பேராசிரியர் நினைவுகள்: சொல்வதெல்லாம் உண்மை
தொடங்குமுன், இந்தத் தொடருக்குத் தென்றல் வாசகர்கள் அளித்து வரும் பெரிய ஆதரவுக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சென்ற இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுமொழி அளித்திருக்கும் அம்புஜம் நரசா என்ற வாசகர், 'நீங்கள் திருக்குறளுக்கு உரை எழுதிக் கொண்டுள்ளீர்களா' என்று கேட்டிருக்கிறார். இல்லை. அது என்னால் முடியாத செயல். திருக்குறளுக்கு உரை எழுதும் அளவுக்கு எனக்குத் தகுதி வந்துவிட்டதாக நான் கருதிக் கொள்ளவில்லை. நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருப்பதெல்லாம், என் வழிகாட்டி பேரா. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் தன் திருக்குறள் வகுப்புகளிலும் மற்ற பல சமயங்களிலும் தந்த விளக்கங்களை மட்டும்தான். அவர் கருத்தை என் மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பெருமை எல்லாம் பேராசிரியரையே சாரும்; பிழைகளுக்கு மட்டும் நான் பொறுப்பாளி. என்னை எனக்கு அடையாளம் காட்டும் வாசகர்களுக்கு மீண்டும் நன்றி.

வாழ்க்கை நெறியைச் சொல்லப் புகுந்த திருக்குறளில், எப்படிப்பட்ட ஆச்சரியங்கள் புதைந்திருக்கின்றன என்பதைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். அவருடைய உவமைகள், விரிக்க விரிக்க விரிவதைப் பார்த்தோம்; ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து இன்னோரிடத்தில் முற்றிலும் வேறுபட்டதாகக் காட்சியளித்தாலும், உண்மையில் எந்த முரணும் இல்லை; நாம் அவற்றைப் பார்க்க வேண்டிய கோணம்தான் வேறு என்பதைப் பார்த்தோம். ஒரே ஒரு இணை-முரண் போலக் காட்சியளிக்கும் இரண்டு குறள்களை மட்டுமே எடுத்துக்காட்டாகப் பேசியிருக்கிறோம். இப்படிப் பல இடங்களில் காணப்படும் எதிரெதிரான கருத்துகளின் அடியோட்டமாக ஓடுவது உண்மையில் மாறுபட்ட கருத்தேயன்று என்பதைப் பார்த்தோம்.

உண்மை, வாய்மை என்று அடிக்கடி பேசுகிறோம். இவற்றின் அடிப்படையை எவ்வளவு பேர் 'உண்மையாகவே' உள்ளத்துக்குள் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கேள்விக்குரியது. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டானால், வாக்கினிலே ஒளியுண்டாம்' என்றான் பாரதி. ஒளியில் உண்மையொளி, பொய்யொளி என்று பாகுபாடு இல்லாததால், இந்த இடத்தில் பாரதி பேசுவது, 'உண்மை என்ற தன்மை உள்ளத்திலே ஏற்படுத்தும் ஒளி' என்று பொருள் கொள்கிறோம். அப்படியானால், உண்மை என்பதுதான் என்ன?

இந்தக் கேள்வி பல நூறு ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் ஏசுநாதரை விசாரித்த பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டதாக விவிலியம் (யோவான் 18:38) சொல்கிறது. உண்மை என்பதுதான் என்ன? விடை என்னவோ எளிதானது போல்தான் காட்சி அளிக்கிறது. What is truth என்று கூகுளில் தேடிப் பாருங்கள். இந்தத் தலைப்பில் நடைபெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்கள் மலைப்பையே ஏற்படுத்தும். "Truth, it is said, consists in the agreement of cognition with its object. In consequence of this mere nominal definition, my cognition, to count as true, is supposed to agree with its object. Now I can compare the object with my cognition, however, only by cognizing it. Hence my cognition is supposed to confirm itself, which is far short of being sufficient for truth. For since the object is outside me, the cognition in me, all I can ever pass judgement on is whether my cognition of the object agrees with my cognition of the object." என்று அறிஞர் இம்மானுவேல் கேண்ட் (Immanuel Kant) சொல்வது குறிப்பிடத்தக்கது. 'ஒரு பொருளை, அதுபற்றிய உணர்வோடு ஒப்பிட வேண்டுமானால், பொருளோ எனக்கு வெளியில் இருக்கிறது; அதைப் பற்றிய உணர்வோ எனக்குள்ளே இருக்கிறது. எனவே, ஒரு பொருளும், அதைப் பற்றிய உணர்வும் ஒத்துப்போய், நான் எப்படி அதைப்பற்றி இறுதித் தீர்ப்பாக எதையும் சொல்ல முடியும்? ஒரு பொருள் எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுதான் (உண்மை என்பதை) உறுதிப்படுத்துமானால், அது 'உண்மைக்கு' பேரளவில் போதாது' என்ற அவருடைய கருத்து சிந்திக்கத் தக்கது.

வாழ்க்கை நெறியை உணர்த்த வந்த வள்ளுவர், 'வாய்மை' என்றொரு அதிகாரத்தை வகுத்தார். இந்த அதிகாரத்தில், 'வாய்மை' என்பதன் பொருள் வரையறையாக அவர் சொல்லியுள்ள இரண்டு குறட்பாக்களையும் நாம் மிக நன்றாக அறிவோம். 'வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்,' இது அதிகாரத்தின் முதற் குறள் (291). 'பொய்ம்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்,' இது அடுத்த குறள் (292).

இந்த இரண்டு குறட்பாக்களையும் பலநூறு முறை சொல்லியிருக்கிறோம்; சொல்லக் கேட்டிருக்கிறோம். இதிலுள்ள சிக்கலை எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறோம்? இரண்டாவது குறளாவது, ஏதோ ஒரு மாதிரியாகப் புரிகிறது. 'பொய்ம்மையும்' என்று ஒரு 'உம்மை' போட்டுச் சொல்லியிருப்பதால், பொய், பொய்தான்; அதை வள்ளுவர் பொய் என்றே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது புலனாகிறது. 'வாய்மை இடத்த' என்று சொல்லியிருப்பதால், பொய்ம்மை ஒருநாளும் வாய்மையாகாது; ஆனால் அதற்குப் பக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் இதுவும் அமர முடியும் என்று 'இடத்த' என்ற சொல் மூலமாக அழுத்தந் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் என்பதும் புலனாகிறது.

இப்போது முதற் குறளைப் பார்ப்போம். உலகிலுள்ள அத்தனை சாட்சியச் சட்டங்களும் என்ன சொல்கின்றன? 'உண்மை என்பது நடந்தது கூறல்'. அப்படியானால் வள்ளுவர், 'வாய்மை எனப்படுவ தியாதெனின் எப்போதும் செய்கையின் தன்மை சொலல்' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்! 'யாதொன்றும் தீமை இலாத சொலல்' என்கிறாரே! இதற்கு உரை கண்ட மணக்குடவரோ, "பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதென்றாலும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல்" என்கிறார்.

பரிமேலழகர் இன்னொரு படி மேலே போனார். "'தீமை யாதொன்றும் இலாத' என்று இயையும். 'எனப்படுவது' என்பது, 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற்போல நின்றது. இதனான், நிகழ்ந்தது கூறல் நீக்கப்பட்டது. அதுதானும் தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து" என்று முதற் குறளுக்கு உரை கண்டார். இரண்டாவது குறளுக்கான உரையில் இக்கருத்தை இன்னமும் விரித்துக் கூறினார். "இவை இரண்டு பாட்டானும் தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும், மெய்ம்மை எனவும்; நன்மை பயவாத நிகழாத கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது."

மணக்குடவர் மேலெழுந்தவாரியாகச் சொன்னதைப் பரிமேலழகர் மிக விரிவாகவும் தெளிவாகவும் சொல்கிறார். அதாவது, நிகழ்ந்ததைச் சொல்வது தீமை பயக்காது என்றாலும்; நடந்திராததைச் சொல்வது நன்மையைப் பயக்கும் என்றாலும், இரண்டும் உண்மையே. நன்மையை விளைவிக்காததும், நிகழாததும் ஆனதையும்; தீமையை விளைவிக்கும் நிகழ்ந்ததையும் சொல்வது பொய்ம்மையே.

கன்னத்தில் பளார் என்று அறைவதைப் போல இல்லையா? உண்மையைப் பற்றி நாம் இதுவரை கொண்டிருக்கும் எண்ணங்களையெல்லாம் மாற்றித்தான் அமைக்க வேண்டுமா; அல்லது இதைப் பொருத்திப் பார்க்கத் தனிப்பட்ட சூழல்கள் உள்ளனவா என்றெல்லாம் தோன்றுகின்றதல்லவா?

உண்மையைப் பற்றி கேண்ட் முதலான அறிஞர்கள் சொல்வதை இங்கே en.wikipedia.org பார்க்கலாம். இவர்கள் வாதிப்பதையும், அவற்றின் அடியாழத்தில் தொனிக்கும் 'மெய்ப்பொருளையும்' (அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு) சிந்தித்துப் பார்த்தால், நாம் நம்முடைய கருத்தாக்கத்தை மறுபரிசீலனை செய்துதான் ஆகவேண்டும் போலிருக்கிறது.

'சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை' என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, ஒரு கொலை வழக்கில் சாட்சியமளித்த சிலருடைய சாட்சியங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைந்த மரண தண்டனையையும் பெற்ற இருவர், பத்தாண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததன் பிறகு, குற்றமற்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளி இன்னொருவர் என்பது புலனாகி, இவர்கள் விடுவிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது என்பது அமெரிக்காவின் ஓக்லஹாமாவைச் சேர்ந்த ஏடாவில், டெப்ரா ஸ்யூ கார்ட்டர் என்ற இருபத்தோரு வயதுப் பெண்ணுடைய கொலை வழக்கில் நடந்திருக்கும் உண்மை. சாட்சியங்களின் அடிப்படையில், சட்டத்தை மிக உயரிய முறையில் பராமரிக்கும் அமெரிக்காவிலேயே கூட, ஒரு கொலை வழக்கில், குற்றமற்ற டென்னிஸ் ஃப்ரிட்ஸும், ரான் வில்லியம்ஸும் பத்தாண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார்கள். பிறகு, மரபணுப் பரிசோதனை மூலமாக உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் வளரும் வரையில் அவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்தது; குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற போதிலும், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இழந்த பத்தாண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்? தீர்ப்பளித்த நீதிபதி, தான் 'உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதாகத்தானே' மிக உறுதியாக நம்பினார்! 1980களின் தொடக்கத்தில் நடந்த இக்கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி தண்டனை பெற்றது 2006 வாக்கில்! இருபத்தாறு ஆண்டுகள் நடந்த வழக்கு; பத்தாண்டுகள் அப்பாவிகளுக்குச் சிறை.

அப்படியானால், உண்மை என்பதுதான் என்ன? நாம் எடுத்துக் கொண்டுள்ள குறட்பாக்களை இந்த வழக்குக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருத்த முடியாது; அப்படி முயல்வது பொருந்தாது என்ற போதிலும், நாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் உண்மையிலேயே உண்மைதானா என்ற அதிர்ச்சிகரமான கேள்வியை இந்த வழக்கு ஏற்படுத்துகிறது அல்லவா? நான் காட்டியிருப்பது ஒரே ஒரு எடுத்துக்காட்டைத்தான். இதை பல திசைகளில் விரிக்க முடியும் என்றாலும், நம் சிந்தனையை ஒரு திசையில் செலுத்துவதற்காக இந்த உதாரணத்தைச் சொல்லி, 'எது உண்மை' என்ற அடிப்படைக் கேள்வியை இப்போது உங்கள்முன் வைத்துவிட்டு, அடுத்த மாதம் வரையில் விடைபெறுகிறேன்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com