நிருத்யோல்லாசா: 'நிருத்யமாலா'
மே 18, 2013 அன்று நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி 'நிருத்யமாலா' என்ற நாட்டிய நிகழ்ச்சியை, ஃப்ரீமாண்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் வழங்கியது. இதில் நிருத்யோல்லாசாவின் கலை இயக்குனர் குரு இந்துமதி கணேஷோடு, அதன் முக்கிய நடனமணியான அக்ஷயா கணேஷ் பங்கேற்றார். சாருகேசியில் புஷ்பாஞ்சலியோடு நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்துவந்த 'ஏன் பள்ளி கொண்டீரய்யா'வுக்கு இந்துமதி ஆத்மார்த்தமாக அபிநயித்து ஆடினார். அவரது ஒவ்வொரு அசைவும் அவரது குரு சித்ரா விஸ்வேஸ்வரனின் கலைநேர்த்தியை நினைவூட்டின என்று சொல்ல வேண்டும். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த மதுரை என். கிருஷ்ணன் அவர்களின் 'கோலமயில் வாகனனே' பாடலுக்குச் சேர்ந்து ஆடிய இந்துமதியும் அக்ஷயாவும், கந்தனின் கருணையைச் சித்திரிக்கும் பல சம்பவங்களைக் கண்முன் கொண்டுவந்தனர். சுவாதித்திருநாளின் 'சங்கர ஸ்ரீகிரி' கிருதிக்குக் குழுநடனம் வடிவமைத்திருந்த அக்ஷயா, சிவனின் பெருமைகளை அதில் வெகு அழகாகக் கொணர்ந்திருந்தார்.

அடுத்து வந்தது ஒரு சுவையான ஒப்பீடு. முருகன்மீது மையல் கொண்ட வனிதையாகக் 'கண்டநாள் முதலாய்' பாடலுக்கு அக்ஷயா அபிநயிக்க, பக்குவமான நாயகியின் மதுரபாவத்தைக் காண்பிக்கும் 'க்ஷணம் ஆதுன' அஷ்டபதிக்கு இந்துமதி அபிநயித்தது ஒரு புதுமையான ரசானுபவமாக இருந்தது. இதற்கு ஈடுகொடுப்பதாக இருந்தது பின்னணி பாடிய திருமதி. சிந்து நடராஜன் இவற்றைப் பாடிய லாகவம். இறுதியாக வந்த 'ஆனந்தம்', தில்லானாவையும் காவடிச்சிந்தையும் திறம்படக் கைகோர்க்கச் செய்த படைப்பாகும். வயலினில் திருமதி. சாந்தி நாராயணன், மிருதங்கத்தில் நாராயணன் நடராஜன் ஆகியோர் தமது செம்மையான பங்களிப்பால் மெருகேற்றினர். இறுதியில் அரங்கே எழுந்து நின்று செய்த கரகோஷம் நிகழ்ச்சியின் சிறப்புக்குச் சான்று கூறியது.

ஆங்கிலமூலம்: ஸ்னிக்தா வெங்கடரமணி

© TamilOnline.com