தமிழ்மகன்
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரின் ஜெகந்நாதபுரத்தில் பிறந்த இவர், இயற்பியலில் இளமறிவியல் பட்டமும், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இளவயது முதலே இருந்த எழுத்தார்வம் சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும்போது சுடர்விட்டது. பல கவிதைகளை எழுதினார். அதனால் ஈர்க்கப்பட்ட இவரது பேராசிரியர் முகமது மேத்தா இவருக்குத் 'தமிழ்மகன்' என்ற புனைபெயரைச் சூட்டினார். அதுவே நிலைத்தது. "பூமிக்குப் புரிய வைப்போம்", "ஆறறிவு மரங்கள்" போன்ற கவிதைத் தொகுப்புகள் கல்லூரிக் காலகட்டத்திலேயே வெளியாகின. 1984ல்
இதயம் பேசுகிறது இதழும் டி.வி.எஸ். நிறுவனமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவர் எழுதிய "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" என்ற புதினம் முதல் பரிசு பெற்றது. பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி அதைப் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்திருந்தார். இதழாசிரியர் மணியனும் அதைப் பாராட்டி எழுதினார். தொடர்ந்து சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதினார். தன்னைப் பத்திரிகையாளராகவும் வளர்த்துக் கொண்டார். 'போலீஸ் செய்தி' புலனாய்வு இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் தமிழன் நாளிதழ், வண்ணத்திரை, குமுதம், குங்குமம், தினமணி ஆகியவற்றில் செய்தியாளர் முதல் முதுநிலை உதவியாசிரியர் வரை பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார். இவரது படைப்புகள் பிரபல இதழ்களிலும் இணைய தளங்களிலும் வெளியாகியுள்ளன.

தமிழ்மகன், எண்பதுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்', 'மீன்மலர்', 'எட்டாயிரம் தலைமுறை' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார். எழுத்தாளர் சுஜாதாவை நினைவுகூரும் வகையில் 'அமரர் சுஜாதா' என்ற தலைப்பில் எழுதிய அறிவியல் புனைகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. ஆங்கிலம், பஞ்சாபி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தேவையற்ற வர்ணனை, வாசகர்களைக் குழப்பும் ஜாலங்கள் ஏதுமில்லாமல் தெளிவாகக் கதை சொல்லும் பாணி இவருடையது. இவரது 'எட்டாயிரம் தலைமுறை' தொகுப்பு, 2008ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'விமானங்களை விழுங்கும் மர்மக்கடல்', 'வாக்குமூலம்' (தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் பற்றியது), 'சங்கர் முதல் ஷங்கர் வரை' (தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் பற்றியது), 'தில்லானா தில்லானா' (நடிகை மீனா கட்டுரைத் தொடர்), 'செல்லுலாய்ட் சித்திரங்கள்' (திரைப்படக் கலைஞர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்) போன்றவை இவரது குறிப்பிடத்தக்க கட்டுரை நூல்களாகும். 'திரைகளுக்குப் பின்னே' என்ற பெயரில் இவர் எழுதிய திரைப்பட அனுபவ நூல் மிகவும் சுவாரஸ்யமானது.

'சொல்லித் தந்த பூமி', 'ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்', 'மானுடப் பண்ணை', 'வெட்டுப்புலி', 'ஆண்பால் பெண்பால்', 'வனசாட்சி' போன்றவை இவர் எழுதிய புதினங்கள். ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம், 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'கனவுத் தொழிற்சாலை' வரிசையில் சினிமாவைப் பின்னணியைக் கொண்ட நாவல். மானுடப் பண்ணை குறித்து, "தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன. தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று" என்கிறார் பிரபஞ்சன். இந்நூலுக்கு 1994ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நாவல் விருது கிடைத்தது. இவர் எழுதிய 'வெட்டுப்புலி' நாவல் குறிப்பிடத் தக்கதாகும். சிறுத்தையை எதிர்த்த ஒரு வீரனின் வாழ்க்கையோடு நூற்றாண்டு கால அரசியலையும், சினிமாவையும் இணைத்து இது பேசுகின்றது. "தமிழ் மகனின் வெட்டுப்புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள் தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார். கடந்த 70 வருட காலமாக திராவிடக் கழகம் அதன் கிளைக் கழகங்களும் தமிழ் வாழ்க்கையில் பெரும்பங்கு கொண்டு நல்லதற்கோ கெடுதலுக்கோ விளைவுகளுக்குத் தமிழ் நாட்டை இரையாக்கிக் கொண்டிருப்பதை உங்களைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. தம் நாவல்களில்/சிறுகதைகளில் ஒருவேளை பேசுகிறார்கள்தான். ஆனால் அவை பொருட்படுத்தத் தக்கதல்ல. நீங்கள்தான் முதல் தடவையாக ஒரு இலக்கிய கவனம் பெறவேண்டிய எழுத்தைத் தந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை" என்கிறார் பிரபல விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இந்நாவலுக்கு, ஜெயந்தன் அறக்கட்டளை விருது, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது போன்றவை கிடைத்துள்ளன.

ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல் எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதை எள்ளல் நடையில் சொல்லியிருக்கிறார் தமிழ்மகன் தனது 'ஆண்பால் பெண்பால்' நாவலில். நாவலில் ஒரு பாத்திரமாக எம்ஜிஆரின் ஆவியும் வருகிறது. ஆவி அழுவது சிரிப்பது, வசனம் பேசுவது, உதவ நினைப்பது என அந்தப் பாத்திரத்தை உயிர்ப்போடு உலவ விட்டிருக்கிறார். தமிழ்மகனின் மற்றுமொரு முக்கிய நாவல் வனசாட்சி. இது இலங்கை மலையகத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. இந்நாவலுக்கு நீலகிரியைச் சேர்ந்த 'மலைச்சொல்' இலக்கிய அமைப்பின் விருது கிடைத்துள்ளது. திரைத்துறை சார்ந்த பல கட்டுரைகளை எழுதிவருவதுடன் ரசிகர் மன்றம், உள்ளக்கடத்தல் போன்ற திரைப்படங்களுக்கும் உரையாடல்கள் எழுதி உள்ளார். பல்வேறு புனைபெயர்களில் இதழ்களிலும், இணைய தளங்களிலும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய புத்தக அறிமுகங்கள் குறிப்பிடத்தக்கன. www.tamilmagan.in என்பது இவரது வலையகம்.

1900 முதல் 2010 வரை தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியிருக்கும் வ.வே.சு., பாரதியார், அ. மாதவையா முதல் இன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரையிலான 11 இலக்கியவாதிகளின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை விகடன் பிரசுரத்திற்காகத் தொகுத்திருக்கிறார். தற்போது விகடன் குழுமத்தின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வரும் தமிழ்மகன். மனைவி திலகவதி, மகன் மாக்சிம், மகள் அஞ்சலியுடன் சென்னையில் வசிக்கிறார். தற்காலத் தமிழ்ப் படைப்புலகில் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்களில் தமிழ்மகன் முக்கியமானவர்.

அரவிந்த்

© TamilOnline.com