பெருமாள் முருகன்
புனைவிலக்கியத்தில் வட்டார வழக்குப் படைப்புகளுக்கு முக்கிய இடமுண்டு. கி. ராஜநாராயணன், ஆர். ஷண்முகசுந்தரம், பூமணி, பொன்னீலன் போன்றோர் இவ்வகைமையில் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் வரிசையில் வைத்து மதிப்பிடத் தக்கவர் பெருமாள் முருகன். கொங்கு வட்டார வழக்கைக் கொண்டு படைப்புகளைத் தந்துவரும் பெருமாள் முருகன், திருச்செங்கோட்டை அடுத்துள்ள கூட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெருமாள், தாய் பெருமாயி. பள்ளியில் படிக்கும்போதே வாசிப்பார்வம் வந்து விட்டது. திருச்சி வானொலியில் வாரந்தோறும் ஒளிபரப்பான 'மணிமலர்' சிறுவர் நிகழ்ச்சிக்குப் பாடல்களை எழுதி அனுப்பினார். அவை ஒலிபரப்பாகி இவரை உற்சாகப்படுத்தின. நூலகங்களுக்குச் சென்று படித்தார். வாசிப்பார்வம் அதிகரிக்கவே, குடும்பத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பதிப்பகங்களுக்கே எழுதி, புத்தகம் வரவழைத்துப் படித்தார். குறிப்பாக, கண்ணதாசன் எழுத்துக்களில் தீவிர ஈடுபாடு. கவிதைக் காதலால் மரபு, புதுக் கவிதைகளை எழுதினார். எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. சந்தித்த மனிதர்கள், வாழ்க்கை அனுபவங்கள் எனப் பலவற்றையும் எழுத்தில் கொண்டு வர ஆரம்பித்தார். முதல் நாவலாக 'ஏறுவெயில்' வெளியானது. கட்டட வேலைக்காக விவசாய நிலத்தை விட்டுப்போன குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன, எவ்விதமான சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பவற்றை அந்நாவலில் சித்திரித்திருந்தார் பெருமாள் முருகன். வாசக வரவேற்பைப் பெற்ற அந்நாவல் எழுத்தாளர்கள் பலராலும் கவனிக்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், ஆய்வு என்று பல தளங்களில் செயல்பட ஆரம்பித்தார்.

தந்தை சினிமா தியேட்டர் ஒன்றில் சிறிய சோடா கடை வைத்திருந்தார். அந்தக் கடையில் பணிபுரிந்த அனுபவத்தையும், தான் அவதானித்த விஷயங்களையும் மையமாக வைத்து 'நிழல் முற்றம்' நாவலை எழுதினார். திரையரங்கு சார்ந்து வாழும் பெட்டிக் கடைக்காரர்கள், டீ, காபி விற்பவர்கள், டிக்கெட் கிழிப்பவர், வாட்ச்மேன், பீடாக்கடைக்காரர், படப்பெட்டியுடன் வருபவர், தின்பண்டம் விற்பவர்கள் எனப் பலதரபட்ட மனிதர்களின் வாழ்வியல் பற்றிய பதிவாக அது அமைந்தது. தமிழில் அத்தகையோரை மையப்படுத்தி எழுதப்பட்ட முதல் படைப்பு அதுதான். இந்த நாவல் 'Current Show' என்னும் பெயரில் எழுத்தாளர் வ.கீதா அவர்களால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது. ஆடு மேய்ப்பவர்களுக்கிடையே இருக்கும் அந்நியோன்யத்தையும் சாதி வேறுபாடுகளையும் அடிப்படையாக வைத்து இவரால் எழுதப்பட்ட நாவல் 'கூளமாதாரி'. தமிழின் முக்கியமான படைப்பாகக் கருதப்படும் இதுவும் 'Season of the Palm' என்னும் தலைப்பில் வெளியானது. இவரது படைப்புகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது அவர் எழுதிய 'பீக்கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பாகும். தலைப்பினால் மட்டுமல்ல; காத்திரமான அதன் உள்ளடக்கத்தினாலும் இந்த நாவல் பேசப்பட்டது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களை, அவர்களது தொழிலை, சமூகத்துக்கு அவர்களின் இன்றியமையாமையை, அவர்களது வாழ்வியலை, அவர்களது அவலங்களை இதில் உயிர்ப்புடன் காட்டியிருக்கிறார். இவரது மற்றொரு முக்கிய நாவல் 'கங்கணம்'. இந்நாவல் பெண்சிசுக் கொலை பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண்சிசு தொடர்ந்து கொல்லப்படுவதால் பிற்காலத்தில் திருமணப் பருவத்தில் ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும், சமூகப் பாதிப்புகளையும் பேசுகிறது. திருமணம் செய்துகொள்ளத் துடிக்கும் ஒரு பேரிளைஞரைப் பற்றிய நாவல் இது. கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் மத்தியில் சில தலைமுறைகளாக இருக்கும் பெண்சிசுக் கொலை வழக்கம் அச்சமூகத்தில் சமகாலத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, 35 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் தத்தளிக்கும், வசதியான நிலக்கிழாரான மாரியப்ப கவுண்டரின் பார்வையில் சொல்கிறது.

திருச்செங்கோடு பகுதியையும் அதன் வரலாற்றையும் ஆழ்ந்து கள ஆய்வுசெய்து பெருமாள் முருகன் எழுதியிருக்கும் 'மாதொருபாகன்' நாவலும் மிக முக்கியமானது. பலரும் பேசத் தயங்கும் விஷயங்களை அந்த நாவலில் இவர் பதிவு செய்திருக்கிறார். மாவட்ட ஆட்சியரான சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களது சாதனைகள் பற்றி இவர் எழுதியிருக்கும் 'சகாயம் செய்த சகாயம்' மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்று. 'ஆளண்டாப் பட்சி' சமீபத்திய நாவல். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் போகும் மக்களின் அவல வாழ்வைச் சித்திரிக்கிறது. அதை மட்டுமல்ல, மனித உழைப்பினால் காடு எப்படி விளைநிலமாக மாறுகிறது என்பதையும் இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார். 'காட்சிப்பிழை' திரைப்பட ஆய்விதழில் இவர் எழுதிய தொடர்கட்டுரை 'நிழல்முற்றத்து நினைவுகள்' என்னும் தலைப்பில் நூலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'நிகழ் உறவு', 'நதிக்கரைக் கூழாங்கல்', 'நீர் மிதக்கும் கண்கள்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். சமீபத்தில் 'வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பெருமுயற்சி எடுத்துக் கொங்கு நாட்டைப் பற்றி ஆராய்ந்து எழுதிய தி.அ. முத்துசாமிக் கோனாரின் 'கொங்கு நாடு' நூலைப் பதிப்பித்துள்ளார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கிய விருது 'கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற இவரது கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது. நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என 16 நூல்களையும், 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அண்ணன்மார் சாமி கதைப்பாடல் பற்றிய இவரது கட்டுரைகள் முக்கியமானவை.

"எழுதுவது மனதிருப்தியைத் தருகிறது. மனத்தில் உள்ளதை இடம், காலம் கடந்து பலரோடு பகிர்ந்துகொள்வதற்கும், மனத்தில் உள்ள அழுத்தம், வேதனையிலிருந்து விடுதலை பெறுவதற்குமே எழுதுகிறேன்" என்கிறார் பெருமாள் முருகன். தமிழின் கவனிக்கத் தகுந்த எழுத்தாளராக இவரை மதிப்பிடுகிறார் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். "தமிழகத்தில் பலர் உண்மையான இலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மக்களிடம் தரமான இலக்கியத்தை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவர் பெருமாள் முருகன்" என்கிறார் பி.ஏ. கிருஷ்ணன். 2010ல் தென்கொரியாவில் உள்ள கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற எழுத்தாளர்கள் முகாமில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து ஆறு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் பெருமாள் முருகன்.

கொங்கு வட்டாரத்தின் சடங்குகள், நாட்டுப்புறப் பாடல்கள், மானிடவியல் சார்ந்த ஆய்வுகளிலும் அவற்றைத் தொகுப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் பெருமாள் முருகன், எழுத்து மட்டுமல்லாமல், பதிப்புத் துறையிலும், அகராதித் தொகுப்பிலும் ஆற்றி வரும் பணிகள் குறிப்பிடத் தகுந்தவை. குறிப்பாக, பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ்ப் பேரகராதியை முதன்மையாக வைத்தும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை மாதிரியாகக் கொண்டும் கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுத்தளித்திருப்பது மிக முக்கியமானது. "தமிழ் ஓர் இரட்டை வழக்கு மொழி; பேச்சு வழக்கு வேறானதாகவும், எழுத்து வழக்கு வேறானதாகவும் இருக்கக்கூடிய மொழி. சொற்கள் எப்படியெல்லாம் பேச்சு வழக்கில் திரிபடைகின்றன என்பதை மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கு வட்டார வழக்கு அகராதி மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும்" என்று கூறும் பெருமாள் முருகன், "தமிழ்ப் பொது வழக்கில் சொற்கள் இல்லையென்றால் வட்டார வழக்கிலிருந்து எடுத்தும் பயன்படுத்ததிக் கொள்ளலாம்" என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. தற்போது கல்வித்துறை வளர்ச்சியடைந்திருக்கின்றது. ஆனால் புலமை வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். குறிப்பாக பதிப்புத் துறை முன்னேற வேண்டும். பல அரிய நூல்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது பெருமாள் முருகனின் கோரிக்கை.

'காலச்சுவடு' இதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பேற்றுள்ள பெருமாள் முருகன், மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளரான ஆர். ஷண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 'கூடு' என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார். ஒவ்வொரு மாதமும் இவரது வீட்டின் மாடியில் அந்த அமைப்பினர் கூடி இலக்கியப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். தற்போது நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மனைவி எழிலரசி, தமிழ்ப் பேராசிரியர், கவிஞர். நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். 'மிதக்கும் மகரந்தம்' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். பிள்ளைகள் இளம்பிறை, இளம்பரிதியுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார் பெருமாள் முருகன். இவரது வலைமனை: perumalmurugan.com. தமிழ் படைப்பிலக்கியங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் பெருமாள் முருகன் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி.

அரவிந்த்

© TamilOnline.com