டி.எம். சௌந்திரராஜன்
தனது உச்சரிப்பாலும் குரல்வளத்தாலும் தமிழுக்கு அழகு சேர்த்த டி.எம்.சௌந்திரராஜன் (91) சென்னையில் காலமானார். மதுரையில், மார்ச் 24, 1922ல் மீனாட்சி அய்யங்கார் - வெங்கட அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலேயே இனிய குரல் மட்டுமல்ல, யார் பாடினாலும் ஒருமுறை கேட்டால் அப்படியே திருப்பிப் பாடும் ஏக சந்த கிராஹி ஆகவும் இருந்தார். இதைக் கண்ட தந்தை இவரை பூச்சி ஐயங்காரின் சீடரும், மருமகனுமான ராஜாமணி ஐயங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயில ஏற்பாடு செய்தார். நன்கு சங்கீதம் கற்றுத் தேர்ந்த டி.எம்.எஸ்., ஆலயத் திருவிழாக்களில் சிறு சிறு இசைக் கச்சேரிகள் செய்தார். திரையிசையிலும் டி.எம். சௌந்திரராஜனுக்கு மிகுந்த ஆர்வம். அக்காலத் திரைப் பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவார்.

தனது உள்ளம் கவர்ந்த எம்.கே. தியாகராஜ பாகவதரை அடியொற்றிப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தானும் திரையுலகில் நுழைந்து பின்னணிப் பாடகர் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். சுத்தமான தமிழ் உச்சரிப்பும், பாவத்துடன் பாடும் ஆற்றலும், கர்நாடக சங்கீத ஞானமும் அவருக்குக் கை கொடுத்தன. இயக்குநர் சுந்தர்லால் நட்கர்னி மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு ஆதரவால் 1946ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பின்னணி பாடினார். "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று சிந்தாமணி படத்தில் எம்.கே.டி. பாடியிருந்தார். அதைப்போலவே அமைக்கப்பட்ட "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற நகைச்சுவைப் பாடலை 'கிருஷ்ண விஜயம்' படத்தில் பாடினார் டி.எம்.எஸ். செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். அது பிரபலமானது என்றாலும் உடனடியாக வாய்ப்புகள் வந்து குவிந்து விடவில்லை. படிப்படியான முயற்சி மூலமே முன்னுக்கு வந்தார் டி.எம்.எஸ். இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் பல வாய்ப்புகள் தந்தார். 'தூக்குத் தூக்கி' படத்தில் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. பல்வேறு பாவங்களில் தான் பாட முடியும் என்பதை அப்படத்தில் அவர் நிரூபித்தார். ("சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...", "ஏறாத மலை தனிலே..."). 1957ல் வெளியான 'அம்பிகாபதி' பாடல்கள் மேலும் புகழ் சேர்த்தன. ("வடிவேலும் மயிலும் துணை", "சிந்தனை செய் மனமே", "மாசிலா நிலவே நம்..."). தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் சக்ரவர்த்திகளாகக் கோலோச்சி வந்த எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் அவரவர்க்கேற்பப் பாடி அவர்களின் வெற்றிக்குப் 'பின்னணி'க் காரணமானார்.

பக்தி, காதல், சோகம், வீரம், தத்துவம், நகைச்சுவை, கோபம் என நவரசங்களையும் குரலில் குழைத்துப் பாடும் திறன் பெற்றிருந்தார் டி.எம்.எஸ். "தில்லை அம்பல நடராஜா...","வசந்த முல்லை போலே வந்து..", "மாதவிப் பொன்மயிலாள்", "பத்துமாதம் சுமந்து...", எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்..", "சட்டி சுட்டதடா...", "போனால் போகட்டும் போடா..", "முத்துக் குளிக்க வாரீகளா," "வரவு எட்டணா; செலவு பத்தணா", "எங்கே நிம்மதி..", "தேவனே என்னைப் பாருங்கள்..", "யார் அந்த நிலவு ", "இசை கேட்டால் புவி அசைந்தாடும்..", "பாட்டும் நானே பாவமும் நானே.." போன்ற பாடல்கள் அவரது திறமைக்கு ஒரு துளிச் சான்று. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவை. கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடுவதில் வல்லவர் என்பதால் அவருக்கு அக்காலத்தில் வாய்ப்புகள் பெருகின. ஜெய்சங்கர், அசோகன், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார், நாகேஷ், ஸ்ரீகாந்த், ரஜினி, கமல், விஜய்காந்த் எனப் பலருக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

பாடுவதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். 'தேவகி' என்ற படத்தில் பாடி, நடித்திருந்தாலும், அவரது நடிப்புத் திறனை உலகுக்கு அடையாளம் காட்டிய படம் 'பட்டினத்தார்'. அதுபோல் 'அருணகிரிநாதர்' படத்திலும் அவர் தேர்ந்த நடிப்பாலும் அற்புதமான பக்திப் பாடல்களாலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். "கற்பனை என்றாலும்", "உள்ளம் உருகுதய்யா", "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்", "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்", "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை. டி.எம்.எஸ். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். தமிழக அரசின் 'கலைமாமணி', பாரத அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 'கந்தர்வ கான சிரோன்மணி', 'இசைச் சக்கரவர்த்தி', 'ஏழிசை மன்னர்', 'ஞானகலா பாரதி', 'கம்பீரக் குரலோன்' எனப் பல பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். அவருக்கு, சுமித்ரா என்ற மனைவியும், மல்லிகா என்ற மகளும், டி.எம்.எஸ். பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வகுமார் என்ற மகன்களும் உள்ளனர். காலத்தை வென்ற இசைக் கலைஞனுக்கு தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com