தென்றல் பேசுகிறது...
குஜராத்தில் ஆட்டோ ஓட்டுகிறார் ராஜு. ராஜுவின் தாத்தா தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியை வேறொருவருக்கு விற்றுவிட்டார். வாங்கியவரோ நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றிக்கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அந்த நிலத்தை ஒரு தனியார் கார் தொழிற்சாலை கட்டுவதற்காக ஆர்ஜிதம் செய்தது குஜராத் அரசு. அதற்கான இழப்பீடாக 1.9 கோடி ரூபாய்க்கான காசோலை ஒருநாள் ராஜுவிடம் வந்து சேர்ந்தது. "எனது பெற்றோர் எனக்குக் கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில் வந்த எனதல்லாத பணத்தில் நான் வாழ்க்கை நடத்த விரும்பவில்லை" என்று கூறி அந்தக் காசோலையை அவர் திருப்பி அனுப்பிவிட்டார். ராஜுவின் மாத வருமானம் 6,000 ரூபாய்தான். 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்ற ஔவையின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ஒரு சீசனுக்கு வாங்கும் பணத்தைத் தனது முழு வாழ்நாளிலும்கூட ராஜு சம்பாதிக்க வாய்ப்பில்லை. முதலில் ஏலத்தொகை ஒன்று கிடைக்கிறது. பின்னர் விளம்பரத்தில் நடிக்க வருமானம், ஆடையில் விளம்பரச் செய்திகளைத் தாங்கச் சம்பளம், ஆட்டநாயகன் பரிசுகள், ரசிகர்கள் கொட்டும் அன்புப் பரிசுகள், மாநில அரசுகள் தரும் பணமுடிப்பு என்று கிரிக்கெட் ஆட்டக்காரர் மீது சொரியும் தங்கமழையை அளக்க முடியாது. ஆனால், அது போதாதென்று இப்போது சில பிரபலமான, பிரபலமல்லாத ஐபிஎல் வீரர்கள் சூதாட்டத்திலும், அதற்காக விளையாட்டின் போக்கையே மாற்றியமைப்பதிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. புதுடில்லி கோர்ட்டில் ஸ்ரீசாந்த் நீதிபதியின் முன்னால் நின்றபோது அருகில் இருந்த அவரது விசிறியான குட்டிப்பையன் கேட்டது: "ஏன் இப்படிச் செய்தீங்க?". இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அத்தனை பேரையும் நாம் கேட்பது அதேதான்: ஏன் இப்படிச் செய்தீர்கள்?

*****


அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் தழைப்பதற்கான அறிகுறிகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கின்றன. வீட்டு விலை ஏறுகிறது, வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது, நுகர்வோர் நிறைவு அதிகமாகியுள்ளது - இப்படிப் பல சங்கேதங்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய பலம் அதன் புத்தாக்கத் திறன்தான். கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக், சிஸ்கோ என்று எண்ணற்ற துறைகளில் புதியன படைத்து உலகின் அறிவுக் கருவூலமாக அமெரிக்கா முன்னணி வகிக்கிறது. ஆனால், கருத்து அமெரிக்காவில் பிறந்தாலும் அது உருவாகி, உற்பத்தி செய்யப்படுவது சீனாவில் என்கிற நிலைமை அச்சம் தருவதாகும். இதையும் தாண்டி, சென்ற ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியான உணவுப் பொருட்கள் 4.1 பில்லியன் பவுண்டு! அமெரிக்காவின் மிகப் பெரியதும் மிகப் பழமையானதுமான ஸ்மித்ஃபீல்டு ஃபுட்ஸ் கம்பெனியை ஒரு பெரிய சீனக் கம்பெனி வாங்கியுள்ளது. போலி, கலப்படம் என்ற இரண்டின் மிகையும் சீனத்தில் நிரம்பியுள்ளன என்பது உலகறிந்த உண்மை. அப்படி இருக்க, கணிசமான உணவுப் பொருட்களும் அங்கிருந்துதான் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்ற நிலைமை விரும்பத் தக்கதல்ல. சீன அரசின் இரும்புப் பிடியில் தொழிலாளர்கள் குறைந்தவிலைக் கூலிகளாக நடத்தப்படுவதால் கிடைக்கும் விலை அனுகூலத்துக்காக அமெரிக்கா தனது எதிர்காலத்தை அடகுவைத்துக் கொள்கிறதோ என்கிற கவலை எழாமல் இல்லை.

*****


தனது நாட்டைத் தாய்நாடு என்றே குறிப்பிடுவது பல மொழிகளில் மரபு. தமிழிலும் அப்படியே. ஆனாலும் புரட்சிக் கவிஞன் பாரதி 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' எனச் சுவையான மாற்றம் ஒன்றைக் கொண்டுவந்தான். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே' என்று தனது நாட்டைப் பாசத்தோடு நினைவுகூர்ந்தான். தாயை நினைக்கும்போது தந்தையை நினைக்காமல் இருக்க முடியாது. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா? ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று தந்தையர் நாளை அவர்களை மகிழ்விக்கும் வண்ணமாகக் கொண்டாடுவோம். ஏனென்றால் அவர் நமது மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர், வாழ்கிறவர்.

*****


சென்ற இதழில் தொடங்கிய ராணி ராமஸ்வாமி அவர்களின் உற்சாகமான நேர்காணல் இந்த இதழில் நிறைவுறுகிறது. மனிதர் மலத்தை மனிதர் அள்ளுவதும், மனிதக் கழிவால் நிரம்பிய தொட்டியைத் தூய்மை செய்ய இறங்கும் துப்புரவுப் பணியாளர் உயிரிழப்பதும் இன்றைக்கும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கின்ற தமிழகத்தில், மலர்வதி தனது 'தூப்புக்காரி' நாவல் மூலம் ஒரு புதிய குரலாகப் புறப்பட்டிருக்கிறார். கேட்கப்படவேண்டிய குரல் இவருடையது. மலர்வதியின் நேர்காணல் இந்த இதழின் மகுடம். இன்றைக்கு தலித்துக்களின் குரல் கேட்கிறதென்றால் நேற்றைக்கு அதற்கென்று உழைத்தவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் அயோத்திதாச பண்டிதர். அவர் இந்த இதழின் 'முன்னோடி'. அமெரிக்கத் தமிழரின், அவர்தம் மொழியின், இலக்கியத்தின் காலக்கண்ணாடியாக மீண்டும் உருப்பெற்று உங்களை வந்தடைகிறது இந்த இதழ்.

ரமலான் நோன்பு தொடங்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

ஜூன் 2013

© TamilOnline.com