மனச்சாட்சியின் அளவுகோல்
அன்புள்ள சிநேகிதியே

எங்கள் குடும்பத்தில் சகோதர, சகோதரிகள் 5 பேர். என் அப்பாவுக்கு 2 மனைவிகள். மூத்தவருக்கு 2; ஒரு பையன், ஒரு பெண். அவர் இறந்தபிறகு என் அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார் என் அப்பா. எனக்கு ஒரு அண்ணா, ஒரு அக்கா. என் அப்பா சில மாதங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். அப்பாவை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். ரொம்ப நேர்மையானவர். அதிகம் பேசமாட்டார். அம்மா நிறையப் பேசுவார். தர்க்கம் செய்வார். என் அப்பாவின் நேர்மையையும், என் அம்மாவின் பேச்சுத்திறனையும் நான் கொண்டிருக்கிறேன் என்று என் கணவர் சொல்வார். என் அம்மா கல்யாணத்தின்போது பெரியண்ணா, பெரியக்கா இருவரும் அவர்களுடைய தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் ஹைஸ்கூல் படிப்பதற்காக அப்பா அழைத்துக்கொண்டு வந்து விட்டார் என்பதெல்லாம் நான் பின்னால் கேள்விப்பட்டவை.

சின்ன வயதில் எனக்கு அவர்கள் வேற்றுத்தாய் பிறப்புகள் என்ற வித்தியாசம் தெரியாது. அவர்கள் என்னிடம் பாசமாக இருந்தார்கள். நானும் அவர்களிடம் ஆசையாக இருப்பேன். ஆனால் என் அம்மா அவர்களிடம் காட்டும் பரிவில் ஏதோ வித்தியாசம் இருந்ததாக எனக்கு அந்தச் சின்ன வயதில் தோன்றியது. ஏன் என்று புரிபடவில்லை. எனக்குப் பத்து வயதாக இருந்தபோது அக்கா கல்யாணம் ஆகிப் போய்விட்டாள். அந்த அண்ணா ஏர்ஃபோர்ஸில் சேர்ந்துவிட்டார். அவர்கள் அதிகம் வருவதில்லை. அந்த அக்கா தன் முதல் குழந்தை பிரசவத்துக்குக் கூட வரவில்லை. ஆனால் எங்கள் மூன்று பேர் திருமணத்துக்கும் வந்திருந்தார்கள். நான் பெரியவளாகி விஷயம் புரிந்தபோது அவர்கள் மேல் ஒட்டுதல் எனக்கு அதிகம் ஆனது. தொடர்பு அதிகம் இல்லாமல் போனாலும் என் அப்பா இறந்தபிறகு, அவருடைய காரியத்திற்கு ஊருக்குச் சென்றபோது, இரண்டு பேரும் வரவில்லை. தங்கள் பையன், பெண்களுடன் வெளிநாட்டில் தங்கிவிட்டார்கள். அதனால் 'அட்ரஸ் தெரியாது' என்று வீட்டில் சொன்னார்கள். போன வருடம் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாதபோது வந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நிறைய விஷயம் எழுத வேண்டியிருக்கிறது. எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.

இப்போது எனக்கிருக்கும் பிரச்சனை - போன மாதம் எனக்கு மூத்த இருவரும் அவசரமாக ஊருக்கு வந்துவிட்டுப் போகச் சொன்னார்கள். இல்லாவிட்டால் Power of Attorney கொடுக்கச் சொன்னார்கள். அவர்கள் பிசினஸ் செய்பவர்கள். கொடுத்து மாட்டிக்கொள்ளப் போகிறேனே என்று நானே நேரில் போனேன். சொத்து விஷயமாக என்று தெரியும். அங்கே அப்பாவுடைய 2 , 3 டெபாசிட்டில் எல்லாம் முன்னாலேயே கையெழுத்து வாங்கி வைத்திருந்தார்கள். நிலம், வீடு இரண்டிற்கும் என் கையெழுத்து வேண்டியிருக்கிறது. பெரியண்ணன், பெரியக்கா பங்கு எங்கே என்று கேட்டேன். "இதெல்லாம் நாங்கள் உதவி அப்பா சேர்த்தது. அவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. உனக்கே கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் சாப்பாட்டுக்கு இல்லாமல் ஒன்றும் இல்லை. பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். நாங்கள்தான் படிப்புக்கும் கல்யாணத்துக்கும் பிள்ளைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று ஏதோ ஒரு நியாயம் பேசினார்கள். எனக்கு அது அநியாயமாகப்பட்டது. என் அப்பா உயிரோடு இருந்தால் இதுபோல் செய்திருக்க மாட்டார். அவர் உடல்நலம் சரியில்லாதபோது இவர்கள் ஏதோ செய்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னால் இதைப் பொறுக்க முடியவில்லை. கையெழுத்துப் போடாமல் வந்துவிட்டேன்.

நீங்களே சொல்லுங்கள், எல்லாரும் ஒரு தந்தைக்குச் சட்டப்படிப் பிறந்தவர்கள். அவர்களுக்குத் தெரியாமல் பாகம் பிரித்துக்கொண்டு, அவர்கள் கேஸ் போட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை நல்லதா? இதனால் அவர்கள் என்பேரில் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். என் கணவரோ, " நீ ஏன் பிறருக்காகக் கொடிபிடித்து எல்லோருடைய வெறுப்பையும் வாங்கிக் கொள்கிறாய்? உன் பெரிய அண்ணா, அக்கா உன்னிடம் ஏதாவது சப்போர்ட் கேட்டார்களா? உனக்கு மூத்த ரெண்டு பேரும் உன்னையும் ஏமாற்றி, எல்லாவற்றையும் தங்களுக்கேகூட ஏதோ கையெழுத்தைப் போட்டு, மாற்றிக் கொண்டால் உன்னால் எத்தனை வருடம் கோர்ட்டில் போராட முடியும்? அதுவும் இங்கே இருந்துகொண்டு" என்று பொன்மொழிகளை உதிர்க்கிறார். அவருக்கு சொத்தின்மேல் அப்படி வெறி இல்லை. அவர் பிராக்டிகலான ஆசாமி. சுயநலமாக இருந்தால் வெறுக்கப்படலாம். ஆனால் நியாயமாக இருந்தாலும் நம் சொந்தமே நம்மை வெறுக்கிறதே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது.

"கூடப் பிறந்தவங்களுக்கே இப்படிக் குழி வைக்கிறாயே? அந்த ரெண்டு பெரியவங்க உனக்கு என்ன அதிகமாகச் செய்தார்கள், இவர்கள் என்ன செய்யாமல் விட்டார்கள்" என்று என் அம்மாவே என்னைப் போனவாரம் கண்டபடி திட்டிவிட்டார் ஃபோனில். நான் ஏன் இப்படி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று தெரியவில்லை. நியாயம் பேசியதற்கு இந்த அளவு எதிர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் அபிப்பிராயம் என்ன?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே:

நியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு. ஒரு முடிவு எடுக்கவோ அல்லது ஒரு பொருளைப் பங்கிடவோ நமக்கு மொத்த உரிமையும் இருந்து நாம் சமமாக எல்லோருக்கும், சுயநலம் கலக்காமல், ஒரு விளைவை ஏற்படுத்தும் போது பிறர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாமே பிறர் விஷயத்தில் ஒரு நியாயத்தை எடுத்துச் சொல்லும்போது பாதிக்கப்பட்டவரின் விரோதத்தை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அனுபவப்பட்ட பலபேர், "நமக்கு எதுக்கு வீண் விரோதம்!" என்று மனச்சாட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, வெறும் பார்வையாளர்களாகத்தான் இருப்பார்கள். உங்களைப் போலச் சமூக நியாயம் பேசுபவர்களின் அருமையை அவர்களே பாதிக்கப்பட்டவர்களாக ஆகும்போதுதான் உணருவார்கள். உங்களுக்கு மனச்சாட்சியின் அளவுகோல் உயரத்தில் இருக்கிறது. கீழே இறக்க முயற்சி செய்தால் உங்கள் மனமே உங்களுக்கு எதிராக இயங்கும். பலருக்கு சுயநலம்தான் சுயபலம். உங்களுக்கு அப்படியில்லை. உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பலனும் கிடைக்காமல், பிறர் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டீர்கள். உங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாது. ஆனால் ஒன்று. யாரும் உங்களைக் கீழ்த்தரமாக நினைக்க முடியாது. Just be yourself. யாரும் கீழ்த்தரமாக நினைக்க முடியாது.

வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com