சில்லி வகைகள்
சில்லி (chilli) செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த உணவு எல்லா நாட்டினராலும் விரும்பப்படுகிற உணவாகும். இதில் அவரவருக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேர்த்துச் செய்யும்போது பிடித்த பிரத்தியேகமான ஒரு சில்லி உருவாகிறது. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சுவையுடன் இருக்கும். பொதுவாக இதில் உபயோகப்படுத்தக் கூடிய பொருட்களை முதலில் தருகிறோம்.

சில்லி செய்யும்போது பீன்ஸை உபயோகித் ததால் விவாகரத்தில் முடிந்ததாக ஒரு வலைத்தளத்தில் செய்தி வந்திருந்தது! இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்ற வரைமுறை தற்காலத்தில் இல்லை.

சில்லியில் வெங்காயம், காய்கறி, தக்காளி, அவரைவகை (Legumes like cannellini bean, brown bean, black bean, white bean, navy bean, fava bean, kidney bean, red bean, soya bean) ஒன்றைத் தனித்து அல்லது இரண்டு அதற்கு மேற்பட்டவை கலந்தது, தக்காளி, மிளகாய் (pepper) ஆகியவை முக்கியப் பொருட்கள் ஆகும்.

காய்கறிக்கு பதிலோ அல்லது காய்கறியுடன் அசைவம் (like chicken bits) கலந்தும் செய்யலாம். சோயாவை நன்றாக மசித்து (veggie ground original) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். இதை உபயோகிக்கலாம்.

தேவையான பொருட்கள்

காரட், குடைமிளகாய் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா எல்லாம் உபயோகிக்கலாம்), ஸ்குவாஷ், சுகினி, ஸெலரி (Celery), ப்ரோகோலி (Broccoli), காலிப்ளவர் இவற்றைச் சுத்தம் செய்து ரொம்பப் பொடியாக இல்லாமலும் அதே சமயம் மிக பெரிதாக இல்லாமலும் நறுக்கி வைத்துக் கொள்ளவும் - 1 கிண்ணம்.
பதப்படுத்திய தயார்நிலை பீன்ஸ் (legume) - 1 டப்பா
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பூண்டு (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
இஞ்சி (நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய ஜெலோப்பினோ மிளகாய் (jalapeno chile pepper) - தேவையான காரத்திற்கேப்ப
மிளகுப் பொடி - 1/4 தேக்கரண்டி
கொத்துமல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
ஜாதிக்காய் (nutmeg) பொடி - 1/4 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை (cinnamon) பொடி - 1/4 தேக்கரண்டி
மசாலா கலவைப் பொடி (all spice powder) - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1/4 தேக்கரண்டி
நறுக்கிப் பதப்படுத்திய தக்காளி - 1 டப்பா
தக்காளி சாஸ் சிறியது - 1 டப்பா
ரெட் ஒயின் வினிகர் - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி
மொலாஸஸ் - 1 மேசைக்கரண்டி
அல்லது
பேகிங் கோகோ பொடி - 1 மேசைக்கரண்டி
அல்லது
திடீர் காபி அல்லது டீ பொடி சூடான நீரில் கரைத்து (coffee or tea decoction) - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் (extra virgin) - 1 மேசைக்கரண்டி
கெட்டியான பால் அல்லது
கொழுப்புடன் அல்லது
கொழுப்பு நீக்கப்பட்ட Half & Half - 1 மேசைக்கரண்டி
காரப்பொடி - 1/4 தேக்கரண்டி
பார்ஸ்லி (parsley) இலைகள் - சிறிதளவு
பசுமையான பே(bay) இலைகள் - சிறிதளவு
கொத்துமல்லி இலைகள் - சிறிதளவு
சீஸ் துறுவல் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து, சற்றுக் காய்ந்ததும் வெங்காயம், ஜெலோப்பினோ மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். பின் காய்கறிகளைப் போட்டு, அவை சற்று வெந்த பின்னர் மிளகுப் பொடி, கொத்து மல்லித் தூள், சீரகப் பொடி, இலவங்கப் பட்டைப் பொடி, ஆல் ஸ்பைஸ் பொடி, ஜாதிக்காய் பொடி, கரம் மசாலா பொடி, கார பொடி, போட்டுச் சிறிது நேரம் வதக்கவும்.

தக்காளி நறுக்கியதையும் சாஸையும் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பதப்படுத்திய பீன்ஸைப் போட்டுக் கலந்து மொலாஸஸ் அல்லது பேகிங் கோகோ பொடி அல்லது திடீர் காபி அல்லது தேயிலையைச் சூடான நீரில் கரைத்து (coffe decoction or tea decoction) விடவும். தேவையான உப்பையும் சேர்க்கவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து 30 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின்னர் சோயா சாஸ், வினிகர் கலந்து ஒரு கொதிவிடவும்.

ஹா·ப் & ஹா·ப் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பார்ஸ்லி, கொத்தமல்லித் தழை, கொஞ்சம் பசுமை யான பே (bay) இலைகள் மற்றும் துறுவிய சீஸ் மேலாகத் தூவி விடவும்.

இதை செய்ததற்கு மறுநாள் சாப்பிட்டால் அதிகச் சுவையுடன் இருக்கும்.

கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com