பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம்
தமிழகத்து முருகன் ஆலயங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது பழனி. இதற்குத் திருவாவினன்குடி என்ற பெயருமுண்டு. முருகனின் ஆறுபடைத் தலங்களுள் இத்திருக்கோயில் மூன்றாவதாகும். இவ்வூருக்குத் திண்டுக்கல்வரை ரயிலில் சென்று பிறகு சாலை வழியே செல்லலாம். பிற ஊர்களிலிருந்து சாலை வழி உண்டு. சித்தர் போகரால் நவபாஷாண மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிலாரூபம் இங்கு மூலவராக இருந்தது. அது அபிஷேக ஆராதனைகளில் கரைந்து குறையவே, அதே முறையில் மீண்டும் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சித்தர்களுள் பேராற்றல் மிக்கு விளங்கிய போகர் மக்களின் நோய் தீர்த்து ஆன்மீகத்தைப் புகட்டியவர். அது நெடுங்காலம் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் நவபாஷாணம் கொண்டு முருகனின் சிலாரூபத்தை வடித்தார். இம்முருகனுக்குச் செய்யப்படும் அபிஷேக நீரை உட்கொள்பவர்கள் நோய் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. அர்த்தநாரி என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், இந்த அபிஷேக நீரை அருந்தி, நாட்பட்ட வயிற்றுவலி நீங்கினார் என்பது வரலாறு.

பழம் பெறாது கோபித்துச் சென்ற முருகனைச் சிவனும், உமையும் சமாதனம் செய்து, "உனக்கு வேறு பழம் வேண்டுமோ, பழத்தின் சுவை போல உயிர்களிடத்தே பிரிவற நிற்கும் ஞானப்பழம் நீ" என்று அழைத்ததால் இத்தலம் 'பழம் நீ' என்றாகி, பின்னர் 'பழனி' ஆனது என்பது வரலாறு. பழனங்கள் சூழ்ந்துள்ளதால் 'பழனி' என்றொரு கருத்தும் உண்டு. அருணகிரிநாதர், நக்கீரர், பாம்பன் சுவாமிகள் எனப் பலராலும் பாடப்பட்ட தலம் பழனி. இங்குள்ள சிறப்புமிகு தீர்த்தம் சரவணப் பொய்கை. இது புராதன கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. இதற்கு மேற்கே இருகல் தொலைவில் ஷண்முக நதி உள்ளது. பாலாறு, வரத்தாறு, பொருந்தாறு, சுருளியாறு, பச்சையாறு எனப்படும் நதிகள் இணைந்து 'ஷண்முக நதி' என்ற பெயரில் விளங்குகிறது. இது, இத்தலத்தின் புனித தீர்த்தமாக உள்ளது.

மேற்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. 450 அடி உயர மலையில் கோயிலுக்கு 697 படிகள் உள்ளன. முதலாவதாக மலையடிவாரத்தில் பாத விநாயகர் கோயிலை வலம் வந்து, பின் கிரிவலம் செய்து பின்னர் முருகனை வணங்கிச் செல்வர். கிரிவலம் செல்லும் பாதையில் சந்நியாசியப்பன், நாச்சியப்பன் முதலியோர் ஆலயங்கள், அழகிய மண்டபங்கள், விடுதிகள், இசைப்பள்ளிகள், நந்தவனங்கள் ஆகியவை காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து உள் நுழைந்தால் பல சன்னதிகள் நம்மை வரவேற்கின்றன. அழகான மகா மண்டபம், பக்தர்கள் இருமருங்கிலும் இருந்து தரிசிக்குமாறு எழிலுற அமைந்துள்ளது. மண்டபத்தில் 12 கற்றூண்கள், இடது பக்கம் கல்மேடை மீது நடராஜர், சிவகாமி உருவங்களைத் தொடர்ந்து பள்ளியறை அமைந்துள்ளது. ஷண்முகநாதர் திருச்சன்னதியை அடுத்து திருவுலாப் போதரும் சின்னக் குமரர் திருச்சன்னதி, பின் முருகப் பெருமான் சன்னதியை அடையலாம். புன்னகை தவழும் முகத்துடனும், கனிவான பார்வையுடனும், கையில் ஞான தண்டமேந்தி எழில் காட்சி தருகிறான் திருக்குமரன். முருகனை வடிவமைத்த போகருக்கும் இங்கே தனிச்சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகனின் கருவறை வெளிப்புறச் சுவர்களில் பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படையிலும், அகநானூற்றிலும், சிலம்பிலும், சங்க இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தலம் கொங்குச் சோழர்களாலும், நாயக்கர்களாலும் ஆளப்பெற்று பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கை அதிகாரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்க்கடவுள் என்னும் சிறப்புமிக்க முருகக் கடவுளுக்கு தமிழில் 108, 1008 போற்றித் துதிகள் மூலம் அர்ச்சனை செய்யப்படுகிறது.

கந்த சஷ்டி, தைப்பூசம், அக்கினி நட்சத்திரம், சித்திரை, கார்த்திகை, பங்குனி போன்ற பெருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பூசத் திருவிழாவிற்கு கடல் கடந்தும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. பழனி முருகனைப் படியேறிச் சென்று தரிசிக்கலாம். இழுவை ரயிலும் விடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. வேதாகம பாடசாலை, தேவார இசைப் பயிற்சிப் பள்ளி போன்றவை இங்கு செயல்படுகின்றன. நிர்வாகத்துக்குட்பட்டு பள்ளி, கல்லூரி, சித்த மருத்துவமனை, கருணை இல்லம் போன்றவை நன்முறையில் இயங்கி வருகின்றன.

திருப்புகழ் பாடல்பெற்ற தலங்களில் மிக அதிகமாக, 96 பாடல்கள் பெற்ற தலம் பழனிதான். எப்போதும் காவடியைத் தூக்கிக் கொண்டு, பக்தர்கள் அரோகரா கோஷமிட்டுக் கொண்டு செல்லும் காட்சி காண்பதற்கினியது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com