அரங்கேற்றம்: அஜய் கோபி
ஜூலை 6 அன்று மில்பிடாஸில் உள்ள ஷீரடி சாய் பரிவாரில் செல்வன். அஜய் கோபியின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இவரது முதல் குரு தந்தை திரு. கோபி லக்ஷ்மிநாராயணன். அவரிடம் 5 வருடங்களாக மிருதங்கம் கற்று வருகிறார் அஜய். மேலும் கல்லிடைக்குறிச்சி சிவகுமார் அவர்களிடம் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார். கோபி லக்ஷ்மிநாராயணன் வளைகுடாப் பகுதியில் சாரதா தாளவித்யா பள்ளியை நடத்தி வருகிறார். சங்கீதகலாசாகர இசைப்பேரொளி திரு. நெய்வேலி சந்தான கோபாலன் நிகழ்த்திய கச்சேரியில் அஜய் கோபியின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. ஹெம்மிகே ஸ்ரீவத்சன் வயலின் வாசித்தார். ஹரிகோபிநாத், விவேக் உடன் பாடினர்.

கும்பகோணம் நாராயணஸ்வாமி மற்றும் பாலக்காடு ரகுவின் பாணியை வாசிப்பில் வெளிப்படுத்தினார். அஜய் கோபி இந்த ஆண்டு க்ளீவ்லேண்ட் தியாகராஜ உற்சவத்தில் நடந்த மிருதங்கப்போட்டியில் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி சந்தான கோபாலன் தன் உரையில், "அஜய் கோபி திஸ்ர நடையில் வேகமாகவும் கை அழுத்தியும் வாசித்தது அருமை" என்று பாராட்டினார். அஜய்கோபி மற்றும் அவரது பெற்றோர்களின் நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கௌசல்யா சுவாமிநாதன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com