ரா.பி. சேதுப்பிள்ளை
"செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்று கவியோகி சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. திருநெல்வேலியை அடுத்த ராசவல்லிபுரத்தில் மார்ச், 2, 1896ல், பிறவிப்பெருமான் பிள்ளை-சொர்ணம்மாளுக்கு மகனாக இவர் பிறந்தார். மணமாகி நீண்டகாலம் ஆகியும் மகப்பேறு வாய்க்காமல் இராமேஸ்வரத்தில் உள்ள இறைவனை வேண்டிப் பிறந்த குழந்தை என்பதால் பெற்றோர் 'சேது' என்று பெயரிட்டனர். திண்ணைப் பள்ளியில் கற்ற சேது பின்னர் அருணால தேசிகர் என்பவரிடம் அடிப்படை இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் இண்டர்மீடியட் படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமிழார்வமும் ஆராய்ச்சி வேகமும் கொண்டிருந்த சேதுப்பிள்ளைக்குப் பச்சையப்பன் கல்லூரிச் சூழல் ஆர்வத்தை அதிகரித்தது. படித்து முடிந்ததும் பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கினார். கூடவே சட்டக் கல்வியும் பயின்றார். சட்டப்படிப்பை முடித்தபின் திருநெல்வேலி சென்று வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். ஜானகி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த பிள்ளை, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழார்வத்தால் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.

சேதுப்பிள்ளையின் தமிழ்த் திறனையும், ஆராய்ச்சி அறிவையும் கண்டு வியந்த அண்ணாமலை அரசர், தனது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். கா. சுப்ரமண்யப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலானந்த அடிகள் போன்ற பெரும் அறிஞர்கள் அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றி வந்தனர். அதனால் ஆர்வத்துடன் அவ்வழைப்பைச் சேதுப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். அது, அவரது வாழ்க்கையின் திருப்புமுனையானது. பேச்சுத் திறனாலும், நுண்மாண் நுழைபுலத்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது நன்மதிப்பைப் பெற்றார் சேதுப்பிள்ளை. மாணவர்களுக்குச் செந்தமிழ் ஆர்வத்தை ஊட்டினார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் அங்கு திறம்படப் பணியாற்றிய பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றும் வாய்ப்பு வரவே, அதனை ஏற்றுக் குடும்பத்துடன் சென்னைக்குப் பெயர்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறைத் தலைவராக பேரா. வையாபுரிப் பிள்ளை பணியாற்றிய காலம் அது. சேதுப்பிள்ளையின் வரவால் மனம் மகிழ்ந்த அவர், பல முக்கியப் பொறுப்புகளை சேதுப்பிள்ளையிடம் கையளித்தார். குறிப்பாக வையாபுரிப் பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை பெரிதும் உழைத்தார். வையாபுரிப் பிள்ளையின் ஓய்வுக்குப்பின் சேதுப்பிள்ளை ஆராய்ச்சிப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு நெறியாளராக விளங்கிப் பல ஆய்வுக்கட்டுரைகள் உருவாகக் காரணமானார். சேதுப்பிள்ளையின் அயராத முயற்சியினால் 'திராவிடப் பொதுச்சொற்கள்', 'திராவிடப் பொதுப்பழமொழிகள்' என்ற இரு நூல்கள் பல்கலைக்கழகம் மூலம் வெளியாகின. பாடம் நடத்தியது மட்டுமல்லாமல், எழுத்து, பேச்சு போன்றவற்றிலும் பிள்ளை வல்லவர். ஓய்வு நேரத்தில் மாணவர்கள், பேராசிரியர்களின் அழைப்பை ஏற்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி போன்றவற்றுக்குச் சென்று மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தித் தமிழார்வம் பெருக்கினார். சிலம்பு, கம்பராமாயணம், குறள் மூன்றிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் பிள்ளை என்பதால் மாணவர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் அவரது உரையைக் கேட்க வந்தனர்.

பரவலாகத் தமிழ்ச் சமுதாயம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகமெங்கும் பயணம் செய்து இலக்கிய, சமயச் சொற்பொழிவுகளை ஆற்றினார் சேதுப்பிள்ளை. மக்களிடையே சமய இலக்கியம் வளர்த்தார். குறிப்பாக கம்பராமாயணம் குறித்து மூன்றாண்டுகள் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் இவர் ஆற்றிய உரை அக்கால அறிஞர்கள் பலரால் பாராட்டப்பட்ட ஒன்றாகும். சென்னையில் 'கம்பன் கழகம்' உருவாகப் பிள்ளையின் சொற்பொழிவால் விளைந்த தாக்கம் மிக முக்கியமானதாய் அமைந்தது. அதுபோல கந்தகோட்ட ஆலய மண்டபத்தில் இவர் தொடர்ந்து ஐந்தாண்டுகள் நிகழ்த்திய கந்தபுராண விரிவுரை குறிப்பிடத்தக்க ஒன்று. இது தவிர கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகளும், தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் திருக்குறள் வகுப்பைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் பிள்ளை நிகழ்த்தியிருக்கிறார்.

"சிலப்பதிகாரம், கம்பராமாயணம் ஆகிய காப்பியங்களையும், திருக்குறள் போன்ற பேரிலக்கியத்தையும் இந்நூற்றாண்டில் மாணவரும் மற்றையோரும் எளிதிற் கற்றுக்கொள்ளும்படி எழுச்சியூட்டியவர் ரா.பி. சேதுப்பிள்ளை" என்கிறார் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன். "பேராசிரியர் சேதுப்பிள்ளை என்பால் காட்டிய நட்பும் அன்பும் தமிழ்க் கலைகளில் ஈடுபடுவதற்கு எனக்கு ஒரு தனியாற்றலை அளித்தது" என்கிறார் ஈழத்துப் பேரறிஞர் தனிநாயக அடிகள். "தமிழ்ப்பகைவர்கட்குத் திரு. சேதுப்பிள்ளை அவர்களின் பேச்சும் எழுத்தும் அறைகூவலாக அமைந்திருந்தன. பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் எக்கருத்தையும் எளிதில் அழகாக எடுத்து வைக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்களில் சேதுப் பிள்ளையும் ஒருவர்" என்கிறது அக்காலத்தின் புகழ்பெற்ற நம்நாடு இதழ்.

ரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை தனித்தன்மை வாய்ந்தது. அவரது செந்தமிழ் நடையில் அடுக்கு மொழிகளும் அலங்காரச் சொற்களும் சொல்லழகுக்கும், பொருளழகுக்கும், தொடையழகுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும். மேலும் படிக்கத் தூண்டும். 'நெல்லையிலிருந்து தில்லைக்கு', 'கங்கை வேடனும் காளத்தி வேடனும்', 'ஒருசடையும் திரிசடையும்', 'காதலும் கற்பும்', 'பயிர் வண்டும் படர்கொடியும்', 'ஆண்மையும் அருளும்' போன்ற வித்தியாசமான கட்டுரைத் தலைப்புகளால் வாசகர்களை ஈர்த்தவர். "அம்பட்டன் வாராவதியின் மூலம் ஹாமில்டன் வாராவதிதான்; திண்டிவனம் என்பது ஒரு காலத்தில் புளியங்காடாக விளங்கியது; ஒப்பிலியப்பன்தான் பிற்காலத்தில் உப்பிலியப்பன் ஆனான்" போன்ற வரலாற்றுத் தகவல்களைத் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார். கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், பதிப்பு நூல்கள் என மொத்தம் 21 நூல்களைப் படைத்துள்ளார் சேதுப்பிள்ளை.

சென்னை வானொலி உட்பட வானொலிகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன. அவர் எழுதிய கட்டுரை நூல்கள் பதினான்கு. முதல் கட்டுரை நூல் 'திருவள்ளுவர் நூல் நயம்' குறளின் சிறப்பை விளக்குவது. 'சிலப்பதிகார விளக்கம்', 'தமிழகம் ஊரும் பேரும்', 'சொல்லாராய்ச்சி', 'வீர மாநகர்', 'ஆற்றங்கரையினிலே', 'கடற்கரையினிலே', 'செஞ்சொற் கவிக்கோவை' போன்ற நூல்கள் அவரது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுவன. தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களை 'தமிழகம் ஊரும் பேரும்' நூலில் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார். 'ஆற்றங்கரையினிலே' கல்கியில் தொடராக வெளியானது. காஞ்சிபுரம் முதல் கதிர்காமம் வரையிலான 48 ஊர்களின் பழஞ்சிறப்பைக் கூறும் நூல் அது. 'கடற்கரையினிலே' கம்பர், வள்ளுவர், இளங்கோ போன்ற அறிஞர்கள் மீண்டும் வந்து கடற்கரையில் உரையாற்றுவது என்ற கற்பனையில் எழுதப்பட்டது. 'தமிழின்பம்' சாகித்ய அகாதமி பரிசு பெற்றதாகும்.

தமிழலக்கியத்தின் மறுமலர்ச்சிக்குப் பாட்டால் வழிகண்டார் பாரதியார். பதிப்பால் வழிகண்டார் உ.வே.சா; பத்திரிகையால் வழிகண்டார் திரு.வி.க. எழுத்தாலும் பேச்சாலும் வழிகண்டவர் சேதுப் பிள்ளை என்று கூறலாம். "சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது" என்று சோமலெ கூறுவது மிகையன்று. பிள்ளையின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, 1950ல் தருமபுரம் ஆதீனகர்த்தர் 'சொல்லின் செல்வர்' என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார். சென்னைப் பல்கலையில் இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றபோது எடுத்த விழாவில் சேதுப்பிள்ளைக்கு டி.லிட். பட்டம் வழங்கப்பட்டது.

அண்ணாமலை, சென்னை எனத் தாம் பணியாற்றிய இரண்டு பல்கலைக்கழகங்களிலும் ரூ 25000/- தொகையை அளித்து தமிழ் ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் நிகழக் காரணமாக அமைந்த முன்னோடி சேதுப்பிள்ளை அவர்கள்தாம். சென்னைப் பல்கலையின் முதல் தமிழ்ப் பேராசிரியரும் அவர்தான். மேலும் பல்வேறு தமிழ் ஆராய்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த வேளையில், திடீரென எதிர்பாராது ஏப்ரல் 25, 1961 அன்று 65ம் வயதில் காலமானார் சேதுப்பிள்ளை. பிள்ளையவர்களின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசு அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது.

(தகவல்: செந்தமிழ்ச் செல்வி, ரா.பி. சேதுப்பிள்ளை நினைவு மலர்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com