லட்சுமி தமிழ் பயிலும் மையம்: வெள்ளிவிழா
மார்ச் 30, 2013 அன்று அட்லாண்டாவில் லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீநிதியின் இறை வணக்கத்துடனும், கீதா வைத்தீஸ்வரனின் வரவேற்புரையுடனும் தொடங்கிய விழாவில் 25 வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளியை நிறுவிய லக்ஷ்மி சங்கர் அவர்களைக் கௌரவிக்க ரகசிய ஏற்பாடுகளை பள்ளியின் துணைத் தலைவர் ராஜி ராமச்சந்திரனும், பிற ஆசிரியர்களும் செய்திருந்தார்கள். எதிர்பாராத வகையில் அங்கு வந்த லக்ஷ்மியின் கணவர் சங்கர், பள்ளியின் தொடக்ககால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். இவற்றில் திக்குமுக்காடிப் போன லக்ஷ்மி சங்கர், வீட்டில் பேசப்படும் தமிழ் மொழிதான், தமிழ்க் கல்விக்கும் வளர்ச்சிக்கும் அஸ்திவாரம் என்பதை அறிவுறுத்திப் பேசினார்.

அடுத்து நடந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சியில், பரதநாட்டியம், தமிழிசைப் பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவை இடம்பெற்றன. பின்னர், 'கல்விச் செல்வம்', 'இன்று ஒரு தகவல்', 'ஒபாமா தமிழ் நாட்டுக்கு வந்தால்' போன்ற தலைப்புகளில் மேடைப் பேச்சுக்களைக் கேட்க முடிந்தது. சுஜாதா நாதனின் முதலாம் வகுப்பு மாணவர்கள் 'தோப்புக்கரணம்', 'மரம் என்ற நண்பன்' போன்ற நாடகங்களைத் மழலையில் வழங்கியது செவிக்கின்பம். இறுதியாக, பெற்றோர்கள் பங்கேற்ற வார்த்தை விளையாட்டு (விஜய் டிவி 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்') போட்டியை ஹேமா மோகனும், சித்ரா சந்திரசேகரும் நடத்தினர்.
மார்ச் மாதத்தில் நடந்த பேச்சுப்போட்டி, வாசிப்பு மற்றும் உச்சரிப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், தேர்ச்சி பெற்றோருக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கிருஷ்ணாவும், விஷாலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். திவ்யாவின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா.

© TamilOnline.com