அப்போதைக்கு இப்போதே...
நோய், மூப்பு ஆகியவற்றால் மட்டுமின்றி, விபத்திலும் மனிதனுக்கு இறுதி நேர்கிறது. மரணத்துக்கு அஞ்சுவது பயனற்றது. ஆனால், மரணத்திற்குப்பின் தன்னைச் சார்ந்தவர்களை இக்கட்டில் ஆழ்த்தாமல் இருக்கும் பொருட்டாகச் சிலவற்றை முன்கூட்டியே செய்வது புத்திசாலித்தனம். இவற்றைச் செய்வதனால் மரணம் விரைந்து வருமோ என்று எண்ணுவதும் மூடத்தனம்.

Advanced Directives என்று சொல்லப்படும் வாழ்வின் இறுதிக் கட்ட முடிவுகள்பற்றி இங்கே காணலாம். இவை இறுதிக் கட்டம் வருவதற்கு முன்னரே செய்ய வேண்டியவை. ஒருவர் ஆரோக்கியமாகச் சிந்திக்க முடியும்போதே சிலவற்றைச் செய்துவிட வேண்டும். உடல்நிலை சீர்கெட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் போதோ, வலியின் வேதனையில் துடிக்கும்போதோ சரியாகச் சிந்திக்க முடியாது. இந்தக் காலக் கட்டத்தில் அதுவும் அமெரிக்காவில் இவற்றை அறிவது மிகவும் அவசியமானதாகும்.

முதலில் வாழ்வை நீட்டிக்கும் முறைகளைப் பற்றி அறியலாம்.

செயற்கை மூச்சுக் குழாய் மற்றும் சுவாசக்கருவி (Intubation and Artificial Ventilation) மூச்சு விடுவது கடினமாகும்போதோ அல்லது முற்றிலும் நின்றுவிடும்போதோ ஒரு குழாய் வாய்வழியே அல்லது மூக்குவழியே செலுத்தப்பட்டு, அது செயற்கைச் சுவாசக் கருவியுடன் இணைக்கப்படும். இதன் மூலம் பல வாரங்கள் முதல் பல மாதங்கள்வரை வாழ்க்கை நீட்டிக்கப்படலாம். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த நிலை நீடித்தால், கழுத்தில் துவாரம் ஏற்படுத்தி (Tracheostomy) சுவாசக்கருவியுடன் இணைக்கப்படும்.

இருதய-நுரையீரல் உயிர்ப்பித்தல் (Cardio Pulmonary Resuscitation-CPR)

இது ஒருவரின் இதயத் துடிப்பு நின்றவுடன் மார்பில் அழுத்தம் கொடுத்து இதயத்தைத் துடிக்க வைக்கும் முயற்சி. இதைப் பயிற்சி எடுத்த paramedic அல்லது மருத்துவ நிபுணர் செய்வதுண்டு. இந்தப் பயிற்சியைச் சாதரண மக்களும் கற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் அபாய வேளைகளில் உயிர் காக்கலாம்.

உணவுக்குழாய் மற்றும் நரம்பு மூலம் உணவு செலுத்துதல் (Tube Feeding and Parenteral Nutrition) வாய்வழியே அல்லது வயிற்றுப்பகுதி மூலம் குழாய் செலுத்தியோ அல்லது ரத்த நாளங்களின் (intravenous) வழியாகவோ சத்துப் பொருட்களைச் செலுத்தும் முறை இது. இதைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.

சிறுநீரகக் கோளாறுக்கு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் முறை (Dialysis)

வாரம் மூன்றுமுறை ரத்தநாளத்தின் வழி இரத்தத்தைத் தூய்மை செய்யவேண்டும். இதுவும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தேவைப்படலாம்.

இவை தவிர மருத்துவமனையில் சேர்த்து மருந்துகள் மற்றும் பிற சிகிச்சை முறைகள் கொடுக்கப்படலாம்.

நோயாளியின் பங்கு

மேற்கூறிய பலவித சிகிச்சை முறைகள் புரிவதிலும் நோயாளியின் விருப்பத்தை அறிவது மிகவும் முக்கியமாகிறது. சமீபத்தில் அலசப்பட்ட நோயாளியின் கதை அனைவரும் அறிந்ததே. விபத்து அல்லது எதிர்பாராத நோய் தாக்குமானால் அந்த நெருக்கடி வேளையில் முடிவு எடுக்கும் உரிமை நோயாளியையும் அவர் முடிவு எடுக்கும் நிலையில் இல்லையென்றால் நெருங்கிய உறவினரையும் சேர்கிறது. ஒருபுறம் நோயாளியின்மீது இருக்கும் பாசமும் மறுபுறம் இதென்ன இக்கட்டு என்ற கலக்கமும் முடிவு எடுப்பதைக் கடினமாக்கு கிறது. இங்கு கலாசார மோதலும் தவிர்க்க முடியாது. இந்தியாவில் வளர்ந்தவர்கள் பெரும்பாலும் தம் கடமைகள் முடிந்த பின்னர் மரணத்தை ஏற்கத் தயாராகிவிடுகிறார்கள். ஆனால் மேற்கத்தியர் பெரும்பாலும் எத்தனை நாட்கள் ஆனாலும் போராடத் துணிகிறார்கள். இதிலும் வேறுபட்ட நோக்கம் உடையவர்கள் இரண்டு கலாசாரத்திலும் உள்ளனர். இந்த முடிவுகள் அவரவர்களின் சூழல், நம்பிக்கை, ஆசாபாசம் இவற்றை அடிப்படையாகக் கொள்கின்றன. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களிடையேகூட வெவ்வேறு விதமான முடிவுகளை மனம் விரும்பலாம்.

ஆக இவை எல்லாம் ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலையில் சிந்தித்து, கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள். அவசர நிலையில், அதிர்ந்த மனத்தோடு எடுக்கப்பட வேண்டியவை அல்ல. என்றபோதும் இந்த முடிவுகள் நிரந்தரமானவையும் அல்ல. நோயாளி எப்போது வேண்டுமானாலும் தன் தீர்மானங்களை மாற்றிக்கொள்ளலாம். தானே முடிவு செய்ய முடியாத சூழ்நிலையில் நெருங்கிய குடும்ப நபரும் இந்த முடிவுகளை மாற்றலாம். ஆனால் அந்த நிலையில் மருத்துவருக்கும் மற்றவர்களுக்கும் தர்ம சங்கடங்கள் பல ஏற்பட வாய்ப்புண்டு. உறவினர் இல்லாதவர்கள் நோய்வாய்ப்படும் போது 'Conservator' என்று ஒருவரைச் சட்டம் நியமிக்கவும் அவசியம் ஏற்படலாம்.

மேற்கூறிய பலவித சிகிச்சை முறைகளில் நோயாளி தனக்குத் தேவையானவை என்னென்ன என்று மருத்துவரிடம் வரையறுக்கலாம். உதாரணத்திற்கு ஓர் இருதய நோயாளி தனக்கு எல்லா சிகிச்சையும் செய்யலாம், ஆனால் CPR மற்றும் intubation கூடாது என்று சொல்லலாம். அல்லது இந்த முறைகள் அவசரமாகத் தேவைப்பட்டுத் தற்காலிகமாக உயிர்காக்கும் எனில் கையாளலாம் என்றும் வரையறை இன்றி நீடிக்கும் நிலை ஏற்பட்டால் வேண்டாம் என்றும் சொல்லலாம். அதாவது அந்த நோயாளிக்கு 'Pneumonia' ஏற்பட்டு 'intubation' தேவைப்பட்டால் 2 அல்லது 3 நாட்களுக்குக் கருவிமூலம் சுவாசித்து உயிர் தப்பலாம்.

ஆனால், அதே நபருக்கு மூளையில் இரத்தக்கசிவு (hemorrhage) ஏற்பட்டால் உயிர் நீடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சொல்லலாம். இதுபோல் பல உதாரணங்களை அடுக்கலாம். முக்கியமாக உங்கள் முதன்மை மருத்துவரிடம் உங்களின் நோய் விவரங்களையும் அதன் பின்விளைவுகளையும், இந்த உயிர்நீட்டிக்கும் முயற்சிகளின் வெற்றி தோல்வி விவரங்களையும் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக நம் வாசகர்களில் மூத்த தலைமுறையினரைச் சார்ந்தவர்கள் பலர் இருக்கலாம். வயதான பெற்றோரைக் கண்காணிப்பவர்களும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். நெருப்பு என்று சொன்னால் வாய் வேகாது. வருமுன் காப்போம்.

உங்களது விருப்பம் என்ன என்பதை குடும்பத்தினரிடமும் மருத்துவரிடமும் முன்கூட்டியே சொல்லிவைப்பது நல்லது. இதைத் தவிர உடல் உறுப்பு தானம்பற்றியும் கலந்து விவாதித்து, விருப்பத்தை அவர்களிடத்தில் சொல்லி வையுங்கள்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைப்போம்! நடப்பது நலமாகும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com