அஸ்வினி அயனம் வழங்கிய நாட்டியக் கண்ணாடி
டிசம்பர் 11, 2005 அன்று சன்னிவேல் நிகழ்கலைகள் மையத்தில் அஸ்வினி அயனம் 'நாட்டிய தர்பணம்' என்ற நிகழ்ச்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் நாட்டிய தர்பணத்தை (தர்பணம் என்றால் கண்ணாடி என்று பொருள்) அடிப்படையாக கொண்ட பந்தநல்லூர் பாணியும், டாக்டர். பத்மா சுப்பிரமணியம் அவர்கள் உருவாக்கிய பரதநிருத்ய பாணியும் கையாளப்பட்டன.

குரு நிர்மலா மாதவாவிடம் ஐந்து வருடங்களும், இந்தியாவில் குரு சுந்தரி சந்தானத்திடம் மூன்று மாதங்கள் பரத நிருத்யத்தையும் அஸ்வினி பயின்றுள்ளார். குறுகிய காலமே பரதநிருத்யத்தைப் பயின்றாலும் இவர் இரண்டு பாணிகளையும் அழகாக ஆடி அவற்றின் வேறுபாடுகளை அருமையாக உணர்த்தினார். நிகழ்ச்சியை நடத்தித் தந்த பூஜா தேஷ்பாண்டே நாட்டிய சாஸ்திரம் பிறந்த விதம் பற்றி முதலில் விளக்கினார்.

ஸ்வர சங்கமம் என்ற பரதநிருத்ய பாணியிலான நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து 'ஜெயஸ்ரீ வைகுண்ட முகுந்தா' என்ற மிஸ்ர திலாங் ராகப் பாடலுக்கும், 'சின்னஞ்சிறு பெண் போலே' என்ற சிந்துபைரவிப் பாடலுக்கும் அவர் ஆடிய விதம் சபையோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

தொடர்ந்த நாட்டகுறிஞ்சியில் அமைந்த வர்ணம் இவரது குரு நிர்மலா மாதவாவின் படைப்பாகும். பந்தநல்லூர் பாணியில் தாய், தந்தை, மார்கண்டேயர், சிவபெருமான், யமன் என்ற பலரது உணர்வுகளைத் தனது அற்புதமான அபிநயங்களால் சித்தரித்த விதம் தற் போதுள்ள சிறந்த நடனக் கலைஞர்களுள் இவரும் ஒருவர் என்று கூறும்படி இருந்தது.

சிறிய இடைவேளைக்குப் பின்னர் பெஹாக் இராகத்திலமைந்த திருப்பாவைப் பாடலுக்கு நேர்த்தியாக ஆடினார். அடுத்து வந்தது பைரவியில் ராகம் தானம் பல்லவி. உடலின் பலபாகங்களில் வீற்றிருக்கும் கடவுளர்களைப்
பற்றி ராகத்திலும் விஷ்ணு வின் பல அவதாரங்களைப்பற்றித் தானத்திலும் வாமனரைப் பற்றிப் பல்லவியிலும் கூறுவதாக இது அமைந்தது.

அடுத்ததாகச் சுந்தரி சந்தானத்தின் அமைப்பில் ஜெயதேவரின் யமுனகல்யாணி இராக அஷ்டபதி 'சந்தான சர்சித்தா' என்ற பாடலுக்கு இவர் அபிநயித்த விதம், பகவான் கண்ணனும் இராதையும் நேரிலேயே வந்ததுபோல் இருந்தது. கமாஸ் இராகத்தில் அமைந்த தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் இவரின் கால்களின் இலாவகம் பிரமிக்க வைத்தது.

ஆங்கிலத்தில்: மனிஷா முர்குடே
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com