வெகுளி மாமா
எங்கள் மாமா அமெரிக்கா வந்திருந்தார். அவர் ரொம்ப வெகுளி. மனதில் தோன்றுவதை அப்படியே யோசிக்காமல் பேசிவிடுவார், சிந்துபைரவி படத்தில் வரும் ஜனகராஜ் போல. 'நம்ப வீட்டு ஜனகராஜ்' என்றே அவரை வேடிக்கையாகக் கூப்பிடுவோம்.

உறவினர் ஒருவர் வீட்டுக்கு மாமாவுடன் சென்றிருந்தோம். அவர்கள் காப்பி கொடுத்தார்கள். என் கணவர் ''அடடா இப்ப எதுக்குக் காப்பி?" என்றார். உடனே மாமா ''சும்மா குடி. இது harmless காப்பி. ஒண்ணும் பண்ணாது'' என்றார். அதாவது வெறும் தண்ணிதான் என்பதை வெகுளியாகக் கூறவும் நாங்கள் சொல்ல முடியாத சங்கடத்துடன் நெளிந்தோம். வீட்டிற்கு வந்து சிரிப்பான சிரிப்பு.

இன்னொரு வீட்டில் அவர்கள் ஒரு மாலையில் மாமாவை அழைத்து வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தனர். மாமா மிகுந்த எதிர்பார்ப்புடன் ''இங்சே சமையல் எல்லாம் செய்யாதே. நாம அவங்க வீட்டிலதான் சாப்பிடப் போறோமே'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அங்கே சென்றோம். டேபிளில் மிக்சரும், ஜூஸும், பழங்களும் வைத்துச் சாப்பிடச் சொன்னார்கள்.

மாமா, ''அடடே இதெல்லாம் வேறயா? நேரா சாப்பாட்டுக்கே போய்டுவோமே" என்று கூறியபடி கலகலவென்று சிரிக்கவும், வீட்டுத் தலைவி வெலவெலத்துப் போனார். என்னைக் கண்ஜாடை காட்டி உள்ளே கூப்பிட்டார். சமையலறையில் சாப்பாட்டுக்கான அடையாளமே இல்லை.

''மன்னிக்கணும். உங்க மாமா ரொம்ப வைதீகமானவர்னு முன்னமே நீ சொல்லி இருந்தே இல்லை. வெறுமனே நொறுக்குத் தீனி சாப்பிடத்தான் கூப்பிட்டேன். சமையல் ஒண்ணும் செய்யலை. இப்போ என்ன பண்ணலாம்?'' என்று உண்மையிலேயே வருத்ததுடன் கூறினார்.

''அதனாலென்ன ரமா. மாமா பூண்டு மசாலா எல்லாம் சாப்பிடமாட்டார்ங்கற அர்த்தத்திலே சொன்னேன். நாங்க வெளியில போய்ச் சாப்பிடறோம். கவலைப்படாதே'' என்று கூறிச் சமாதானம் செய்து விட்டுப் புறப்பட்டோம். வழியெல்லாம் மாமாவைக் குழந்தைகள் ''என்ன மாமா, நேரா சாப்பாட்டுக்கே போய்டலாமா?" என்று கிண்டல் பண்ணிச் சிரித்துக் கொண்டே வந்தனர்.

இன்னும் ஒரு நண்பர் வீட்டில் குழந்தைக்குப் பிறந்தநாள். எங்களுடன் மாமாவும் வந்தார். அன்று காலையில் நண்பரின் மனைவியின் காதுத் தோடு தொலைந்துவிட்டதாம். வீடு முழுக்கத் தேடியும் அகப்படவேயில்லை என்று அவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தனர்.

மாமா டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், திடீரென்று எழுந்து "தோடுடைய செவியன் வடையேறி ஓர்" என்று அழுத்தம் திருத்தமாய்க் கையில் வடையைக் காண்பித்து அபிநயத்துடன் உரக்கப் பாடவும் எல்லோரும் ஒன்றும் புரியாமல் அவரையே விசித்திரமாய் பார்த்தனர்.

மாமா கையில் வடை, அதற்குள் தோடு! எப்படி வடைக்குள் தோடு வந்தது? புரியாத விஷயம். ஆனால் தோடு கிடைத்துவிட்டது.

சமயோசிதமாகப் பாடியதற்காக மாமாவை எல்லோரும் பாராட்டினர். இப்போதும் அவரை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com