பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்'
ஆகஸ்ட் 31, 2013 அன்று 'Access Braille' தொண்டு நிறுவனம் 'சூர்தாஸ்' என்ற நாட்டிய நாடகத்தை மில்பிடாஸ் (கலிஃபோர்னியா) ஷிர்டி சாய் மந்திரில் நடத்தியது. திருமதி. சுதா ராஜகோபாலன் சூர்தாஸின் சரித்திரத்தையும் அவரது கிருஷ்ண பக்தியையும், தமது ஹரிகதையாகக் கூறினார். இதில் சூர்தாஸ், அவரது குரு ஸ்ரீ வல்லபாசார்யார் ஆகியோரின் பாடல்களைப் பாடியது வெகு சிறப்பு.

திருமதி. சுதா கிருஷ்ணன் (இயக்குனர், நிருத்யாலயாதர்பன்), திருமதி யாமினி வெங்கடராமன், திருமதி. ஹரிப்ரியா கோவிந்த் மற்றும் நிகிதா சந்திரசேகர் (புஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமி) ஆகியோர் இதில் பரதநாட்டிய விருந்து வழங்கினர்.

குச்சுபுடி நடனத்தை மாதுரி கிஷோர் குச்சுபுடி நாட்டியப் பள்ளி மாணவிகள் ஷ்ரவ்யா செருகுறி, ஆஹ்லாதினி வீரினா மற்றும் காஞ்சனா அல்லங்கி வழங்கினர். சந்தன் யூத் டான்ஸ் கம்பெனி மாணவியர் மயூகா சருக்கை மற்றும் ஆத்மிகா சருக்கை கதக் பாணியில் ஆடினர். திருமதி. நிஹாரிகா மொஹந்தியின் மாணவியர் திவ்யா சாஹா மற்றும் அபர்ணா தாஸ்குப்தா ஒடிசி நாட்டியம் ஆடினர்.

காயத்ரி சத்யா, உஷா பிரபு, ஸ்வாதி ஐயங்கார், சோன்யா ரகோத்தமன், கீதா ஷங்கர், விக்ரம் பாரதி மற்றும் பிரஷாந்த் ஆத்ரேயன் ஆகியோர் வாய்ப்பாட்டுப் பாடினர். கீதா ஷங்கர் (வீணை), ஆத்மிகா சருக்கை (புல்லாங்குழல்), ஸ்வாதி ஐயங்கார் (ஹார்மோனியம்), சாய் அனுராக் (தபலா), சேகர் சருக்கை,சாய் கிருஷ்ணன், விக்ரம் பாரதி (மிருதங்கம்) ஆகியோரின் பக்கவாத்யம் அருமை.

நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய நிதி, அக்சஸ் ப்ரெயிலி, கண் பார்வையிழந்த பலநாட்டு மாணவர்களுக்குத் தக்க கல்விப் பயிற்சி தடையின்றித் தர உதவுகிறது. இந்தச் சேவைகளைத் தன்னார்வத் தொண்டூழியர்களே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரங்களுக்கு: www.accessbraille.org
மின்னஞ்சல்: info@accessbraille.org

© TamilOnline.com