தென்றல் பேசுகிறது...
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு மூலகாரணமாக அமைந்தது அந்த மண்ணில் வந்து குடியேறிய அயல்நாட்டவரின் அறிவும், திறனும், உழைப்பும்தாம் என்பது உலகறிந்த உண்மை. விளைந்து நிற்கும் மக்காச்சோள வயலில் அறுவடை செய்யவானாலும் சரி, சிலிகான் பள்ளத்தாக்கில் புதியன படைக்கவானாலும் சரி ஒரு சீனரோ, இந்தியரோ, மெக்சிகனோ இல்லாமல் நடவாது. அப்படியிருக்க, "அமெரிக்கக் குடிவரவுக் கொள்கை சிதைந்து கிடைக்கிறது" என்று எல்லோரும் சொல்வது வருந்தத்தக்க நிலை. இதைச் சரிக்கட்டவே 'குடிவரவு சீர்திருத்த மசோதா'வை டெமாக்ரடிக் கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். செனட்டில் இருதரப்பு ஆதரவோடு நிறைவேறிய இந்த மசோதாவை அரசியல் லாபம் கருதி பிரதிநிதிகள் சபையில் முட்டுக்கடை போட்டு நிறுத்தி வைத்திருக்கிறது ரிபப்ளிகன் கட்சி. முதல் வரியில் 'அமெரிக்காவின் அசுர வளர்ச்சி' என்று தொடங்கினோம். பிரதிநிதி சபை ரிபப்ளிகன்களின் செயலால் 'வளர்ச்சி' என்பதே கேள்விக்குறியாகிப் போய்விட்டது. முதலில் அரசின் செலவினத்துக்குத் தடை கொணர்ந்து, அரசு எந்திரத்தையே முடக்கிவைத்து, உலக நாடுகளிடையே அமெரிக்காவின் பெருமிதத்தைத் தரைமட்டத்துக்குக் கொண்டு வந்தனர். டாலரின் மதிப்பைச் சரிய வைத்தனர். சொந்த மக்களிடையே நம்பிக்கையைக் குறைத்தனர். வளர்ச்சியைப் பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளினர். பலரை வேலையை அல்லது சம்பளத்தை இழக்க வைத்தனர். பிரதிநிதிகள் சபை தமது கட்டுப்பாட்டில் இருப்பதால் இப்படி ஆட்டம்போடும் முதுபெரும் கட்சி (G.O.P.), தேர்தல் வரும், மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை போலும்! ஏன், அதற்கு நிதி வழங்கும் சிலரே கூட கொடையை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டி இருப்பதைக் கூடக் கேட்கவில்லை போலும்! தாம் போட்ட ஆட்டத்தைத் தேர்தல் காலத்தில் அவர்கள் மறக்கலாம், மக்கள் மறக்க மாட்டார்கள்.

*****


கேஸொலீன் விலைக் குறைவு மக்கள் மனதில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பேட்டரிக் கார்கள், கலப்பின (hybrid) கார்கள் போன்றவை, இணையவழி வணிகப் பயன்பாடு, சமூக ஊடகங்களின் (Social Media) வளர்ச்சி என்று இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். இதில் மற்றொரு முக்கியமான காரணம் உள்நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்ததும் ஆகும். காற்றின் ஆற்றல், சூரிய ஆற்றல், அலைகளின் ஆற்றல், அணுவாற்றல் என்று இன்னும் பலவகை ஊற்றங்களையும் பயன்படுத்துவதை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம். இவை வற்றாத ஊற்றங்கள். புதைபடிவ எரிம ஊற்றங்களோ (Fossil Fuel Sources) காலப்போக்கில் காணாமற் போய்விடுபவை. ஒரே ஒருவர் செல்லப் பெரிய கார் ஒன்றைப் பயன்படுத்தாமல் அதைச் சேர்ந்து பகிர்தல், கேஸொலீன் மொடாக்குடியர்களைப் (gas guzzlers) பயன்படுத்தாமை போன்ற சில நல்ல நெறிமுறைகளைப் பயன்படுத்தினால் சூழல் மாசுபடுவது குறையும், பொருள் வீணாகாது தவிர்க்கப்படும், அமெரிக்காவின் இறக்குமதிச் செலவு கட்டுப்படும். இவையெல்லாம் தனிமனிதனின், வீட்டின், நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியமானவை.

*****


தாயான பின்னரும் பன்னாட்டு டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டவரும், இந்தியாவின் முன்னோடி டென்னிஸ் வீராங்கனையுமான நிருபமா வைத்யநாதனிடம் அவர் எழுதிய 'த மூன்பாலர்ஸ்' மற்றும் அவரது ஆர்வங்கள் குறித்த உரையாடலை இந்த இதழில் படிக்கலாம். மற்றொரு நேர்காணலின் வைரமணியும் ஒரு முன்னோடிப் பெண்மணிதான். ஆண்கள்மட்டுமே செய்யும் 'வெட்டியான்' (இதற்குப் பெண்பாற் சொல்கூடக் கிடையாது!) பணியை 'விரும்பிச்' செய்வதாகக் கூறுகிறார். அவரை மயான பூமியில் சந்தித்தவர் 'ஈரம் மகி'. சக்கைப் பொடிமாஸ் சமைக்கக் கற்றுக்கொண்டு, அப்படியே எழுத்தாளர் தமிழ்மகனைப் பற்றி அறியலாம்; முன்னோடியான ரா.ராகவையங்காரின் அரிய தமிழ்ப்பணிகளைப் பார்த்து வியக்கலாம். சிறுகதைகளும் சிறப்பானவைதான். அதிலும் குழந்தை தின மாதத்தில் குழந்தைகளுக்கான சிறப்புச் சிறுகதையும் உண்டு. மொத்தத்தில் தீபாவளிப் பண்டிகையை ஒளிமயமாக்கும் இதழ் ஒன்றை உங்கள் கரத்தில் சமர்ப்பிக்கிறோம்.

வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு

நவம்பர் 2013

© TamilOnline.com