சகுந்தலா தேவி
'மனிதக் கணினி' எனப் புகழப்பட்டவரும், கணினியை விட வேகமாகக் கணக்குகளைச் செய்து காட்டி பிரமிப்பு ஏற்படுத்தியவருமான கணித மேதை சகுந்தலா தேவி (83) பெங்களூருவில் காலமானார். நவம்பர் 04, 1939 அன்று கர்நாடகாவில் பிறந்த சகுந்தலா தேவி, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். தந்தை சர்க்கஸ் வித்தைக்காரர். அவரிடம் சிறுவயது முதலே சீட்டுக் கட்டு வித்தைகள், எண் புதிர்களைப் போடக் கற்றார். வளர வளர அவரது திறமை வலுப்பட்டது. முறையான கல்வியைப் பெற இயலவில்லை என்றாலும் தாமாகவே முயன்று உழைத்துத் தம் திறமைகளை வளர்த்துக் கொண்டார். பல மேடை நிகழ்ச்சிகளில் தமது திறமையை வெளிப்படுத்தினார். அதிக இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்குக் கூட மிகக்குறுகிய நேரத்தில் விடை காண்பதில் சகுந்தலா தேவி வல்லவர். மைசூர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை இவரது திறமையைக் கண்டு வியந்து அங்கீகரித்தன. 1977ல் ஒரு நிகழ்ச்சியில் 201 இலக்கங்களைக்கொண்ட ஓர் எண்ணைக் கொடுத்து அதன் 23வது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். சில விநாடிகளில் அதற்கு பதில் சொல்லிக் கேட்டோரை வியப்பில் ஆழ்த்தினார் சகுந்தலா தேவி. 1980ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில், 13 இலக்கம் கொண்ட இரு எண்களை 28 வினாடிகளில் பெருக்கி விடை கூறினார். இத்தகைய சாதனைகளுக்காக 'கின்னஸ்' புத்தகத்திலும் இடம் பிடித்தார். ஜோதிடம் மற்றும் எண்கணிதத்தில் தேர்ந்த அவர் அது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார். 'Fun with Numbers', 'Astorology for you', 'Puzzles to Puzzle You', 'The Book of Numbers', 'In the Wonderland of Numbers', 'Awaken the Genius in Your Child' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி, சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டார். அவரது மரணம் இந்தியாவின் பேரிழப்பு.



© TamilOnline.com