பார்வையற்றோருக்கு உதவ 'சூர்தாஸ்' நாட்டிய நாடகம்
ஆகஸ்ட் 31, 2013 அன்று மில்பிடாஸில் உள்ள ஷிர்டி சாயி மந்திரில் மாலை 4 முதல் 6 மணிவரை 'சூர்தாஸ்' நாட்டிய நாடகம் நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, திருமதி. சுதா ராஜகோபாலன் அவர்கள், ஹரிகதா முறையில் நிகழ்த்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியை பார்வையற்றோருக்கு உதவும் தன்னார்வ அமைப்பான அக்சஸ் பிரெய்ல் (AB) ஏற்பாடு செய்துள்ளது. கணினிபொறியாளரான திருமதி.சுதா கூப்பெர்டினோ, கலிஃபோர்னியாவில் வசிக்கிறார். இவர் 2008ம் ஆண்டில் தனது பார்வையை இழந்ததிலிருந்து ABயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

IIT, சென்னை பேராசிரியர் R. கல்யாணகிருஷ்ணன் மற்றும் ஓய்வுபெற்ற IPS அதிகாரி திரு. N. கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் தொடங்கிய 'வித்யாவ்ருக்ஷா' என்பது அமெரிக்காவில் 'Access Braille' என மறுபெயரிடப்பட்டது. பார்வையிழந்த மக்களுக்கு கல்விப் பயிற்சி தருவதோடு, அவர்கள் படிக்கும் வண்ணம் நூல்களை உருவாக்கிக் கொடுப்பதே இதன் பிரதான செயலாகும். கண் பார்வையிழந்த ஏழைக் குழந்தைகள் வறுமையின் காரணத்தால் பார்வை இழந்தோர்க்கென இருக்கும் சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல முடிவதில்லை. அவர்களால் பொதுப் பள்ளிகளில் படிக்க இயலாது. இதனால், வளர்ந்து வரும் நாடுகளான ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருக்கும் எண்ணற்ற பார்வையற்றவர்களுக்குக் கல்விப்பயிற்சி அளிக்கிறது. இது நன்மனம் கொண்ட கொடையாளிகளின் உதவியால் சாத்தியமாகிறது. விவரமான நேர்காணல் பார்க்க.

பார்வையிழந்தவர்களுக்கு பிரெயில் உதவிப்பெட்டி (Braille Kits) அளிப்பது, தொலைதூர கிராமங்களுக்கு நடமாடும் பள்ளி அமைத்துக் கொடுப்பது, பிரெயில் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வழங்குவது போன்றவை ABயின் முக்கியத் திட்டங்களாகும்.

2012-13ல் இந்திய பதிப்புரிமைச் சட்டம், பதிப்புரிமையாளர்களின் அனுமதி பெறுவதற்கு முன்பே புத்தகங்களை பார்வையற்றோருக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று திருத்தப்பட்டது. இதனால், இவர்கள் தொடக்கக் கல்வி, உயர்நிலை கல்வி, கல்லூரி, தொழிற்கல்லூரிகளில் படிக்கும் சிறந்த வாய்ப்பைப் பெறமுடியும். NIOS பாடத்திட்டத்தில் இருக்கும் பத்தாம் வகுப்புப் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் பணியில் AB, சக்ஷம் டிரஸ்ட் (புதுடில்லி) வொர்த் டிரஸ்ட் (சென்னை) ஆகியவற்றோடு சேர்ந்து சிறப்பாகச் செய்தது. மில்பிடாஸ், கலிஃபோர்னியாவின் 'சாய் பரிவார்' மற்றும் 'ட்யூஸ்டே மகளிர் குழு'வைச் சேர்ந்த தொண்டூழியர்களின் உதவியால் இப்பணியை நன்கு செய்ய முடிகிறது. மேலும், டில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிப் பாடம் கற்கும் மாணவர்களின் புத்தகங்களை மாற்றும் பணிக்கும் AB நிதியுதவி செய்திருக்கிறது. ரயில்வே மற்றும் வங்கிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிப் புத்தகங்களை மாற்றியமைக்கும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு இதன் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வளைகுடாப் பகுதி நண்பர்களின் தாராளமான நன்கொடையினால்தான் மேற்கூறிய சிறந்த சேவைகளைச் செய்யமுடிகிறது.

விவரங்களுக்கு: accessbraille.webs.com
மின்னஞ்சல்: info@accessbraille.org
தொலைபேசி: 408.762.4836

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com