கா.ஸ்ரீ.ஸ்ரீ.
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. த.நா. குமாரசாமி, த.நா. சேநாபதி, பின்னர் ரா.கி. ரங்கராஜன், சிவன், சுசீலா கனகதுர்கா, கௌரி கிருபாந்தன் எனப் பலர் இதன் வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளனர். இவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன். இவர், உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் என்ற ஊரில் டிசம்பர் 15, 1913 அன்று, ஸ்ரீரங்காச்சாரியாருக்கும் ருக்மணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை சம்ஸ்கிருத பண்டிதர். வேதம், இலக்கணம் கற்றவர். தெலுங்கு, ஹிந்தி, வங்காள மொழிகள் அறிந்தவர். தந்தையிடம் இருந்து வேத, சம்ஸ்கிருத இலக்கண, இலக்கியங்களையும், புராண, இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. கூடவே தமிழும், மராத்தியும் பயின்றார். திடீரென ஏற்பட்ட உடலநலக்குறைவால் தாயுடன் தமிழ்நாட்டிற்கு வந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ., காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் சேர்ந்தார். மொழிப்பாடங்களில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெற்றார். பதினேழாம் வயதில் லட்சுமி அம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது.

குடும்பச் சூழலால் வேலை தேடிச் சென்னைக்கு வந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்குத் தமிழ், ஹிந்தி எனப் பன்மொழிகள் தெரிந்திருந்ததால் ஹிந்தி பிரச்சார சபா அச்சகத்தில் பிழை திருத்துநர் வேலை கிடைத்தது. எழுத்தார்வத்தின் காரணமாக அச்சகத்தில் பணியாற்றியபடியே எழுத்துப் பணியைத் தொடங்கினார். 1940ல் தினமணியில் வெளியான 'சகோரமும் சாதகமும்' என்பதுதான் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதை. அதனை புதுமைப்பித்தன் வெளியிட்டு ஊக்குவித்தார். வி.எஸ். காண்டேகர் மராத்தியில் எழுதியிருந்த சிறுகதையை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழில் பெயர்த்திருந்தார். நல்ல வரவேற்பு கிடைத்தது. தனிப்பட்ட ஆர்வத்தால் கன்னட, மலையாள மொழிகளையும் கற்றுக் கொண்டார். ஓய்வு நேரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக ஹிந்தி கற்றுக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டார்.

காந்திஜி அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னை வந்தபோது அவர் மீதான உ..வே.சா.வின் தமிழ் வரவேற்புரையை ஹிந்தியில் மொழி பெயர்த்து வாசிக்கும் பணி கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்குக் கிடைத்தது. அதன்மூலம் உ.வே.சா., கி.வா.ஜ. போன்ற ஜாம்பவான்களின் அறிமுகம் கிடைத்தது. கி.வா.ஜ.வால் கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கொள்ளப் பட்டார். அவர் கலைமகளில் எழுதிய முதல் சிறுகதை 'மழையிடையே மின்னல்' பரவலான வாசக கவனத்தைப் பெற்றது. பின்னர் அது 'நீலமாளிகை' என்ற முதல் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றது. அதற்கு முன்னுரை அளித்த புதுமைப்பித்தன், "இவருடைய சொந்தக் கற்பனைகள் எல்லாம் முக்கால்வாசிப் பேர் திரை போட்டு மறைத்து வைக்க வேண்டியவை என்று சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி இவர் தெம்பு குன்றாமல், கை தழுதழுக்காமல் எழுதக் கூடியவர் என்பதை இவர் கதைகளே சொல்லும்" என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கலைமகளில் தன் சிறுகதை, நாவல்களையும், காண்டேகரின் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள், நாவல்களையும் எழுதினார். காண்டேகரின் அனுமதியைப் பெற்ற பின்பே அவரது நூல்களை மொழிபெயர்த்தார். வேறு பலர் அணுகிய போதும் காண்டேகர், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைத் தவிர வேறு யாருக்கும் தமிழில் மொழி பெயர்க்க அனுமதி தரவில்லை. 'வெறும் கோவில்', 'சுகம் எங்கே', 'கருகிய மொட்டு', 'எரி நட்சத்திரம்', 'இரு துருவங்கள்', 'கிரௌஞ்ச வதம்' போன்றவை கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்குப் புகழ்தேடித் தந்தன. மஞ்சரியில் அவர் எழுதியவையும் வாசக வரவேற்பைப் பெற்றன.

கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது.
மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாதவாறு மூலப் படைப்பிற்கு மிக நெருக்கமான மொழியில் எளிமையாக அவர் படைப்புகள் இருந்தன. அன்பு, காதல், மனிதநேயம், சமூக நல்லெண்ணம் போன்றவை கொண்டிருந்தன. அறிஞர் அண்ணா கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். "தமிழ்நாட்டுக் காண்டேகர்" என்று கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைப் பாராட்டி கௌரவித்தார். காண்டேகர் எழுத்துக்களின் தாக்கம் மு.வ., அண்ணா படைப்புகளில் உண்டு. டாக்டர் மு.வ., "மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றாதவாறு, காண்டேகருக்கும் படிப்பவனுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லாதவாறு கா.ஸ்ரீ.ஸ்ரீ. செய்திருக்கிறார். அதுதான் சிறந்த மொழிபெயர்ப்பின் தன்மையும் கூட. இவரது கதைகள் வாழ்க்கையை ஒட்டியவை; எங்கும் நிகழாதவற்றையும், நிகழ முடியாதவற்றையும் எழுதிப் படிப்பவருக்கு போதை ஊட்டி மயக்கும் நோக்கம் ஆசிரியருக்கு இல்லை" என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். "காண்டேகரின் படைப்புகளை தமிழில் இயல்பு கெடாதவாறு தந்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களையே சாரும்" என்று புகழ்ந்துரைக்கிறது கலைமகள். "கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபயர்ப்புகளால் எனக்குத் தற்கால இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது" என்கிறார் கலைஞர் மு. கருணாநிதி. "மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழிபெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட" என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார் வி.எஸ். காண்டேகர்.

மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த படைப்பாளியாகவும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. திகழ்ந்தார். இவரது முதல் நாவல், 'காந்தம்' கலைமகள் பிரசுரமாக வந்து வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'காற்றாடி' என்ற நாவலும், 'நீல மாளிகை', 'அன்னபூரணி' போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன. குமுதத்தின் முதல் இதழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் சிறுகதை வெளியானது. கூடவே காண்டேகரின் 'வெண்முகில்' நாவல் தொடரும் வெளியாகி சாதாரண வாசகர்களுக்கும் காண்டேகர் மற்றும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பற்றிய அறிமுகத்தைத் தந்தது. 'மனோரஞ்சிதம்', 'கண்ணீர்', 'யயாதி', 'அமுதக்கொடி', 'சைவ தத்துவம்', 'கூட்டுக்கு வெளியே', 'அரும்பு', 'புயலும் படகும்', 'இரு மனம்', 'ஆஸ்திகள்' உள்ளிட்ட படைப்புகள் அவருக்கு நற்பெயர் தேடிக்கொடுத்தன.

தன் மொழிபெயர்ப்பு பற்றி கா.ஸ்ரீ.ஸ்ரீ., "சென்னைக்கு வந்தபிறகு மராட்டிய இலக்கிய உலகில் சிறந்து விளங்கும் பல நூல்களைப் படித்தேன். மராட்டிய இலக்கியம் எவ்வளவு ஆழ்ந்தது என்பதை அறிந்தேன். வி.எஸ். காண்டேகரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க முடிவுசெய்து அவரை அணுகி அனுமதி பெற்றேன். தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் காண்டேகரின் நாவல்கள் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அளவுக்கு மற்ற மொழிகளில் இல்லை. காண்டேகரைப் போல், தமிழில் மட்டுமல்ல; வேறு எந்த இந்திய மொழியிலும் எந்த ஆசிரியரும் இல்லை. பரந்த படிப்பு, அனுபவம், ஆழ்ந்த புலமை, உயர்ந்த மணிமொழிகள், புதிய உத்திகள், பழமொழிகளைத் தொகுத்துக் கொடுத்தல் ஆகியவை காண்டேகரின் தனிச்சிறப்பு" என்கிறார்.

மாரத்தியிலிருந்து தமிழுக்கு மட்டுமல்லாது தமிழிலிருந்து சிறந்த ஆக்கங்களையும் பிற மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார் கா.ஸ்ரீ. ஸ்ரீ. பாரதியாரின் 'தராசு' கட்டுரைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். அகிலன், ஞானபீடப் பரிசு பெற்றபோது அவரைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை மராட்டிய இதழ்களில் எழுதியிருக்கிறார். 'இந்தியச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் மாதவய்யா, புதுமைப்பித்தன், கல்கி, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்பிரமணியன் வரையிலான தேர்ந்தெடுத்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்றையும் மராத்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். 'சுதர்ஸனம்' மாத இதழில் ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். காண்டேகரின் 13 நாவல்களையும், 150 சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பதினைந்து நாவல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் போன்றவற்றை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தந்திருக்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழில் பெயர்த்த 'யயாதி'க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு கிடைத்தது.

இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்டு வெற்றி பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் படைப்புகளை கலைமகள் பிரசுரம், அல்லயன்ஸ் பதிப்பகம், அலமு நிலையம் போன்றவை வெளியிட்டுள்ளன. குறிப்பாக அல்லயன்ஸ் பதிப்பகம் இன்றளவும் லாப நோக்கற்று அவரது நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஜூலை 28, 1999 அன்று நாசிக்கில், 86ம் வயதில் காலமானார். இவ்வாண்டு அவரது நூற்றாண்டு. இதனை அவரது பெயரிலான Kaa.Sri.Sri. Charitable Trust அமைப்பினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com