அரங்கேற்றம்: ஹரிப்ரியா சுந்தரேஷ்
மார்ச் 10, 2013 அன்று ஃப்ரீமான்ட் ஒலோனி கல்லூரி, ஸ்மித் சென்டர், ஜாக்ஸன் தியேட்டரில் நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி நிறுவனர் இந்துமதி கணேஷின் மாணவி ஹரிப்ரியா சுந்தரேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மஹா சிவராத்திரி அன்று சிவனைப் பற்றிய, அதிலும் தமிழ்ப் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து அழகாக ஆடினார். புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. கம்பீர நாட்டையில் கணபதியை அழைத்து ஜதீஸ்வரம் முடித்து, வர்ணத்தில் சுந்தரேசனை வர்ணித்து பாவித்து ஆடியதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம், கஞ்சிரா), சாந்தி நாராயணன் (வயலின்), இந்துமதி கணேஷ், அக்‌ஷயா கணேஷ் (நட்டுவாங்கம்) நிகழ்ச்சியைச் சோபிக்கச் செய்தன. சிவ தாண்டவத்தையும், நவரச பாவங்களையும் கொண்டு வந்து அநாயசமாக ஆடினார் ஹரிப்ரியா. 'ஆடிக் கொண்டார்', 'திக்குத் தெரியாத காட்டில்' நடனங்கள் மிக நேர்த்தி. துர்கை பாடலுக்கு ஆவேசம், அமைதி, ஆனந்தம் என அபிநயித்து ஆடி அவையினரை வியக்க வைத்தார். தில்லானாவோடு நிகழ்ச்சி முடிவடையும்போது மகா சிவராத்திரி விரதத்தில் சிவனோடு ஒருநாள் இணைந்திருந்தது போலிருந்தது. குரு, சிஷ்யை, குழுவினர் அனைவரும் வாழ்த்துக்குரியவர்கள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

© TamilOnline.com