கோணங்கி
தமிழ் படைப்புலகில் தமது மொழிநடையால் வாசகர்களை வசீகரித்தவர்கள் வரிசையில், ஓர் தனித்த ஆளுமையுடன் கவிதையைப் போன்ற உரைநடையுடனும், அரூப மொழிகளுடனும் படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் கோணங்கி. இயற்பெயர் இளங்கோ. நவம்பர் 1, 1958ல் கோவில்பட்டியில் பிறந்தார். தந்தை சண்முகமும் ஓர் எழுத்தாளர். அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தினர் எனப் பலர் வந்து செல்வர். இதனால் சிறுவயதிலேயே கோணங்கிக்கு இலக்கிய உலகம் அறிமுகமானது. ஜோதி விநாயகம், எஸ்.ஏ. பெருமாள் போன்றவர்களின் தொடர்பால் பொதுவுடைமை இயக்கத்தின் மீதும் அதன் சித்தாந்தங்கள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. மௌனி, நகுலன், புதுமைப்பித்தன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்றோரது படைப்புகளை வாசித்தார். படிப்பை முடித்த பின் கிராமக் கூட்டுறவுச் சங்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றத் துவங்கினார். தமிழ் மட்டுமல்லாது ரஷ்யன் போன்ற பிறமொழி இலக்கியங்களையும் வாசிக்க வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. முதல் சிறுகதை 'இருட்டு; சிகரம் இதழில் வெளியானது. கவிஞர் பிரம்மராஜன் நடத்திய 'மீட்சி' இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகி கவனம் பெற்றன. சிறுகதை, நாவல் என்று எழுத்தைத் தொடர்ந்தார்.

சிந்தனைக்கும் செயலுக்கும் மாறாக இருந்த கூட்டுறவுச் சங்க வேலையை உதறிவிட்டு ஒரு நாடோடியாகத் தனது பயணத்தைத் துவங்கினார். இந்தியாவின் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அது தந்த அனுபவத்தையும், வாழ்வின் தரிசனங்களையும் எழுத்தில் கொண்டுவந்தார். இவை கதையாவது குறித்து, "பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழுதப்பட்டு இருக்கிறது" என்கிறார் கோணங்கி. பயணத்திட்டம் என்று எதுவுமில்லாமல் பயணிப்பது அவர் வழக்கம். "எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பியவரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும்" என்கிறார்.

கவிதையைப் போன்ற படிமங்களையும், மனதின் நினைவுகளையும் ஜாலங்கள் ஏதுமற்று மொழியாக்குபவர் கோணங்கி. சான்றாக, "கடந்துவந்த கடவுளிடம் சொர்ணப்புறா ஒன்று கேட்டழுதாள் ஊமைப்பெண். தருவதாகச் சொல்லி மற்றொன்றும் வாங்கிச்சென்றார் வாப்பா. சந்தனக்கூடு எடுத்த நாளில் அவளை நோக்கி சொர்ணப்புறா ஒன்று பறந்து வருவதைக் கூரைமேல் பார்த்தான் ஷெனாய் கிழவன். அவன் இசையில் மயங்கி அந்தரத்தில் சிறகடித்தது மஞ்சள் விசிறி" என்ற வரிகளையும், "இடைவிடாத மோனத்திலிருந்த பாம்பு நெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமமும் ஒன்பதாவது கோமள தைவதமும் சுருதி நுட்பம் கூட, யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடி பறவையெனக் குரல் அதிர்ந்து கண்ணாடிப் பந்தாகச் சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்ப்பாய்ந்து கோமளரிஷபமும் தீவிர காந்தாரமும் ஆறாவது தீவிர மத்திமமும் தந்திகள் தழுவி, எதிரெதிர் ராகமும் நாத பேத ஆதாரம் கால பருவங்கள் சுற்றிப் புலர் பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது" என்ற வரிகளையும் சொல்லலாம்.

தன் எழுத்தின் துவக்கம் பற்றிக் கோணங்கி, "எனது கிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளிவரை செல்லும் சிமென்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவதுமாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடுபாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயக்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குரு மலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள். பூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது" என்கிறார்.

"கோணங்கியின் ஆளுமை வியப்பூட்டக்கூடியது. பால்யத்தின் அழியாத சித்திரங்களைத் தனது கதைகள் எங்கும் படரவிட்ட தமிழின் அரிய கதைசொல்லி அவர். கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்டும் என்ற ஆதங்கமும் நிரம்பிய படைப்பாளி. தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சில நிமிஷங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபவர்" என்கிறார் எழுத்தாளரும், நண்பருமான எஸ். ராமகிருஷ்ணன். 'கோப்பம்மாள்', 'கருப்பு ரயில்', 'கழுதைவியாபாரிகள்', 'மாயாண்டி கொத்தனின் ரசமட்டம்' போன்றவை மிகச் சிறப்பான சிறுகதைகள். "கோணங்கியின் 'மதினிமார்கள் கதை' சிறுகதைத் தொகுதி தமிழின் சிறந்த கதைத் தொகுதிகளுள் ஒன்று. அதில் உள்ள கதைகள் வாழ்வின் ஈரம் நிரம்பியவவை. கதை சொல்லும் முறையில் அவர் அற்புதங்கள் நிகழ்த்தியிருப்பார்" என்கிறார் எஸ்.ரா. 'மதினிமார்கள் கதை', 'கொல்லனும் ஆறு பெண் மக்களும்', 'பொம்மைகள் உடைபடும் நகரம்', 'பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்', 'உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை', 'இருள்வ மௌத்திகம்' போன்றவை கோணங்கியின் சிறுகதைத் தொகுதிகளாகும். இவற்றில் 'இருள்வ மௌத்திகம்' தவிர முதல் ஐந்து சிறுகதை நூல்களும் தொகுக்கப்பெற்று 'சலூன் நாற்காலியின் சுழன்றபடி' என்ற தலைப்பில் நூலாகியுள்ளன.

'பாழி', 'பிதிரா' இரண்டும் இவர் எழுதிய நாவல்கள். இவை மொழிநடையிலும், உள்ளடக்கத்திலும் இதுவரை மரபாக இருந்த பலவற்றைத் தகர்த்தவை. புதிய கதை சொல்லும் பாணி, விரிந்தும், கலந்தும், பரந்தும் செல்லும் சுருள்மொழி கொண்டு அந்நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். இலக்கிய உலகின் கவனம் பெற்ற இந்நாவல்கள் பரவலாகப் பேசப்பட்டவையும் கூட.

கோணங்கிக்கு நவீன ஓவியங்களின்மீது அளவற்ற ஈடுபாடு. அதற்காக இந்தியாவிலும் அப்பாலும் பல பயணங்கள் செய்திருக்கிறார். 'கல்குதிரை' என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். அந்த இதழுக்காகக் கடுமையாக உழைத்து ஒரு தவம்போல் தன்னை வருத்திக்கொண்டு வெளியிடுகிறார். தஸ்தாயெவ்ஸ்கி, நகுலன், கார்ஸியா-மார்க்வெஸ் ஆகியோருக்குச் சிறப்பிதழ்கள் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் உரைநடை மரபில் கோணங்கியின் கதை சொல்லல் முறை தனித்த சாயலுடையது. இதற்கு முன் யாராலும் கையாளப்படாதது. அவரது மொழியின் அற்புதப் பிரயோகங்களும், படிமங்களும் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவை மட்டுமல்ல; புரிந்து கொள்ளவும் அரியன.

அதைச் சாதாரண வாசகர்கள் புரிந்து கொள்வது கடினமே. அவற்றைப் புரிந்து கொண்டால், அது உண்டாக்கும் திறப்புகள் பல தளங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியவை என்பதும் உண்மை. மனிதர்களின் வலிகளை, வேதனைகளை, அவலங்களை, ஏக்கங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை அப்படியே வாசகனை உணர வைப்பதில் கோணங்கி தேர்ந்தவர். சிதறுண்ட மனங்களின் வெளிப்பாடாக, அவற்றின் வாக்குமூலமாக அவரது பல கதைகள் அமைந்துள்ளன. தனது வரிகளில் கதை மாந்தர்களை உயிருடன் நடமாட விடுவதில் தேர்ந்தவர். தனக்கு விளம்பரம், புகழ் தேடிக்கொள்வதிலோ, வெகுஜன ஊடகத்துக்காக வளைந்து கொடுப்பதையோ என்றுமே விரும்பாதவர் கோணங்கி. தேடி வந்த பல வாய்ப்புகளைப் புறந்தள்ளி ஒரு நாடோடியாக அலைவதிலேயே விருப்பம் அதிகம்.

"ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக, தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை, காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை, அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது" என்று கோணங்கி சொல்வது அவரது படைப்புலகம் பற்றிய அவதானம் என்று கொள்ளலாம். கோணங்கியின் மூத்த சகோதரர், சிறுகதை ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன். இளைய சகோதரர், நாடக ஆசிரியர், ச. முருகபூபதி. கோணங்கி, சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய உலகின் தனித்துவமிக்க, தவிர்க்க முடியாத படைப்பாளி கோணங்கி.

அரவிந்த்

© TamilOnline.com