அரங்கேற்றம்: அனுஸ்ரீ அறிவழகன்
ஜூன் 29, 2013 அன்று சாரடோகாவிலுள்ள மெகாஃபி அரங்கத்தில் ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி மாணவியான செல்வி. அனுஸ்ரீ அறிவழகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

'வேலனிடம் போய்ச் சொல்லடி சகியே' என்ற தமிழ் வாசஸ்பதி வர்ணத்தைக் கௌஷிக் சாம்பகேசன் பாட, வாசுதேவன் கேசவலுவின் நட்டுவாங்கத்தில், அனுஸ்ரீ ஒரு தேர்ந்த நர்த்தகியின் நேர்த்தியுடன் ஆடினார்.

பதினோரு வயதே ஆன அனுஸ்ரீயின் நடனம் தொடக்கத்திலேயே களைகட்டியது. ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'அசைந்தாடும் மயிலொன்று' நளினமாக இருந்ததென்றால், லால்குடி ஜெயராமனின் யமுனாகல்யாணி தில்லானா விறுவிறுப்பின் சிகரம். ராம்சங்கர் பாபுவும் (மிருதங்கம்), சி.கே. விஜயராகவனும் (வயலின்) அருமையாகப் பக்கம் வாசித்தனர்.

குரு விஷால் ரமணியின் ஸ்ரீக்ருபா மாணவிகள் சிறந்த நடன நிகழ்ச்சிகளைப் பள்ளிகளிலும், தமிழ் மன்றத்திலும் மற்றும் பல அரங்குகளிலும் அளித்து வருகிறார்கள். தஞ்சாவூர் பாணியில் நடனம் கற்பிக்கும் அவர், அனுஸ்ரீயின் நடன அரங்கேற்றத்திற்கு அக்கறையோடு தாளக் கட்டமைப்பு, அபிநய சிறப்பு, வேகமும் பாவமும் கூடிய நிருத்தங்கள், என்று பலவிதமான நடன அம்சங்களையும் இணைத்து நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார். அனுஸ்ரீயின் தந்தை அறிவழகனும், தாயார் ஸ்வர்ணாவும் எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகச் செய்திருந்தார்கள்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com