ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-7)
இதுவரை....

ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம், விற்பதா வளர்ப்பதா, என்பவற்றைப் பற்றிப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்!

*****


கேள்வி: என்னுடைய நிறுவன யோசனை பிரமாதமானது. ஸிஸ்கோ நிறுவனத்தை ஆரம்பித்த யோசனையைவிட உசத்தி என்றுகூடச் சொல்வேன். ஆனால் அதை நான் விளக்கும்போது ஒரு சிலர்தான் அதன் சிறப்பை உடனே புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள். பல ஆரம்பநிலை விற்பன்னர்கள் என்று சொல்லப் படுபவர்களோ, அதைப் போட்டு குடாய்ந்து குடாய்ந்து இந்த அம்சம் சரியாக விளக்கவில்லை, அந்த அம்சத்தைக் கொஞ்சம் மாற்ற வேண்டும், இந்த இன்னொரு விஷயத்தைப் பற்றி இன்னும் வாடிக்கையாளர் ஆராய்ச்சி வேண்டும் என்று பிய்க்கிறார்களே! ஏன் அப்படி? நிஜமாகவே அவர்களுக்கு என் யோசனை பிடிக்கவில்லையா, அல்லது புரியவில்லையா? அவர்களோடு இனிமேல் பேசாமல், புரிந்து பாராட்டுபவர்களின் உதவியோடு என் நிறுவனத்தைத் தொடங்கிவிடலாமா?


கதிரவனின் பதில்: அப்பாடி! ஒரு மாறுதலுக்கு எளிதான கேள்வி! இதற்கு ஒரே ஒரு, கறாரான பதில்தான் உள்ளது: உங்களை ஒட்டு மொத்தமாகப் பாராட்டுபவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது. பிய்த்து எடுக்கிறார்கள் என்று சொன்னீர்களே, அவர்களோடு இன்னும் நிறையப் பேசவேண்டும். அவர்களைப் போல் இன்னும் பல விற்பன்னர்களைத் தேடிச் செல்ல வேண்டும். யாராவது ஒரு குறையோ, முன்னேற்றும் வழியோ சொல்லாமல் வெறுமனே "ஆஹா! பிரமாதமான யோசனை" என்று பாராட்டினால் அடுத்தவரைத் தேடுங்கள்.

"போச்சுடா, எதாவது நல்லது சொல்வான் என்று கேட்டால், இந்தக் கதிரவனும் இப்படி கடுப்படிக்கிறானே! எதற்காக இந்த மாதிரியான கேட்கக் கசப்பான கருத்துக்களைக் கூறுபவர்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும்?" என்று நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது! சற்றுப் பொறுங்கள், விளக்குகிறேன். இது மிக மிக முக்கியமானது!

நீங்கள் ஆரம்பிக்கப் போகும் நிறுவனம் வெற்றி வாகை சூடவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம்! அப்படியானால், உங்கள் யோசனையைச் சற்று கவனிப்புடன் கேட்டு அதில் எந்த அம்சங்களில் குறையுள்ளன, எந்த விஷயங்களுக்கு மேற்கொண்டு ஆராய்ச்சியும், மேம்பாடுகளும் (improvements), சிறு மாற்றங்களும் தேவை என்று சொல்லும் கருத்துக்களை, கேட்கக் கஷ்டமானாலும் கவனமாகக் கேட்டுக்கொண்டு, அமுலாக்கி, உங்கள் யோசனையைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கலாம். உங்கள் யோசனை பிரமாதமானது என்று உங்களுக்குப் பெரும் நம்பிக்கை இருப்பதில் தவறில்லை! ஆனால் யோசனையில் எந்தப் பழுதும் இல்லை, அதற்கு எந்த விதமான மேம்பாடும் தேவையில்லை, குறை சொல்பவர்களும் கேள்வி கேட்பவர்களும் புரிதலில்லாத மாங்காய் மடையர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், அது உங்கள் முயற்சியையும், நேரத்தையும், பணத்தையும் கூட, குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமமானது! இந்தக் கட்டுரையைப் படிப்பதையும் இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு வைரம்கூட பட்டை தீட்டப்பட்டவுடன் தான் ஜொலிக்கிறது. அதற்குமுன் அதற்கு எத்தனை வெட்டுக்கள்! அரிசி கூட, உமி நீக்கப்பட்டபின் தான் உண்பதற்குத் தயார், அல்லவா?

ஆரம்பநிலை நிறுவன யோசனைகளும் அத்தகையவே! உங்கள் யோசனையைப் பட்டை தீட்டாமல் உங்களை வெறுமனே ஆஹா ஓஹோவெனப் புகழ்பவர்கள் உங்களை நல்லெண்ணத்தில் ஆழ்த்தலாமே ஒழிய வேறொரு பலனுமற்றவர்கள். சொல்லப் போனால், அவர்கள் உங்களுக்குக் அஸ்திவாரமற்ற பெரும் நம்பிக்கையையும் அகம்பாவத்தையும் வளர்த்து, கெடுதல் விளைவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது! உங்கள் யோசனையில் முன்னேற்ற வேண்டிய அம்சங்களையும், மேற்கொண்டு யோசிக்க வேண்டிய விவரங்களையும் குறிப்பிட்டு வழி காட்டுபவர்கள்தான் பாகற்காய் கசந்தாலும் உடல் நலத்துக்கு நல்லது என்பது போல், உங்களுக்கு அப்போது பிடிக்காமல் போனாலும், மதிப்பிட முடியாத உயர்ந்த பலனளிப்பவர்கள்!

எந்த ஆரம்பநிலை நிறுவனமும் ஒரே யோசனையை ஆரம்பத்திலிருந்து வெற்றியடையும் வரை மாற்றாமல் இருந்ததில்லை என்று பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்படியானால் எந்த யோசனைக்கும் எந்த நிலையிலும் முன்னேற்றம் தேவை என்பது தெளிவாகிறதல்லவா?

பலப்பல ஆரம்பநிலை நிறுவனங்களில் (நான் ஆரம்பித்தவையும், நான் ஆலோசனை கூறியவையும் சேர்த்து) எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், எந்த நிறுவனமுமே முன்னேற்றம் தேவையற்ற பழுதேயற்றதான யோசனையோடு ஆரம்பிக்கப் படவில்லை. ஒவ்வொன்றுக்கும் பலதரப்பட்ட சரிப்படுத்தலும் முன்னேற்றங்களும் நிச்சயமாகத் தேவைப்பட்டன. சில யோசனைகளுக்கு மேல்விவரங்கள் தேவைப்பட்டன. சிலவற்றுக்குச் சற்று வழிமாற்றம் தேவையாயிற்று. ஒரு சில, தொலைதூரத்தில் பார்த்தால் சரியான வாய்ப்புத்துறையில் இருப்பினும், அத்துறைத்துத் தேவையான யோசனையாக இல்லாமல் சரியாகப் பொருந்தாதவையாக இருந்ததால், மிகுந்த மாற்றங்கள் தேவையாக இருந்தன. சிலவற்றில் இன்னும் பெரிய வாய்ப்புக்களை உணராமல், சிறுமூலைக்கான யோசனையாக இருந்தன. அந்தக் குறைபாடுகளைச் சரியாகக் கண்டறிந்து எங்களுக்கு உணர்த்தி வழிகாட்டியவர்களால் தான், சரிக்கட்டி ஓரளவுக்காவது வெற்றியடைய முடிந்தது.

இன்னொரு முக்கிய விவரத்தைக் குறிப்பிட்டே தீர வேண்டும். CNET கட்டுரைத் தொடரில் கூறியுள்ள விவரம் இது. மூலதனக்காரர்களோடு நடத்தும் பெரும்பாலான பேச்சு வார்த்தைகள் பணம் கைமாறும் பலனளிப்பதில்லை! அப்படியானால், அப்படிக் கழியும் அந்தக் காலத்துக்கு உங்கள் கைப்பலன்தான் என்னவாக இருக்க முடியும்? அவர்களது ஆலோசனையாவது பெற முடியும் அல்லவா?! உங்கள் யோசனையின் எந்த ஒரு அம்சத்தையாவது, வணிக வழிமுறையோ அல்லது இணைநிறுவர் தொடர்போ எதாவது ஒரு வகையில் மெருகேற்ற அவர்களின் கருத்துக்களையும், தொழில்முறைப் பிணைப்புகளையும் நீங்களாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சொல்லப் போனால், உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளவர்களிடம் நீங்கள் முதலில் போய்ப் பேசக்கூடாது!

உங்கள் யோசனைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்வல்லுனர்களிடமோ, வணிக விற்பன்னர்களுடனோ, அவர்களை நேரடியாகத் சரியாகத் தெரிந்திராவிட்டாலும் எப்படியாவது கூடிப் பேசும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு பிடித்து வைத்துக் கொண்டுக் கலந்தாலோசியுங்கள். அவர்கள் உங்கள் யோசனைக்கு சாதகமில்லாத விமர்சனம் அளிக்கலாம். ஏன் நீங்கள் நினைத்ததற்கு எதிர்மாறான கருத்துக்களைக் கூடக் கூறலாம்! ஆனால் அதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வது நல்லதுதானே! கற்கண்டான பாராட்டுக்களையே முதலில் கேட்டுவிட்டு, திடீரெனப் பாகற்காய் கருத்துக்களைக் கேட்டால், அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்க் கொண்டிருப்பீர்கள், வழியில் வரும் படுகுழுயில் தடாலென விழுவீர்கள்!

அதனால் குறை கூறுபவர்களை விட்டு விலகாமல், அவர்களுடன் பேசி அதிலிருந்து கிடைக்கும் மணிகளை உங்கள் ஆரத்தில் கோர்த்துக் கொள்ளுங்கள்! "உளி தாங்கும் கற்கள்தானே சிலையாக மாறும்" இல்லையா? உங்கள் யோசனை வெறும் கல்லாக இருக்க வேண்டுமா, அல்லது அழகான கஜுராஹோ சிலையாக வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எனவே, குறைகூறுபவர்களைத் தேடி அலைந்து ஆக்கபூர்வமான விமர்சனம் வாங்கிக் கொண்டு மெருகேற்றுங்கள்! இனிக்க இனிக்கப் பாராட்டுக்களை அள்ளி வீசும் "நண்பர்களை" சற்றுத் தொலைவில், மனம் தளரும்போது உற்சாக உந்துதலாக மட்டும் வைத்துக் கொள்வது நல்லது என்பது அடியேன் தாழ்மையுடன் சமர்ப்பித்துக் கொள்ளும் கருத்து. குறை விமர்சனங்களின் மதிப்பு எவ்வளவு உயர்வானது என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து வேறொரு ஆரம்பநிலை யுக்தியைப் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com