அரங்கேற்றம்: அஷ்மிதா, ஹர்ஷினி
ஆகஸ்ட் 3, 2013 அன்று சாரடோகாவில் உள்ள மெகாஃபி அரங்கில் குரு விஷால் ரமணியின் மாணவிகளான செல்வி அஷ்மிதா ராஜ்குமார், செல்வி ஹர்ஷினி கோரிஜாலா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நடராஜ மூர்த்தியையும் குருவையும் வேண்டி ஹம்சநாத ராகப் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினர். தொடர்ந்து நாட்டை ராகத்தில் தும்பிக்கையானைத் தொழுது ஆடினர். தொடர்ந்து பைரவி ஜதீஸ்வரத்தை மிகச் சிறப்பாக ஆடினர். பாபநாசம் சிவனின் ஸ்ரீரஞ்சனி வர்ணத்திற்கு அபிநயத்துடன் ஆடியவிதம் சபையோரைக் கவர்ந்தது.

அடுத்து, போட்டி போட்டுக் கொண்டு ஆடிய ராகமாலிகை தசாவதார நடனம் சபையோரைப் பரவசமடையச் செய்தது. பாரதியின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்கு பிருந்தாவனத்தில் கண்ணன் நடத்திய விளையாட்டுக்களைக் கண்முன் காட்டுவதுபோன்று அஷ்மிதா அருமையான முகபாவங்களுடன் ஆடியது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. நாதநாமக்ரியாவில் 'நடனம் ஆடினார்' பாடலுக்குக் கயிலைநாதரின் நர்த்தனத்தைச் சிறப்பாக ஆடினார் ஹர்ஷினி. மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் ரேவதி ராகத் தில்லானாவிற்கு அபிநயம் தாளக்கட்டுடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருவரும் நடனமாடியது சிறப்பு. நட்டுவாங்கம்: வாசுதேவன் கேசவுலு; இசை: கௌசிக் சம்பகேசன்; மிருதங்கம்: ஸ்ரீராம்சங்கர் பாபு; வயலின்: விஜயராகவன் ஆகிய கலைஞர்கள் அரங்கேற்றத்துக்குச் சிறப்பாகப் பங்காற்றினர். அஷ்மிதாவின் பெற்றோர் ராஜ்குமார்-லக்ஷ்மியும், ஹர்ஷினியின் பெற்றோர் ராகவேந்திரா-சுதாவும் ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்திருந்தனர்.

முத்து<.b>,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com