ஜனவரி 2006: வாசகர் கடிதம்
நான் தென்றலின் பழைய பிரதிகளையும் படித்தேன். ஆங்கிலக் கலப்படமின்றித் தாய் மொழியில் தரமான பத்திரிகையாக இங்குள்ள தமிழர்களின் இல்லத்தில் தவழ்ந்து வருகிறது தென்றல். தமிழன்னைக்குத் தாங்கள் செய்யும் அரிய தொண்டினைக் கண்டு பரவசமடைந்தேன்.

இங்குள்ள தமிழ் மன்றங்களைப் பற்றியும் தமிழகத்தில் உள்ள கோயில்களின் அமைப்பு, வரலாறு, முக்கியத்துவம் பற்றியும் மாதாமாதம் எழுதி வருகிறீர்கள். சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமன்றி அவர்களின் சிறப்பினையும் எழுதிவருகிறீர்கள்.

விழாக்காலச் சிறப்பினை மாயாபஜார் பகுதியிலும், ஆசிரியர் பக்கத்தில் கறுப்பு ஞாயிறு போன்றவற்றைப் பற்றியும் எழுதிப் புரிய வைக்கும் அழகே அழகு. தமிழ் வாசகர்கள் நலமாக வாழ 'நலம் வாழ' பகுதிகள், தமிழக அரசியல் நிகழ்வுகள், ஆபாசம் இல்லாத சினிமாச் செய்திகளைக் கொண்ட தென்றல் சிறப்பாக உள்ளது.

விரும்புவோர் தமிழ் கற்றுக் கொள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்துடன் நிற்காமல் இந்த ஆண்டில் உயிர்மெய்யெழுத்துக்களையும் தர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

மாதவன்
சான் ரமோன், கலி.

*****


தென்றல் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அடுத்த இதழ் எப்போது வரும் என்று வாசகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்குச் சுவாரஸ்யமாகவும், நறுக்கென்றும் எல்லாவற்றையும் தரும் தென்றல் ஐந்தாண்டுகளைக் கண்டதில் வியப்பில்லை. உங்கள் குழுவை அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

டிசம்பர் 2005 இதழில் 'கைலாய மலையும் மானசரோவரும்', வெங்கடராகவன் நேர்காணல் ஆகியவை மிக நன்றாக இருந்தன. தனது கடின உழைப்பினால் முன்னேறிய வெங்கடராகவன் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி.

கண்ணன் R
மில்பிடாஸ், கலி.

*****


மதுசூதனன் அவர்கள் திருவாவடுதுறை ராஜரத்தினத்தின் வாழ்க்கையை வெகு அழகாக எழுதியிருந்தார். நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெற்ற அவர் ஒரு ராஜகுமாரனைப் போலவே தோற்றமளிப்பார். ஷண்முகப்பிரியா, தோடி, கல்யாணி இவைகள் அவருக்குப் பிடித்தவை. நாதஸ்வர வாத்தியத்தை மேடையில் ஏற்றியது பிள்ளை அவர்கள்தாம். மிக அழகாக அனுபவித்து வாசிப்பார். தாளம், ஸ்ருதி கொஞ்சம்கூட தப்பக்கூடாது. அவர் வாசிக்கும் பொழுது யாரும் குறுக்கிட்டால் கோபம் வந்துவிடும். 'சங்கீதத்தை யாராலும் அடக்கி வாசிக்க முடியாது' என அடிக்கடி கூறுவார்.

திருவாடுதுறைக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை இரண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் பிள்ளையவர்கள் வருவது முன்பே தெரியும். அவர் இறங்கிய பிறகுதான் ரயில் புறப்படும். அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை உண்டு. எவரிடமும் அன்புடன் மரியாதையாகப் பேசுவார்.

அட்லாண்டா ராஜன்

*****


என் குடும்பத்தினர் அனைவரும் (என் தாயார், தந்தையார், மனைவி மற்றும் அமெரிக்காவிலேயே பிறந்த எனது 13 மற்றும் 18 வயதான குழந்தைகள்) எல்லோரும் குறுக்கெழுத்துப் புதிரை விடுவிக்க மண்டையை உடைத்துக் கொள்கிறோம். உங்களுக்கு எமது பாராட்டுகள். இந்தக் குளிர்கால மாலைப் பொழுதுகளில் எங்களை அது மிகச் சுறுசுறுப்பாக வைக்கிறது. புத்திசாலித்தனமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது. தமிழின் செழுமை புதுப்புது வகையில் புதிர்களை உருவாக்க உங்களுக்கு உதவி செய்கிறது. எங்கள் ஊகத்திற்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.

மிகவும் சுவையான புதிய குறுக்கெழுத்துப் போட்டிகளை எங்களுக்குத் தரும் வாஞ்சிநாதன் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.

சந்திர சேகர்
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி

*****


நான் டெட்ராய்ட்டில் உள்ள என் மகன் வீட்டுக்கு வந்துள்ளேன். இங்கு எனக்குத் தென்றல் தேவாமிர்தமாக உள்ளது. கடந்த ஆண்டு புத்தகங்களையும் படித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சி.

விஜயசூரியா கா.
ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன்.

*****


வரவரத் தென்றல் குமுதம், விகடன் சாயலில் செல்கிறது. வந்து முப்பது நிமிடங்களில் புத்தகத்தைப் படித்து முடிக்க முடிகிறது. கதைகள் வெகு சுமார். கட்டுரைகளில் ஆழம் இல்லை. நேர்காணலின் கேள்விகள் பட்டும் படாமலும். டி.என்.ராஜரத்தினம் பற்றிய கட்டுரையில் உப்பு சப்பு இல்லை. அவருடைய வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்து, பல நாயனங்களை வெறும் அட்டவணைப்படுத்திவிட்டு, அவருடைய எழுத்துகள்/கருத்துக்களைப் பற்றிச் சற்றே சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. ஒரு மேதையைப் பற்றிய கட்டுரை இப்படி ஆகி இருக்க வேண்டாம். அதென்ன குஷ்பு பேசிய பேச்சுக்கு எதிராக ஒரு எண்ணம்? கடல் கடந்து வந்தும் நம் எதிர்பார்ப்புகள் மாறவில்லையே?

ஆசிரியர், தொகுப்பாளர் குழு சிறிதாக இருப்பதால், எண்ணங்களும் ஒரு குறுகிய வட்டத்திலேயே இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

நாராயணன்,
தென்றல் இதழ் வலைப்பதிவில்
thendralmag.blogspot.com

*****

© TamilOnline.com