GATS: தமிழ்ப் பள்ளிகள் பட்டமளிப்பு விழா
மார்ச் 9, 2013 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) கீழ் இயங்கும் ஐந்து தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த ஆண்டு விழா நடைபெற்றது. இந்தப் பள்ளிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலிஃபோர்னியா தமிழ்க் கழக (CTA) பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்க் கல்வி பயில்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்விக் குழு உறுப்பினர் ராஜி முத்து வரவேற்புரை ஆற்றினார். பின்னர், அனைத்து பள்ளிக் குழந்தைகளின் வண்ணமயமான அணிவகுப்பு நடந்தது. GATS கல்விக் குழுவின் தலைவி மங்களா, பள்ளிகளின் வளர்ச்சி, தொலைநோக்குத் திட்டம் பற்றி விளக்கினார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் கண்களைக் கவர்ந்தன.

விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது பட்டமளிப்பு விழா. (GATS-CTA) பாடத் திட்டத்தில் உயர்கல்வி முடித்த மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிர்வாகத் தலைவர் சந்திரசேகர் குப்புசாமி சிறப்புரை ஆற்றி, பட்டங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை நிகோலஸ் ராஜா, சங்கத் தலைவர் ராஜா வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர். துணைத் தலைவர் எழிலன் ராமராஜன் நன்றியுரை ஆற்றினார்.

ராஜி முத்து,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com