தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார்
இளந் தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்படுவது சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது. 35 வயதுக்குட்பட்டோருக்கான படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருதைக் கடந்த ஆண்டுகளில் ம. தவசி (2011), மலர்வதி (2012) ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருதுக்குப் பத்திரிகையாளரும் கவிஞருமான கதிர்பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்னும் கவிதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு. கல்கி வார இதழில் தலைமைத் துணையாசிரியராகப் பணியாற்றி வரும் கதிர்பாரதியின் இயற்பெயர் செங்கதிர் செல்வன். சொந்த ஊர் தஞ்சையை அடுத்த பூதலூர். இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். டாக்டர் க. செல்லப்பன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், ரவி சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட நடுவர் குழு இந்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் விழா ஒன்றில் இந்த விருது வழங்கப்படும்.



© TamilOnline.com