காணாமல் போன முதல் பக்கம்!
பென்னெட் என்னைத் திருமணம் புரிந்துகொண்டு 2014 ஜனவரியில் நாற்பது வருடங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அமெரிக்க மாப்பிள்ளை, இந்தியப் பெண் என்பது சாதாரண விஷயம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் எங்கள் திருமணத்தை ரிஜிஸ்டர் பண்ணப் போனபோது மதுரை அலுவலகத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை, தமிழ்ப் பெண் என்ற பிரிவுகூட (clause) இல்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?

திருமணம் முடிந்த கையோடு எங்களுக்குக் கிடைத்த சில அனுபவங்கள் இன்னும் நினைவில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தத் தலைமுறையினரோடு பகிர ஆசைப்படுகிறேன்.

மதுரை குட்ஷெட் தெரு வீட்டில் கல்யாணம். புது மாப்பிள்ளை பென்னெட்டும், மெருகு குலையாத தங்கத் திருமாங்கல்யம், மஞ்சளிலும் மஞ்சளாக தாலிக்கயிறு என்று புதுமணப் பெண்ணாக நானும் மதுரை பஸ் ஒன்றில் சென்றோம். எங்களுடன் அமெரிக்க நண்பர் ஜெஃப் வந்தார். இங்கே மதுரைவாழ் மக்களைப் பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும். பூக்காரி, கண்டக்டரிடமிருந்து அனைவரும் மிகவும் மரியாதையாகப் பேசுவார்கள். நடத்துவார்கள். அதுவும் பெண்களிடம் இன்னும் மரியாதை அதிகம். பஸ்ஸில் நல்ல கூட்டம். ஜன்னலோரம் அமர்ந்திருந்த என் பக்கத்தில் பென்னெட் உட்கார்ந்து கொண்டார். ஜெஃப் வாரைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

புதுமணப் பெண்ணான நான் சற்றே கூச்சத்தில் நெளிந்தேன். என்னுடைய அன்னியமான பச்சைநிறக் கண்கள் பஸ் கண்டக்டரை ஏமாற்றி இருக்க வேண்டும். தமிழறியாத பெண் என்று நினைத்துக் கொண்டுவிட்டார். என்னைப் பரிதாபமாக பார்த்துக் கொண்டே "அய்யோ பாவம்... ஹிந்திக்காரப் பொண்ணு போல. வெள்ளைக்கார தொரை அதும் பக்கத்திலே போய் உட்கார்ந்திருக்காரு. அது வெக்கப்படுது பாருங்க...." என்று மதுரைத் தமிழில் பயணி ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதை ஒருவாறாகப் புரிந்துகொண்ட பென்னெட் சட்டென்று எழுந்துகொண்டார். இதுதான் சாக்கு என்று ஜெஃப் என் அருகே வந்து அமர்ந்து விட்டார். பாவம் அந்த கண்டக்டர்! என்னை எப்படி இந்த வெளிநாட்டு ஆசாமிகளிடமிருந்து காப்பது என்று புரியாமல் 'மகளே உன் சமர்த்து!' என்பது போல என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

இறங்க வேண்டிய இடம் வந்தது. நான் கண்டக்டரிடம் சென்றேன். "ஐயா! மிக்க நன்றி. அவர் என் கணவர்தான்," என்று பென்னெட்டைக் கை காட்டிய பின் "இன்னொருவர் எங்கள் குடும்ப நண்பர்," என்று சுத்தத் தமிழில் சொல்லிவிட்டு இறங்கினேன். பஸ் கொஞ்ச நேரம் அங்கிருந்து நகரவில்லை!

திருமணம் ஆன புதிதில் 'கல்சுரல் ஷாக்' என்பதைவிட 'கல்சுரல் ட்ரான்ஸ்ஃபர்' என்று சொல்லும்படி எங்கள் பழக்க வழக்கங்கள் மாறியதுண்டு. இரண்டு பேருக்கும் நல்ல ஜலதோஷம். அப்போதெல்லாம் நான் நம்மூர் வழக்கப்படி பாத்ரூம் சென்று சிங்க்கில் மூக்கைச் சிந்திவிட்டு கை கழுவிக்கொண்டு வருவேன். பென்னெட், டிபிகல் அமெரிக்கர், ஒவ்வொரு டிஷ்யூவாக எடுத்து உபயோகிப்பார். நான் சிக்கன சிகாமணியாக எந்த அறையிலிருந்து வெளியே வந்தாலும் மின் விசிறி, விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு வருவேன். அவரோ அப்படியே வந்துவிடுவார். கொஞ்ச நாளில் நான் டிஷ்யூ பேப்பர் உபயோகிக்க, அவர் பாத்ரூமுக்கு மூக்குச் சிந்த ஓடுவார். நான் விளக்குகளையும், விசிறியையும் அணைக்காமல் வந்துவிட்டு அவரிடம் மண்டகப்படி வாங்குவேன்.

நாற்பது வருடங்கள் கழிந்தும் இன்னும் சில 'கல்சுரல்' விஷயங்கள் புதிதாகவே இருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம். இரண்டு நாட்கள் முன்னாடி பிரைஸ் கிளப் போவதற்கு முன் பட்டியல் போட்டு வைத்திருந்தேன். அந்தக் காகிதத்தை எடுத்துக்கொண்ட பென்னெட் ரொம்ப நேரம் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.

"எதை இப்படி தேடுகிறீர்கள்?' என்றேன்.

"இரண்டாவது பக்கம் மட்டும்தான் இருக்கிறது. லிஸ்டின் முதல் பக்கம் காணவில்லையே...." என்றார்.

நானும் சில வினாடிகள் விழித்தேன். அப்புறம்தான் புரிந்தது. வழக்கம்போல் நான் பிள்ளையார் சுழி போட்டு லிஸ்டை ஆரம்பித்திருந்தேன். அதை பென்னெட் இரண்டு என்று புரிந்து கொண்டிருக்கிறார். அதனால் முதல் பக்கத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கு?

கீதா பென்னெட்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com