அயோத்திதாச பண்டிதர்
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் கலங்கரை விளக்கமாக, வழிகாட்டும் ஒளி விளக்காகத் தோன்றியவர் க. அயோத்திதாசப் பண்டிதர். இவர் மே 20, 1845ல் சென்னையில் பிறந்தார். தந்தை கந்தசாமிப் பண்டிதர், கவிஞர், இயற்கை நல மருத்துவரும்கூட. அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன். தன்மீது அன்பு பாராட்டி எழுத்தும் மருத்துவமும் போதித்த குருவான அயோத்திதாச கவிராஜ பண்டிதரின் பெயரையே பிற்காலத்தில் சூட்டிக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பாலி என பல மொழிகளைப் பயின்று தேர்ச்சி பெற்றார். சித்த மருத்துவத்தை முறையாகப் பயின்று சென்னையின் புகழ்பெற்ற மருத்துவரானார். திரு.வி.க. உள்ளிட்ட பலருக்குக் குடும்ப மருத்துவராக விளங்கினார். அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன், ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவர், பரம்பரை சித்த மருத்துவ ஏடுகளோடு, திருக்குறள் பிரதியையும், நாலடியாரையும் பாதுகாத்து வந்தார். அதனைப் பின்னர் தமிழ்ச் சங்கம் உருவாக்கி நடத்திய எல்லிஸ் துரையிடம் அச்சிடக் கொடுத்தார். அவர் பாதுகாத்து வந்த பல சுவடிகள் அயோத்திதாசருக்குக் கிடைத்தன. அவற்றைக் கொண்டு சித்த மருத்துவத் தொழிலை சிறப்பாகக் கைகொண்டார். 'சித்த வைத்திய சிம்ஹம்' என்று மக்களிடையே பெயர் பெற்றார்.

அதேசமயம் 'தாழ்த்தப்பட்டவர்கள்', 'தீண்டத்தகாதவர்கள்' என்று தம்மினத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுவது கண்டு உளம் கொதித்தார். அவர்கள் விடுதலை பெற எல்லோரும் கல்வி பெறுவதே வழி என்றறிந்தார். தம்மின மக்கள் கல்வி பெறப் பாடுபட்டார். அதற்காகக் மிகக் கடுமையாக உழைத்தார். அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக இலவசப் பள்ளிக்கூடங்கள் உருவாக்க முயற்சித்தார். சென்னையிலிருந்து தொழில்நிமித்தம் நீலகிரிக்குப் புலம்பெயர்ந்த அவர், 1870ல் அங்கு 'அத்வைதானந்த சபை' என்ற அமைப்பை நிறுவினார். ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி மதமாற்றத்துக்கு எதிராகச் செயல்பட்டார். நீலகிரியில் வாழ்ந்த தோடர் இனப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். பின் ரங்கூன் சென்று பத்தாண்டுகள் வாழ்ந்தார். அக்காலத்தில் அங்கிருந்த கடைநிலை வேலைக்காரர்களான தேயிலை பறிப்போர், விவசாயக் கூலிவேலை செய்வோர், மரமறுப்போர் ஆகியோரது முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தசரதராமன் என்று பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையும் அவரது மனைவியும் நோயில் மறைந்தனர். பின் தமிழகம் வந்த அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, பாரம்பரிய வைணவ மரபைப் பின்பற்றி மாதவராமன், பட்டாபிராமன், ஜானகிராமன், ராஜாராமன் எனப் பெயர் சூட்டினார். அம்பிகாதேவி, மாயாதேவி எனத் தன் மகள்களுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அத்வைத தத்துவத்தில் அயோத்திதாசருக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் சடங்குகளையும் சாங்கியங்களையும் அவர் வெறுத்தார். அவற்றின் மூலமே உயர்ந்தவர், தாழ்ந்தவர் வேறுபாடு முன்னிறுத்தப்படுவதாகவும், சாதிப் பாகுபாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் உணர்ந்த அவர், மத விடுதலை ஒன்றே மக்கள் விடுதலைக்கு வழி என்பதாக உணர்ந்தார். அதுவே தலித் மக்கள் விடுதலைக்கும், உயர்வுக்கும் வழி வகுக்கும் என வலியுறுத்தினார். 1891ல் 'திராவிட மகாஜன சங்கம்' என்னும் அமைப்பை உருவாக்கினார். அதன்மூலம் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தார். அக்காலகட்டத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் 'வெசிலியன் மிஷன் பள்ளி'யை தலித்களுக்காக நடத்தி வந்தார் அருட்தந்தை டி. ஜான்ரத்தினம் என்பவர். அவருடன் பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ''திராவிடர் கழகம்' என்ற அமைப்பை ஜான்ரத்தினம் நடத்தி வந்தார். அது வெளியிட்ட 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழில் பண்டிதர் முக்கியப் பங்கு வகித்தார்.

தியசாஃபிகல் சங்கத்தின் கொலோனல் ஆல்காட்டுடனான நட்பு பண்டிதர் வாழ்வில் திருப்புமுனை ஆனது. அந்த நட்பு, சென்னையின் மையப்பகுதியில் ஐந்து பஞ்சமர் பள்ளிகள் துவங்கக் காரணமானது. சென்னையில் முதன்முதலில் பஞ்சமர் பள்ளிகள் அமையக் காரணமானவர் அயோத்திதாசர்தான். தமக்கென்றும், தம்மின வளர்ச்சிக்கென்றும் ஓர் இதழை உருவாக்க எண்ணம் கொண்டிருந்த அயோத்திதாசர், 1907ம் ஆண்டில் 'ஒருபைசா தமிழன்' என்ற வார இதழைத் துவக்கினார். "உயர்நிலையும், இடைநிலையும், கடைநிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம்" என ஒருபைசா தமிழன் இதழில் அறிவித்தார் பண்டிதர். சில மாதங்களுக்குப் பின் 'தமிழன்' என்ற பெயரிலேயே அது வெளிவந்தது. கட்டுரைகள், விரிவுரைகள், உரைநடை விளக்கங்கள், கேள்வி-பதில்கள், பெண்கள் பகுதி எல்லாம் அதில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அவை தமிழகத்தின் சமூக அரசியல் போக்கையே மாற்றியமைத்தன.

தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து அறிந்த அறிஞர் அயோத்திதாசர். சித்த மருத்துவமும் முறையாகக் கற்றவர். பௌத்த இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். தொடர்ந்த தனது மத ஆராய்ச்சியால் பௌத்தமதத்தின் மீது அயோத்திதாசருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அவரும் நண்பர் ஒருவரும் ஆல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்ற பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்றுப் புத்தமதம் தழுவினர். தமிழகத்தில் முதன்முறையாகச் சாக்கிய பௌத்தர்கள் சங்கத்தை அமைத்தவர் அயோத்திதாசர். சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் ஏற்படுத்தினார்.

அயோத்திதாசர் பன்மொழி அறிவாளர். இந்தியா, இலங்கை, பர்மா எனப் பயணங்கள் மேற்கொண்டவர். பல குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியவர். 1912-இல் புத்தரின் வரலாற்றை 'புத்தரது ஆதிவேதம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். 'ஸ்ரீ முருகக்கடவுள் வரலாறு', 'அரிச்சந்திரன் பொய்கள்', 'இந்திரர் வேத சரித்திரம்', 'திருவள்ளுவர் வரலாறு', 'யதார்த்த பிராமண வேதாந்த விவரம்', 'விபூதி ஆராய்ச்சி', 'சாக்கிய முனிவரலாறு', 'திருவள்ளுவர் வரலாறு', 'பகலற்ற ஒளி' போன்றவை அவர் எழுதிய முக்கியமான ஆராய்ச்சி நூல்களாகும். அவர் எழுதிய 'வள்ளுவர் ஒரு பௌத்தரே' அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நூலாகும். அந்நூலில் அவர், "திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் 'திரிக்குறள்' என்பதாகும். இதன் மூலநூல் மூவர்மொழியாக அழைக்கப்படும் திரிபேட வாக்கியமாகும். இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள். இது பாலி மொழியில் இயற்றப்பட்டதாகும். தன்ம பீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது. இதன் வழிநூலே திருக்குறளாகும். திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரமதேவர். மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது. சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம். இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம். குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம். சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால். பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது. பின்னரே மற்ற நீதிநூல்கள் தோன்றின. பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால்தான் அவருக்கு நான்முகன் என்று பெயர். தமிழில் தோன்றிய முதல் நீதிநூலும் அதுவே."

"வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும். ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும். மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் "பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்" என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. 'ஆதி பகவன் அருமறை ஓதுமின்' என்று திருமூலரும் கூறியுள்ளார். 'ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல் சோதி பராசக்திதான் பசுவே சொந்தமாகாதோ' என்றும் சித்தர் கூறியுள்ளார். ஆக புத்தமதக் கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே. வள்ளுவர் ஒரு பௌத்தரே!" என்றெல்லாம் அயோத்திதாசர் எழுதியிருந்தார். அது பலத்த விவாதங்களையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. "இந்தியா என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாகக் கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது" என்பதும் பண்டிதரின் கூற்றுத்தான்.

எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், மருத்துவர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகங் கொண்டவராக விளங்கிய அயோத்திதாசருக்கு, எல்லாவற்றையும் விடத் தம்மின மக்களின் விடுதலையே மிக முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்தார். பல கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தினார். மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தபோதும் சளைக்காமல் உழைத்தார். தமது சுயமரியாதச் சிந்தனைக்கு அயோத்திசாரின் சிந்தனைகளே முன்னோடி என்று குறிப்பிட்டுள்ளார் ஈ.வெ.ரா. பெரியார். அதுபோல புத்த தர்மத்தை ஏற்ற முதல் தலித் அறிஞரும் அயோத்திதாசர்தான். அந்த வகையில் இவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். அயோத்திதாசர் 1914 மே 5 அன்று காலமானார். அறிஞர் ஞான அலாய்சியஸ் அவரது நூல்களைத் தொகுத்து மீண்டும் பதிப்பித்துள்ளார். சென்னையில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அயோத்திதாசரின் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 'தமிழ் தேசியத் தந்தை' என்று போற்றப்படும் அயோத்திதாசர் மறக்கவொண்ணாத மாமனிதர்.

(தகவல் உதவி: ஞான அலாய்சியஸ் எழுதிய அயோத்திதாசர் சிந்தனைகள் மற்றும் அயோத்திதாசர் வலைத்தளம்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com