன் பற்றி மேலும் விவரங்கள் கீழ்க்கண்ட இணைய தளங்களில் பெறலாம்:

விக்கிபீடியா: en.wikipedia.org/wiki/Nirupama_Sanjeev
டென்னிஸ் பயிற்சிப் பள்ளி: www.nirustennis.com
ஃபேஸ்புக்: facebook.com

சிவா சேஷப்பன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

*****


நிருபமாவின் சாதனைகள்:
1990 - இந்தியாவின் 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் முதலிடம் (13 வயதில்)
1991 முதல் 1996 வரை - இந்தியாவின் பெண்கள் டென்னிஸ் போட்டியில் முதலிடம்.
1991 முதல் 2001 வரை இந்தியப் பெண் டென்னிஸ் ஆட்டக்காரர்களில் முதலிடம் (நம்பர் 1)
Grand Slam போட்டிகளில் ஒரு சுற்றில் வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண் டென்னிஸ் ஆட்டக்காரர் (ஆஸ்திரேலியா ஓப்பன்-1998)
1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம்.
தாயான பின் 33 வயதில் இந்தியாவிற்காக ஆடிய முதல் பெண் டென்னிஸ் ஆட்டக்காரர் (2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்)

*****


'த மூன்பாலர்' வாங்க
The Moonballer நூலை அமேசான் (amazon.com) தளத்தில் வாங்கலாம். விரைவில் Kindle வடிவத்தில் மின்னூலாகக் கிடைக்கும். தமிழ்நாட்டு நகரங்களில் புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. அந்தப் பட்டியலை ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

© TamilOnline.com