சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா?
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு நோற்று வழிபடும் வழக்கம் நன்கு தெரிந்ததே. ஆயினும் ஈராயிரம் ஆண்டுகள் முன்பு சங்க காலத்தில் இதுபோல் வழக்கம் இருந்ததா என்று நாம் எண்ணலாம்.

சங்கத் தொகைநூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து என்னும் நூலின் ஒரு பாடல் அதுபோன்ற ஒரு வழக்கம் இருப்பதைக் கூறுகிறது. பதிற்றுப்பத்து என்னும் நூல் அதன் பெயர் குறிப்பதுபோல் பத்துப் பாடல்களின் பத்துத்தொகுதி. ஒவ்வொரு பத்தும் சேரமன்னன் ஒவ்வொருவன்மேல் பாடியது. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பாட்டுக்குரிய சேரன், அச்சேரனின் பெற்றோர் பெயர், அவனுடைய வீரப்போர்க் குறிப்பு, பாடியவர், பாடியவர்க்கு அளித்த பரிசில் போன்ற அரிய செய்திகளைக் கொண்டிருப்பதால் பதிற்றுப்பத்து வரலாற்று ஆய்வுக்கு மிக உதவியானதொன்று.

இந்தத்தொகுப்பில்தான் சேரனொருவன் புலவர் ஒருவர்க்கு மலைமேல் நின்று கண்ணுக்கெட்டிய வரை உள்ள நாடு பரிசில் அளித்தது காண்கிறோம். அப்புலவர் கபிலர், மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன்! பெற்றோர் பெயரைக் குறிக்கும்பொழுது சில அரிய இனிய பெயர்களையும் காண்கிறோம். நல்லினி என்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாருக்குப் பெயர் இருந்ததை இரண்டாம் பதிகத்தில் காண்கிறோம்; இது மாலினி சாலினி என்னும் பெயர்கள்போல் அமைந்திருப்பதை உடனே உணரலாம்.

நாம் காணும் பாட்டு சேரலாதனுக்குப் பதுமன்தேவி ஈன்ற மகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் புலவனைக் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் பாடியது. அது நான்காம் பதிகத்தின் முதற்பாட்டாகும்.

இதில் திருமாலின் கோயிலில் நிகழும் சீரிய காட்சியைக் காண்கிறோம்.

தலைமேற் கைசுமந்து வேண்டும் பேரொலி!

"குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல்"
(பதிற்றுப்பத்து: 31:1-3)

[தலை மணந்து - நெருங்கி, நிரம்பி; கெழு - நிரம்பு;
ஞாலம் - உலகம்; மாந்தர் - மக்கள்; பூசல் - ஓசை]

குன்றுகள் நெருங்கிப் பலகடல்கள் சூழ்ந்த மண் நிரம்பிய உலகின் மக்கள் பலரும் ஒரே நேரத்தில் கூடித் தம் தலைமேல் கைகூப்பிச் சுமந்து வேண்டிப் பாடும் ஓசை கேட்கிறது கோயிலில்.

"அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்ப"
(பதிற்றுப்பத்து: 31:3-4)

[மாதிரம் - திசை; நனந்தலை - அகன்ற இடம்]

'அன்பர்களின் வேண்டல் ஓசை திசைகளின் நால்வேறு பகுதிகளிலும் உள்ள அகன்ற இடத்தில் ஒருங்கே எழுந்து ஒலிப்பத்' திருமாலின் கோவில் அலைமோதுகிறது.

அப்படியென்றால் அது மிகவும் புகழ் வாய்ந்த கோவிலாக இருக்கவேண்டும். பாட்டில் என்ன கோவில் என்ற நேரடிக் குறிப்பில்லை; ஆயினும் பழைய உரையாசிரியர் ஒருவர் அது திருவனந்தபுரம் என்கிறார். அந்தத் திருவனந்தபுரம் ஆடகமாடம் என்று சிலப்பதிகாரத்தில் வழங்குகிறது.

"ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்" என்று திருமால் கிடந்தகோலத்தில் யோகத்துயிலில் ஆழ்ந்திருப்பதைச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் சொல்லும்.

கோவிலில் மணியடிக்கும் ஓசை

"தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென"
(பதிற்றுப்பத்து: 31:5)

தெளிந்தஓசையை உடையதும் உயர்தரமுள்ளதாக வடித்ததுமான மணியை அடிப்போர் 'கல்' என்று ஓசை எழுப்ப அந்தத் திருமால் கோவிலில் இன்னும் மங்கலவொலி நிரம்பி இருந்தது.

பட்டினி இருந்து பனிநீரில் குளிப்பு

"உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி"
(பதிற்றுப்பத்து: 31-6)

[பைஞ்ஞிலம் - மக்கள்தொகுதி; துறை - நீர்நிலை;
மண்ணி - நனைந்து]

உண்ணாமல் பட்டினி கிடந்து நோன்பு நோற்ற மக்களின் தொகுதி குளிர்ந்த நீரிலே குளித்துள்ளார்கள்.

அடுத்து அந்தத் திருமாலின் தோற்றத்தைப் பாடுகிறார் காப்பியனார்.

திருமகள் பொருந்திய மார்பும் துளசிமாலையும்

"வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கற் செல்வன்"
(பதிற்றுப்பத்து: 31:7-9)

[ஊது - குடி; தார் - மாலை; ஞெமர் - பரவு, பொருந்து;
அகலம் - மார்பு; திகிரி - சக்கரம்; குரல் - கொத்து;
துழாய் - துளசி; அலங்கல் - மாலை]

'வண்டு தேன்குடிக்கும் பூக்களால் தொடுத்த பொலிகின்ற மாலைசூடிய இலக்குமி என்னும் திருமகள் பொருந்திய மார்பும் கண்ணைக் கவரும் சுடருடைய சக்கராயுதம் என்னும் ஆழிப்படையும் மணம் கமழும் கொத்தான துளசி மாலையையும் உடையவனுமாகிய திருமால்'' என்று கண்ணுக்கு இனிய கடவுட்காட்சியைப் பாடுகின்றார் புலவர் காப்பியனார்.

திருமாலின் நெஞ்சில் திரு என்னும் இலக்குமி குடியிருப்பது தெரிந்ததே. பெரியாழ்வார் "வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு" என்று திவ்வியப் பிரபந்தத்தில் பல்லாண்டு வாழ்த்துகின்றார்.

இவ்வாறு திருமாற்கோவிலில் வழிபட்டு அன்பர்கள் தத்தம் ஊருக்குத் திரும்புவதை அடுத்துக் காண்கிறோம்.

"அலங்கற் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர"
(பதிற்றுப்பத்து: 31:7-9)

[சேவடி - சிவந்த அடி; பரவி - பாடி; துஞ்சு பதி - தங்கும் ஊர்]

"செல்வனாகிய திருமாலின் சிவந்த திருவடிகளைப் பாராட்டிப் பாடி நெஞ்சில் நிறைந்த மகிழ்ச்சியோடு தாங்கள் தங்கும் ஊருக்கு மீண்டும் பெயர்கிறார்கள்" என்று வழிபாட்டின் நிறைவைக் காண்கிறோம்.

மேலே ஏகாதசி நாளென்று குறிப்பாகச் சொல்லாவிடினும் திருமாலை வழிபடப் பட்டினி நோன்பு கிடந்து எல்லாஊரிலிருந்தும் வந்து திரண்டு கேரளத்துத் திருவனந்தபுரத்துப் பதுமநாபன் கோவில்போலும் ஒரு பெரிய கோவிலில் பெரும்பூசலோடு கூடிவழிபடுவதைக் காணும்பொழுது நமக்கு இன்று திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு மக்கள் பட்டினிநோற்று அதிகாலையில் குளிரில் குளித்து வாசல் திறக்கக் காத்திருந்து வணங்குவதைக் காட்டுகிறது.

எப்படியாகிலும், வைகுண்ட ஏகாதசிக்குப் பின்பற்றும் வழிபாட்டு முறை மிகப் பழையது என்று மேற்கண்ட பதிற்றுப்பத்துப் பாட்டிலிருந்து தெரிகிறோம்.

பெரியண்ணன் சந்திரசேகரன்
அட்லாண்டா

© TamilOnline.com