அரங்கேற்றம்: சௌந்தர்யா ஜெயராமன்
ஜூலை 7, 2013 அன்று திருமதி. தீபா மகாதேவன் அவர்களின் சிஷ்யை செல்வி. சௌந்தர்யா ஜெயராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃப்ரீமான்டிலுள்ள ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது. கனகாங்கி ராகத்தில் "ந்ருத்த கணபதி" என்ற பாடலுடன் நடனத்தைத் துவக்கினார். அடுத்து, தண்டாயுதபாணி பிள்ளை இயற்றிய "உலகம் புகழும்" என்கிற பாடலில் பரதத்தைச் சுத்தமான அடவுகளுடன் நேர்த்தியாக ஆடினார். திரு.மதுரை ஆர்.முரளிதரன் இயற்றிய "கானம் இசைத்து நின்றாரோ!" என்கிற பாடலில் முகபாவங்களை மாற்றி, மாற்றிக் காண்பித்து மெய்சிலிர்க்கச் செய்தார். அதிலும் சகுனியின் தோற்றத்தை அனாயாசமாக அபிநயித்தார். கம்பீர நாட்டையில் "அம்மா ஆனந்ததாயினி" பாடலில் "ஆக்கல், காத்தல், அழித்தல் அனைத்தும் இயக்கம் அம்பிகையே" என்று நவரசத்தையும் வெளிப்படுத்துகையில் கைதட்டல் தொடர்ந்து ஒலித்தது. அடுத்து "அறிவேனையா", குறிஞ்சி ராகத்தில் "சொல்லடி சுவாமிமலை" ஆகிய பாடல்களில் மலைக்குறத்திபோல் தோற்றத்தில் தான் வசிக்கும் மலையின் அழகை வர்ணித்தார். சிவன் மீதான தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவு எய்தியது.

திருமதி. தீபா மகாதேவனின் நட்டுவாங்கம், திருமதி.ஸ்னிக்தா வெங்கட்ரமணியின் வாய்ப்பாட்டு, திரு. ரவீந்திர பாரதியின் மிருதங்கம், திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமண்யாவின் வயலின், ஹ்ரிதிகேஷ் சாரியின் வீணை, பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல் ஆகியவை சோபிக்கச் செய்தன.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com