ஐயோ, அம்மா!
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் தனது வேலையாட்களை மிகவும் அடித்துக் கொடுமைப்படுத்துவான். ஒழுங்காகச் சம்பளமும் தரமாட்டான். எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவர்கள்மீது திருட்டுக் குற்றம் சுமத்தி வேலையை விட்டு அனுப்பி விடுவான். இல்லாவிட்டால் இல்லாத பொருட்களை வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்புவான். அவர்கள் வெறும் கையுடன் திரும்பி வருவார்கள். உடனே வேலையை விட்டு நீக்கி விடுவான்.

ஒருமுறை பக்கத்து ஊரிலிருந்து விஜயன் என்ற இளைஞன் அந்தப் பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவன் மிகவும் நல்லவன். அப்பாவியும் கூட. அதனால் அவனிடம் மிகக் கடுமையாக வேலை வாங்கினான் அந்தப் பணக்காரன். விஜயனை ஏதாவது வாங்கி வரக் கடைக்கு அனுப்புவதற்கு முன் அவனை அழைத்து ஓங்கி ஒரு அறை கொடுப்பான்.

"ஏன் அடித்தீர்கள்?" என்று விஜயன் கேட்டால், "ஏனா, நீ பொருளையோ, பணத்தையோ வழியில் தொலைத்து விட்டால் என்ன செய்வது? நீ கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எச்சரிக்கையாக முன்னதாகவே அடித்தேன்" என்பான் சிரித்துக்கொண்டே. இந்தக் கொடுமைகள் தொடர்ந்தன. பொறுக்கமுடியாத விஜயன் முதலாளியை எதிர்த்துக் கேள்வி கேட்கத் தொடங்கினான். இதனால் அவன் கோபம் கொண்டான். விஜயனை வேலையை விட்டு அனுப்பத் தீர்மானித்தான்.

ஒருநாள் விஜயனை அழைத்து அவன், "டேய், நீ கடைக்குப் போய் 'ஐயோ அம்மா' வாங்கி வா" என்றான். விஜயனும் கடைக்குப் போய் 'ஐயோ அம்மா' வேண்டும் என்றான். "என்னது ஐயோ அம்மாவா? எங்க அம்மாவையா விலைக்குக் கேக்குற, பைத்தியம்" என்று அவனை நையப் புடைத்து அனுப்பினார்கள்.

விஜயன் வெறும் கையோடு வீடு திரும்பினான். உள்ளூர நகைத்த முதலாளி, வெளியே கோபம் கொண்டவனைப் போல் நடித்து, "அடேய், ஒரு பொருளை கடைக்குப் போய்ச் சரியாக வாங்கிவரத் துப்பில்லையே! உன்னை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?" என்று சொல்லி சம்பளம் தராமல் அவனைத் துரத்திவிட்டான்.

வருத்தத்துடன் ஊர்போய்ச் சேர்ந்த விஜயன் நடந்தவற்றைத் தன் தம்பியிடம் சொன்னான். அவன் தம்பி அஜயன் கெட்டிக்காரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. அவன், "அண்ணா, நீ கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு அதே முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்தான்.

பணக்காரனும் அஜயனுக்கு நிறைய வேலை கொடுத்து கசக்கிப் பிழிந்தான். ஆனால் ஊதியத்தை மட்டும் தரவில்லை. பொறுத்துப் பார்த்து கோபம் கொண்ட அஜயன், "ஐயா, இந்த மாதச் சம்பளத்தைத் தாருங்கள். நான் ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டும்" என்றான்.

சம்பளம் கேட்டதும் முதலாளிக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அவனை உடனடியாகத் துரத்திவிட எண்ணினான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சம்பளம் தானே, தந்தால் போச்சு. அதுக்கு முன்னால் நீ கடைக்குப் போய் 'ஐயோ அம்மா' வாங்கி வா" என்றான். அஜயனும் மனதுக்குள் சிரித்தவாறே புறப்பட்டான். அவ்வூரில் உள்ள பூங்காவிற்குச் சென்று ஓய்வெடுத்து விட்டுப் பின் மீண்டும் பணக்காரன் வீட்டை அடைந்தான்.

"என்ன 'ஐயோ அம்மா' வாங்கி வந்தாயா?"

"ஐயா, அது கடையில் கிடைக்கிறது. ஆனால் அதிகப் பணம் கேட்கிறார்கள். 500 ரூபாய் விலையாம்" என்றான் விஜயன்.

முதலாளிக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி என்னதான் செய்கிறான் என்று பார்ப்போம். இல்லாவிட்டால் இவனை அடிமையாகவே வைத்திருப்போம் என்று திட்டமிட்டு, பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான். கடைக்குச் சென்ற அஜயன் இரு சிறிய ஊறுகாய் ஜாடிகளை வாங்கினான். பின் அருகில் உள்ள குளத்திற்குச் சென்றான். அங்குள்ள ஒரு கல்லைப் புரட்டினான். அதன் கீழே தேள், பூரான், அட்டைப் பூச்சி போன்றவை இருந்தன. தேளை ஒரு ஜாடியிலும், பூரானை மற்றொரு ஜாடியிலும் போட்டு அவற்றின் வாயை மெல்லிய துணியால் கட்டினான். பின் வீட்டுக்குப் போய், "ஐயா, இதோ நீங்கள் கேட்டவை" என்றான்.

பணக்காரனுக்கு அந்த ஜாடியைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. "என்ன இது?" என்றான். "நீங்கள் கேட்ட 'ஐயோ அம்மா' இதில் இருக்கிறது. ஜாடியைத் திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான் அஜயன்.

ஜாடியை மூடியிருந்த துணியைப் பிரித்த பணக்காரன், தனது இரு கைகளையும் இரண்டு ஜாடிக்குள்ளும் விட்டான். உள்ளே இருந்த தேளும் பூரானும் சரமாரியாக அவனது கைகளைக் கடிக்கவே, வலி தாளாமல் "ஐயோ அம்மா... ஐயோ அம்மா..." என்று அலறினான் முதலாளி. "ஐயா... இதுவரை நீங்கள் சொல்லி யாரும் வாங்கி வராத ஐயோ அம்மாவை நான் வாங்கி வந்து விட்டேன் என்பதற்காக இப்படி ஆனந்தக் கூத்தாடாதீர்கள். உடம்புக்கு ஆகாது" என்றான் அஜயன் சிரித்துக்கொண்டே.

முதலாளி 'ஐயோ அம்மா' சிகிச்சையில் முற்றிலுமே மாறிப்போனார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!

சுப்புத் தாத்தா

© TamilOnline.com