"நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்"
அன்புள்ள சிநேகிதியே,

எனக்கு கல்யாணம் ஆகி 26 வருடங்கள் ஆகிவிட்டது. லைஃப் ரொம்ப நன்றாக இருந்தது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் குழந்தைகளுக்காகச் சேர்ந்திருப்பது நல்லது என்று பொறுத்திருந்து விட்டேன். இப்பொழுது என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். வேலைக்குப் போகும் வயது வந்துவிட்டது. இப்போது தனியாகப் போனால் என்ன என்று தோன்றுகிறது.

அதற்குக் காரணங்கள் நிறைய இருக்கின்றன. எனக்கும் என் கணவருக்கும் எதுவுமே ஒத்துப்போனது கிடையாது. நான் எதையுமே பேசி முடிவுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். அவர் 'நான் சொன்னால் கேட்க வேண்டும்' என்ற பழங்கால எண்ணம் கொண்டவர். முதல் சில வருடங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவே சரியாக இருந்தது. அதனால் அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ப்பில் நிறைய வித்தியாசம். அவருக்கு "அப்பா என்றால் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும்" என்ற மனப்பான்மை. நான் கண்டிப்போடு அன்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இதனால் நிறைய வாக்குவாதங்கள். குழந்தைகள் சிறியதாக இருக்கும்பொழுதில் இருந்து இப்போதுவரை அவர்கள் எது செய்தாலும் அதில் குறை. சாப்பிடுவதில்கூட. "இதற்கு இதைத்தான் சாப்பிட வேண்டும்" என்று கத்தல். அவர்களுக்கு எப்படிப் பிடிக்கிறதோ அதைச் சாப்பிடட்டுமே என்று சொன்னால் அவர்களுக்கு நம் கலாசாரம் நீ சொல்லித் தருவதே இல்லை என்று குறை. நாங்கள் அமெரிக்கா வந்து 25 வருடங்கள் ஆகிறது. என் குழந்தைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்.

ஒரு சில விஷயங்கள் நண்பர்களிமும் பேச முடியாது. பெட்ரூமிலும் நிறையக் குறை. இந்த குறை, குற்றம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பதாலும் நிறைய விவாதங்கள். அதனாலும் அன்யோன்யமாக இருப்பதில் எனக்கு இஷ்டம் இருப்பதில்லை. 'நான் ஆண். அதனால் கேட்டால் அது நடக்கவேண்டும்' என்று சொல்லி இருக்கிறார். இந்த மாதிரி பேசுவதால் அவரை ஒரு மனிதராக மதிப்பதற்கே தோன்றமாட்டேன் என்கிறது.

இரண்டு மாதத்துக்கு முன்னால் நாம் தனித்தனியாகப் போய்விடலாம் என்றேன். அந்த நினைப்பே உனக்கு இருக்கக்கூடாது என்று கத்தினார். 'ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?' என்று கேட்டால் 25 வருடங்கள் கழித்து டிவோர்ஸ் என்றால் நண்பர்கள் பார்த்துச் சிரிப்பார்கள் என்கிறார். வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றால் "நான் மட்டும் என்ன ரொம்ப சந்தோஷமாகவா இருக்கிறேன்" என்கிறார்.

நான் திருமணம் என்றால் பணம் இருக்கிறதோ இல்லையோ அன்பு, பாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தவள். குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள். கடந்த 15 வருடங்களாக தினம் ஒரு ஆர்க்யூமெண்ட். வெறுத்துவிட்டது. பிள்ளைகளிடம் எங்கள் திருமணம் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் 'aweful' என்கிறார்கள்.

நான் உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெரியவில்லை. என்னிடம் ஏதாவது தப்பிருக்கிறதா? மேரேஜ் கவுன்சலிங் போகலாமா என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உனக்குத்தான் இருக்கிறது. நீ போய்ப் பார் என்று நிறைய தடவை சொல்லியிருக்கிறார்.

உங்கள் அட்வைஸ் சொல்லுங்கள்.

நன்றி.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே,

பிறர் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒவ்வொருமுறையும் யோசிப்பேன். எப்படி இந்த பிரச்சினை ஒவ்வொருவருக்கும் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால் தனிப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கிறது என்று.

உங்கள் கடிதத்தில் வெறுப்பைவிடக் கசப்புத்தான் எனக்கு அதிகமாகத் தெரிகிறது. காரணமும் புரிகிறது. வெவ்வேறு குடும்பங்கள் தாங்களாகவே உடன்பட்டு உருவாக்கப்படும் இந்த அன்னியோன்ய உறவு, வாழ்க்கைக்கே ஒரு அர்த்தத்தை ஆனந்தத்தைக் கொடுக்கும் அருமையான அனுபவம். ஆனால் உண்மையிலேயே பெரும்பாலானோருக்கு அந்த உறவை எப்படி அனுபவிப்பது என்பதே தெரியவில்லை. காரணம், உறவு அங்கே சகிக்கப்படுகிறது. பொறுக்கப்படுகிறது. நிலை நாட்டப்படுகிறது. கட்டாயப்படுத்தப்படுகிறது. கண்டிக்கப்படுகிறது. ஆனால், மதிக்கப்படுவதில்லை. நம்பப்படுவதில்லை. எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே மதிப்பு இருக்காது. எங்கே மதிப்பு இல்லையோ அங்கே நம்பிக்கை இருக்காது. எங்கே மதிப்பு இருக்கிறதோ, அங்கே அதிகாரம்கூட அன்பும், அக்கறையுமாகத்தான் வெளிப்படும். புரியவும் புரியும். மதிப்பின் மகத்துவம் நிறையப் பேருக்கு உடனே புரிவதில்லை. பிறரை மதிக்கும்போது நாம் மதிக்கப்படுகிறோம். நம்முடைய சுயமதிப்பு பெருகுகிறது. நம்முடைய இயலாமை இல்லாமல் போகிறது. எப்போது பிறரை வார்த்தைகளால் மதிக்கிறோமோ அதே நேரம் அவர்கள் தங்கள் எண்ணங்களால் நம்மை மதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம்—ஒருவரால் வாயசைக்க முடிகிறது. மற்றவரால் முடிவதில்லை—பல காரணங்களை முன்னிட்டு.

சில கவுன்சலிங் செஷன்களில் கணவர்கள், "நான் மதிப்பு கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறேன். ஒன்று 'ஏன் செய்தாய்?' என்று கேட்டாலே, இந்தப் பெண்களுக்கு கோபமும், அழுகையும் வந்து விட்டால் என்ன செய்வது? "என்ன குறை வைத்தேன்" என்று தான் வாங்கிக் கொடுத்த நகைகளையும், புடவைகளையும் பட்டியல் போட்டு, சுற்றுலாக்களையும் க்ஷேத்ராடனங்களையும் விவரிப்பார்கள். உறவு முறையில் எங்கோ தவறு செய்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிபடுவதில்லை. They are culturally conditioned. "தன் அம்மா, தன் அப்பாவிற்குக் காட்டிய மரியாதையோ, பயமோ அக்கறையோ தன் மனைவி தன்னிடம் காட்டுவதில்லை. இருந்தும், தான் சகித்துக்கொண்டு, தன் மனைவியுடன் காலம் கழிக்கிறோம்" என்பதுதான் பலரின் குறையாக இருக்கிறது. "தன் உணர்ச்சிகளைத் தன் கணவர் மதிப்பதில்லை" என்பது பல மனைவிகளின் வேதனையாக இருக்கிறது. இந்த உணர்ச்சி வலுக்க, வலுக்க ஒரு காலகட்டத்தில் அந்தக் கணவரோ, மனைவியோ ஒரு வெடிப்பில் (வார்த்தையோ, செயலோ) தனித்து வாழத் துணிந்து விடுகிறார்கள்.

இவர்களுக்குள் கனன்ற எரிமலையைச் சமூகம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. புரிந்துகொள்பவர் மிகமிகக் குறைவு. அதையும் தாங்கிக்கொள்ளத் தயாராக வேண்டியிருக்கிறது. பொருளாதார பலம், சமூக பலம், ஆரோக்கிய பலம் இருப்பவர்களிடம்—அதாவது நம் இளைய சமூகத்தினரிடம்—சுயமதிப்பை பாதிக்கும் கருத்து மோதல்கள், காதல் திருமணங்களையும் பாதகமாக்கிக் கொண்டிருக்கின்றன. In a nutshell problems occur when 'he takes her for granted' and 'she wants everything granted'. ஒரு கணவர் என்னிடம் சொன்னார், "என் மனைவி எனக்கு வேலை சரியாக இல்லை என்று கேவலமாக நடத்துகிறாள். என் குடும்பத்தினரைக் குறித்துக் கேலி பேசுகிறாள். மதிப்பே இல்லை, நான் ஒரு ஆண் என்று" என்று சொல்லி வருத்தப்பட்டார். அந்த மனைவி, எந்தப் பின்னணியில் தான் பேசியது என்பதைப்பற்றிச் சொன்னார். "வேலைக்குப் போகாமல், கம்ப்யூட்டர் கேம்ஸ் இல்லை டிவியில் ஸ்போர்ட்ஸ். குழந்தைகளைக்கூடப் பார்த்துக் கொள்வதில்லை. எனக்கு ஏன் கோபம் வராது!" என்று தன்பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னார்.

வேலைக்குப் போகும் கணவரிடம் அந்த மனைவி கத்தியிருந்தால் அவருக்கு இந்த 'மதிப்பு' பற்றிய காம்ப்ளெக்ஸ் இருந்திருக்காது. ஒரு கணவர் என்கிற மதிப்பைவிட, ஆண் என்கிற மதிப்பை அவர் எதிர்பார்த்து இருக்கிறார். சரிசமமாகப் பார்த்து, வேலைக்குப் போகும் அந்த மனைவி, கணவரிடமிருந்து பொறுப்பை எதிர்பார்க்கிறார். ஆண் என்று மரியாதை பார்ப்பதில்லை. பொதுவாக இந்தப் பிரச்சினையை முன்வைத்து என் கருத்துக்களை எழுதியிருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் உங்கள் நிலைமை என்னை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. நீங்கள் வேலைக்குப் போகிறவரா? உங்களுக்கு ஃபேமிலி சப்போர்ட் இருக்கிறதா? உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் நன்றாக இருக்கிறதா? சமயம்/சமூகப் பணிகளில் முழுமூச்சாக ஈடுபடக் கூடிய வாய்ப்பு அல்லது ஆர்வம் உண்டா? தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவரா? இதுபோன்ற பல விவரங்கள் எனக்குத் தெரியாதே. பிரிந்து விடுங்கள். இல்லை 'புரிந்து வாழுங்கள்' என்று எந்த ஆலோசனையும் சொல்பவருக்குச் சுலபம். ஆனால் செயல்படுத்த வேண்டியவருக்கு மிகமிகச் சிரமம். இரண்டிலுமே சோதனை, வேதனை உண்டு. பிரிந்து வாழ்வது என்பது ஒரு 'உறவின் மரணம்'. அதற்குப் பிறகு நினைக்க வேண்டியது அதை நாமே தேடிப் போகும்போது எதிர்பார்த்த அன்பு எப்படிக் கிடைக்குமோ? நிம்மதி கிடைக்குமோ? சுதந்திரம் இருக்குமா? என்று.

"புரிந்து வாழ்வது" என்பதற்கு இரண்டு கோணங்கள் உண்டு. எப்படியும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்கள் கணவரின் அடிப்படை குணங்களையோ, நம்பிக்கைக் கோட்பாடுகளையோ மாற்ற முடியாது. அவருடைய குணம் இப்படித்தான். ஆனால் "சிலர்போல் இவர் கொடுமைக்காரர் இல்லை. காமுகன் இல்லை. வேறு பெண் துணையை நாடியவர் இல்லை. என் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் பெருந்தன்மையோ, பக்குவமோ அவருக்கு இல்லை. இதை நான் புரிந்து கொண்டுவிட்டேன்" என்று நினைத்துப் பாருங்கள். பிறகு, அவர் உங்களிடம் எரிந்து விழுந்தாலும் உங்களை அது பாதிக்காது. உங்கள் மனம் எப்போது பாதிக்கப்படவில்லையோ அப்போது உங்கள் சிந்தனையில் சோகம், கசப்பு இருக்காது. சோகத்தால் ஏற்படும் சுயபச்சாதாபம் இருக்காது. தன்னம்பிக்கை பெருகும். நீங்கள் ஒரு குடும்பத் தலைவி. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய்; உங்களைப் புரிந்து கொள்ளாத கணவரைப் புரிந்துகொண்ட மனைவி. You are in control.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com