ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-4)
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உதவிச்சேவையின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்!

*****


கேள்வி: ஆரம்பநிலை மூலதனத்தைத் தனிநபர்களிடமிருந்து (angel investors) ஈர்ப்பதற்கு எங்கள் நிறுவனத்துக்கு வேண்டிய முதல் அம்சமாக எதைச் சொல்வீர்கள்?
கதிரவன்: மிக சுவாரஸ்யமான கேள்விதான் இது! தனிநபர்களிடமிருந்து உங்கள் நிறுவன யோசனைக்கு ஆரம்பநிலை மூலதனம் ஈர்க்க வேண்டுமானால், பல தரப்பட்ட அம்சங்களையும் நீங்கள் மனத்தில் வைத்துச் செயல்பட வேண்டியதுள்ளது. ஆனால், நீங்கள் அதில் முதல் முக்கியமான அம்சம் என்னவென்று கேட்டு எனக்கு ஒரு சவால் விட்டுவிட்டீர்கள்! சவாலே சமாளி!

முதல் அம்சம் என்பதால், அது ஒரு குறிப்பிட்ட ஆரம்பநிலை நிறுவனத்துக்கு மட்டுமேயானதாக இருக்க முடியாது. அதனால், பலதரப்பட்ட, ஏன் எல்லா ஆரம்பநிலை நிறுவனங்களுக்குமே தனிநபர் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால் எது முதல் முக்கியமான அம்சம் என்றுதான் பார்க்க வேண்டும். அதற்கு எனக்குச் சரியான விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது: அதுதான் பரபரப்பூட்டும் ஆர்வத்தை அவர்களுக்குள் தூண்டுவது!

அதாவது, நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கூறி, அது ஏன் அவர் முதலீட்டுக்குத் தக்கது என்று விளக்கமளித்ததுமே, அவருக்கு ஒரு பரபரப்பான ஆர்வம் உண்டாகி அவரது காசோலைப் புத்தகத்தைக் (check book) கையிலெடுக்கும் நிலைக்கு அவரை ஆளாக்க வேண்டும். (உடனே தராவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் அந்த அளவு ஆர்வம் ஊட்டுமாறு உங்கள் நிறுவன மூலதன வாய்ப்பு இருக்க வேண்டும்!)

அத்தகைய ஆர்வம், உங்கள் நிறுவன வாய்ப்பு இருக்கும் பொதுவான துறையின் பரபரப்பால் இருக்கலாம், அல்லது உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட யோசனையாலோ, அல்லது நிறுவனர் குழுவாலோ இருக்கலாம். உதாரணமாக, 1996ல் இருந்து 2000வரை, டாட் காம் கொப்புள ஆரம்பநிலைகளில் மின்வலை, டாட்காம் என்பதினாலேயே, எந்த யோசனையிலும் ஆர்வம் எழுந்து, தனிநபர்கள் மட்டுமல்லாமல், மூலதன நிறுவனங்கள்கூட தாராளமாக மூலதனத்தை எடுத்து வீசலானார்கள். (ஹே இடியட்.காம் என்னும் இணையத் தளம், வேறு பயனற்று, வெறுமனே தங்கள் பங்கு விலையை அதிகரிக்கும் வசதி மட்டுமே அளித்து இதை நையாண்டிகூடச் செய்தது!) ஆனால் கொப்புளம் வெடித்துப் போனதும் ஒரு சில வருடங்களுக்கு மூலதனம் கிடைப்பதே மிக அபூர்வமாகிவிட்டது.

அதற்குப் பிறகு பலப்பல துறைகளிலும் பரபரப்பும் மூலதன ஆர்வமும் வந்து போயுள்ளன. உதாரணமாக, தூயநுட்பத் (clean tech) துறையைக் கூறலாம். அது வந்த புதிதில் பல மூலதனத்தாரும் (தனிநபர்கள் உட்பட) அத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மூலதனத்தைக் கொட்டிக் குவித்தனர் (அமெரிக்க அரசும் கூடத்தான் - ஸாலிண்ட்ரா கவனம் வருகிறதா?). அதுவும் அத்துறைக்கு அதிக அளவில் மூலதனம் தேவைப்பட்டது. ஆனால் சூர்யமின்சக்திப் பலகைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு விலை படபடவெனச் சரிந்ததால் பல நிறுவனங்களும் திவாலாகின. மேலும் ஷேல் பாறை நீர் வெடிப்பில் (shale rock hydro fracking) பெருமளவில் உற்பத்தியான இயற்கை எரிவாயு விலையும் சரிந்து இன்னும் பலதரப்பட்ட சுத்த நுட்ப நிறுவனங்களும் தோல்வியடையவே, அத்துறையில் இருந்த ஆர்வம் ஆவியாகிவிட்டது.

அதனால் உங்கள் நிறுவனத்துக்கு மூலதனம் கேட்கும்போது ஒரு துறையின் பரபரப்பை மட்டும் வைத்து வாங்க முயலாதீர்கள். அது சிலமுறை பலனளிக்கக் கூடும். ஆனால் அது காலங்காலமாக நிரந்தரமாகப் பலனளிக்கக் கூடிய அணுகுமுறை அல்ல. துறையின் பரபரப்பு நல்லதுதான். மூலதனம் கிடைப்பதை அது எளிதாக்கக் கூடும். ஆனால், அத்தோடு சேர்த்து உங்கள் நிறுவனத்தின் சொந்த யோசனையும் அதன் நிறுவனக் குழுவும் அளிக்கக் கூடிய பலத்த ஆர்வத்தால் மூலதனம் பெற முயல்வது நல்லது.

நிறுவன யோசனையால் ஆர்வம் எழுப்புவதைப் பற்றி நிறைய விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டுரை தன்முழுமை பெறுவதற்காகச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன். யோசனை எந்த அளவுக்கு ஆழமாக விளக்கப்படுகிறதோ, அதற்கு எந்த அளவுக்கு வாடிக்கையாளர் ஆமோதிப்பு உள்ளதோ, அதன் நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதோ, அது எவ்வாறு வளர்ந்து பெரிய நிறுவனமாகலாம் அல்லது நிச்சயமாக பெரிய நிறுவனங்களால் பெரிய தொகைக்கு வாங்கப்படலாம் என்று மூலதனத்தாரின் எண்ணத்தில் எந்த அளவுக்கு ஆழ்ந்து விதை நாட்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு பரபரப்பும் ஆர்வமும் உண்டாகும்.

ஆனாலும் அது மட்டும் பல தருணங்களில் போதாது. குழுவைப் பற்றிய நம்பிக்கையும் ஆர்வத்தை அதிகரித்து மூலதனம் கிடைக்கும் மட்டத்தைத் தாண்ட வைக்கும்.

குழுவின் முக்கியத்துவத்தைப் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதி ஒன்றில் அதிகம் விளக்கி விட்டதால் இங்கே மீண்டும் விவரிக்கப் போவதில்லை. இருந்தாலும் ஒன்றுபற்றி மட்டும் அழுத்திக் கூறத் தோன்றுகிறது: தனிநபர் மூலதனம் பின்னே வரும் மூலதன நிறுவனங்களால் அமுக்கி அல்லது அழிக்கப்படும் அபாயம் நிறைய உள்ளது. குழு நல்ல முறையில் நிறுவனத்தை வளர்த்து, மேலும் வருங்கால மூலதன சுற்றுக்களில் தம் மூலதனத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தனிநபர்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது. அதனால் ஆர்வத்துக்கு குழுவின்மேல் உள்ள நம்பிக்கை ஆதரவளித்து உரமிட்டு வளர்க்கும்!

ரஃபே நீடல்மன் என்பவர் டாட் காம் மற்றும் சமூக வலைகள் (social networks) துறைகள் சார்பாகத் தனிநபர் மூலதனத்தைப் பற்றி, "மூலதனம் பெறுவது, பெரும்பாலும் இளையவர்கள் தங்களைவிட மூத்தவர்களை எவ்வாறு மனமயக்கிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான்!" என்று கூறியுள்ளார். இது எல்லாத் துறைகளுக்கும், எல்லாத் தருணங்களுக்கும் பொருந்துவதல்ல. இருப்பினும், மூலதனம் கேட்கும்போது மனமயக்கம் அடையும் அளவுக்கு ஆர்வமளிக்க முயலவேண்டும் என்பதைப் பொதுவான கருத்தாக வைத்துக் கொள்ளலாமே.

மேற்கூறிய விவரங்களிலிருந்து ஆரம்பநிலை நிறுவனங்கள் தனிநபர் மூலதனம் பெறுவதற்கு வேண்டிய முதல் அம்சம் ஆர்வமும் பரபரப்பும் ஊட்டுவது என்பது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com