பேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும்
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளும், "கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" என்ற குறளும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தோன்றுவதால், இவற்றை அலசிக் கொண்டிருக்கிறோம். சென்றமுறை, 'கல்லாதான் ஒட்பம்' குறளுக்குப் பரிமேலழகர் கூறும் ஏரலெழுத்து என்றால் என்ன என்பதை எப்படிச் சம்பந்தமே இல்லாத கணத்தில், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களின் மஹாபாரத உபன்னியாயசத்தின் போது, வடமொழியில் அவர் குணாக்ஷர நியாயம் என்பதை விளக்கும் சமயத்தில் நமக்குப் பொறிதட்டி, ஏரல் எழுத்து எனப்படுவதும் இதுதான் என்ற முடிபுக்கு வந்து, இந்தக் குறளில் அடுத்த சிக்கலான, ஒட்பம், அறிவு என்ற சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை ஆய்ந்து கொண்டிருக்கிறோம். அறிவு எது, ஒட்பம் எது என்பதைத் திருவள்ளுவர் வாய்மொழியாகவே வரையறை காணுவதற்காகத்தான் 'உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு' என்ற குறளை எடுத்துக் கொண்டு, இந்த அறிவுக்கும் ஒட்பத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பல உரையாசிரியர்கள் 'மேம்போக்கான' (சில உரையாசிரியர்கள் 'பகட்டான' என்றும் வைத்துக் கொள்ளலாம்) சொற்களால் தடவிக் கொடுத்தபடி நழுவிவிடுவதையும் சுட்டிக் காட்டினோம். ஒட்பம் என்பது என்னவாக இருக்கலாம் என்பதை அறிய நாம் நம்முடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பொதுவான எடுத்துக்காட்டை மேற்கொண்டோம். அதை இப்போது முடிப்போம். சென்ற முறை, இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

"இது போலவே, மிக முக்கியமான இயந்திரங்களும் தொழிற்சாலைகளில் உள்ளன. சிலவகையான தொழிற்சாலைகளில், இப்படிப்பட்ட இயந்திரங்களைக் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும்தான் கையாள்வார்கள். நாள் முழுவதும் அதன்கூடவே நிற்பதால், அதன் ஓசையில் சற்றே மாற்றம் தென்பட்டாலும் அந்த இயந்திரத்தின் ஆபரேட்டருக்கு, 'ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது' என்பது தெரிந்துவிடும். ஏனெனில் அவர் அதோடேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் மணக்குடவர் சொல்லும் வகையில், 'உலகத்தோடு பொருந்திய அறிவை' உடையவராக இருக்கிறார்."

இப்போது ஒரு சூழலைக் கற்பனை செய்துகொள்வோம். இந்தக் குறிப்பிட்ட, வெகுமுக்கியமான இயந்திரத்துடன் அன்றாடம் தன் நேரத்தைச் செலவிடும் தொழிலாளிக்கு உள்ளது பட்டறிவு. பட்டுப் பட்டுத் தெரிந்து கொண்ட அறிவு பட்டறிவு. இயந்திரத்திலிருந்து வினோதமான ஒலி எழும்போதெல்லாம் எழுந்து போவார். வலது பக்கத்தில் உள்ள வரிசை வரிசையான பேனல்களில் இடதுகோடியில் மூன்றாவது பேனலில் உள்ள கீழிருந்து மேலாக ஏழாவதாக உள்ள ஒரு திருகாணி தளர்ந்திருக்கும். அதைப் போதுமான அளவுக்கு இறுக்குவார். இயந்திரம் பழையபடி இயங்கத் தொடங்கிவிடும். இது இவருக்கு மட்டும்தான் தெரியும். 'இந்த ஓசை கேட்டால் இந்தத் திருகாணியைத் திருப்பினால் இயந்திரம் சரியாகும்' என்பது இவருக்குத் தெரியும். A mechanic knows what has to be done என்று இதைத்தான் முன்னர் குறிப்பிட்டோம்.

இவர் ஏதோ மூன்று நாள் விடுப்பில் சென்று விட்டார். விடுப்பிலிருந்து திருப்பி அழைக்க முடியாத நிலை. இந்த நேரம் பார்த்து அந்தக் கடகடகட கடகடகட சப்தம் இயந்திரத்திலிருந்து எழத் தொடங்கும். இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது. தொழிற்சாலை நிர்வாகி, பொறியியலில் அயல்நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பார். அவரே நேரடியாக வந்து இயந்திரத்தில் என்ன கோளாறு என்று ஆராயத் தொடங்குவார். அவருக்கு 'நோய் நாடி, நோய் முதல் நாடு'வதற்கே ஒரு முழுதினம் தேவைப்படும். அதன் பிறகு ட்ரயல் அன்ட் எரர் முறையில் ஒவ்வொன்றாகச் செய்து பார்த்து, இப்போது இயந்திரம் சரியாகிறதா என்று சோதித்துக்கொண்டே வருவார். அளவுக்குமேல் பெரிய அந்த இயந்திரமோ அவ்வளவு எளிதில் தன் ரகசியங்களைச் சொல்லிவிடாது. இதற்குள் மூன்று தினங்கள் கழிந்துவிடும். நம்முடைய தொழிலாளி, விடுப்பு முடிந்து திரும்புவார். பிரச்சனையைத் தெரிந்து கொண்டதும், இயந்திரத்தின் வலதுபுறத்துக்குப் போவார். இடது கோடியில் மூன்றாவது பேனலில் கீழிருந்து மேலாக ஏழாவதாக உள்ள திருகாணியை முடுக்குவார். அவ்வளவுதான், இயந்திரம் சீராகிவிடும்!

இந்தச் சமயத்தில் தொழிலக நிர்வாகி அவருக்குப் பக்கத்தில் இருந்தாரானால், 'எதனால் இந்த ஒலி எழுகிறது? என்ன காரணத்தால் அது இந்தத் திருகாணியைத் திருகியதும் சரியாகிறது' என்று யோசிக்கத் தொடங்குவார். பிறகு அந்த ஓசையை உருவாக்கி, இயந்திரத்தின் ஓட்டத்தை அடிக்கடி தடுக்கும் அந்த மூலகாரணி நிரந்தரமாகக் களையப்படுவதற்கான வழி கண்டுபிடிக்கப்படும். ஏனெனில், தொழிலாளிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்; தொழிலக நிர்வாகிக்கோ, ஏன் அதைச் செய்ய வேண்டும் என்பது தெரியும். இவருக்கு நோயையும் நோயின் முதலையும் நாடுவதற்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது. பட்டறிவால் இந்த இரண்டையும் ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த தொழிலாளிக்கு, கணப்போதில் நோயைத் தீர்த்து வைக்க முடிந்தது. ஆனாலும் நிரந்தரமான தீர்வு காண முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். தொழிற்சாலையின் மதிய உணவுக் கூடத்துக்குள் இப்போது போகலாம். அங்கே இந்தத் தொழிலாளியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். 'தோடா... ஃபாரீனுக்கு அல்லாம் போயி பட்ச்சிட்டு வந்து கீறவருகூட முடியப் பிச்சிக்கினு நிக்கிறாரு. அண்ணன் வந்து அஞ்சே நிமிசத்துல சரியாக்கிட்டாரு' என்பது போன்ற பேச்சு அங்கே எழுந்தபடிதான் இருக்கும்.

ஒன்று கேட்கிறேன். இந்த முக்கியமான இயந்திரத்தில், முழுத் தொழிற்சாலையின் இயக்கத்தையும் மூன்று நாட்களுக்கு முடக்கி வைத்த இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினையை மூன்று நிமிடங்களில் இந்தத் தொழிலாளி தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் தொழிற்சாலை நிர்வாகியால், மூன்று நாட்கள் கழிந்த நிலையிலும், பிரச்சினை எங்கே இருக்கிறது என்பதையே கண்டு பிடிக்க முடியவில்லை.

அப்படியானால், இந்தத் தொழிலக நிர்வாகியை உடனாக வேலையை விட்டு நீக்கிவிட்டு, அந்த இடத்தில் நம் மேற்படித் தொழிலாளியைப் பணிக்கு அமர்த்திவிடலாமா? அவராலேயே மூன்று நாட்களில் செய்ய முடியாத பணியை இவரால் மூன்றே நிமிடங்களில் சரி செய்ய முடிந்திருக்கிறதே!

'அது முடியாது' என்று ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா? அதுதான் 'கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்.' நாம் குறிப்பிட்ட தொழிலாளிக்கு இருப்பது ஒட்பம். அந்தத் தொழிலக நிர்வாகிக்கு இருப்பது அறிவு. முன்னவரால் நிரந்தரத் தீர்வைக் காணமுடியவில்லை; இருந்தாலும், தடங்கல் ஏற்பட்டது யாருமே அறியாத வண்ணம் தன் பட்டறிவால் பெற்ற வல்லமையால் அவ்வப்போது, தனக்கே 'இன்ன காரணத்தால்' என்று விளங்காத ஒரு தீர்வைக் கையாண்டு அதைச் சரிசெய்து கொண்டிருந்தார்.

ஆக, ஒட்பம் என்பது, அனுபவ அறிவு என்றும் கொள்ளமுடியும். நம் எல்லோருக்கும் உள்ள உள்ளுணர்வு--intuition--என்றும் கொள்ளமுடியும். அனுபவ அறிவாலும் உள்ளுணர்வாலும் நாம் சொல்லும் தீர்வு சரியானதாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் சரியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், உண்மையான அறிவோ, 'மலர்தலும் கூம்பலும் இல்லது'. விரிந்த பூ, விரிந்த நிலையிலேயே தொடர்ந்து இருப்பதைப் போன்றது அறிவு. உலகத்தோடு பொருந்திய அறிவான ஒட்பமோ, பழக்கத்தால், கவனிப்பதால், அனுபவத்தால் உண்டாவது. இதுவும் மரியாதைக்கு உரியதே. ஆனாலும்,

எப்படி ஒரு முக்கியமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை, மெத்தப் படித்தவர்கள் கூட சரிசெய்ய முடியாத நிலையில் ஓர் ஆறாம் நிலைத் தொழிலாளி மூன்றே நிமிடங்களில் சரிசெய்துவிட்டார் என்ற போதிலும், அவரைத் தொழிற்சாலை நிர்வாகியாகப் பதவி உயர்த்த முடியாதோ, அது போலவே,

கல்லாதவர்களுடைய ஒட்பம் கழிய நன்று. அதை எடுத்துக் கொள்ளலாம்; ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால் அப்படிப்பட்ட ஒட்பம் நிறைந்தவனைக் கற்றவன், அறிவுடையவன் என்று, அறிவுடையார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது இந்தக் குறளின் பொருள். இதைத்தான் நாமக்கல் கவிஞருடைய உரையின் முற்பகுதி குழப்புகிறது; பிற்பகுதி திட்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், கல்லாதான் ஒட்பம் கழிய நன்று.... இந்த இரண்டிலும் அப்பொருளின் மெய்ப்பொருளையும், ஒட்பத்தில் உள்ள பயன்தரும் பகுதியையும் கொள்வதே அறிவுடைமை. ஆனால், ஒட்பம் உடையவன் விஷயத்தில், அவன் செயல்திறன் உடையவனாக இருந்தாலும் அவனுடைய மொழியால் பயனே விளைந்திருந்த போதிலும், 'அவன் கற்றவனாக அறிவுடையாரால் கொள்ளப்பட மாட்டான்' என்பதே குறளுக்கான சரியான பொருள். இப்போது, இரண்டு குறளுக்கும் முரண்பாடு இல்லை என்பது விளங்குகிறதல்லவா?

அப்படியானால், அவ்வளவு தூரம் பயன் தரக்கூடிய ஒட்பத்தைக் கொண்டிருப்பவனைப் புறந்தள்ளுவது நியாயமா என்றொரு கேள்வி எழக்கூடும். ஒன்றை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். வள்ளுவரை மாதாநுபங்கி என்பார்கள். தாயும் ஆனவர். அவர் கல்லாதவனை மட்டம் தட்டுகிறார் என்பதன்று பொருள். 'இவ்வளவு தூரம் கூர்மையுடையவனாக இருக்கிறாயே... இப்போதாவது நீ முறைபடக் கற்பாயானால், நீயும் அறிவுடையாரின் அரங்கில் அவர்களுக்குச் சமமாக இடம்பெற முடியுமே. இது தெரிந்திருந்தும் இன்னும் ஏன் கல்வியைப் பெற மறுக்கிறாய் அல்லது தயங்குகிறாய்' என்பது அவர் எழுப்பும் மறைமுக வினா. கல்லாதவர்களைக் கற்கும்படியாக ஊக்குவிக்கிறாரே தவிர மட்டம் தட்ட முற்படவில்லை என்பதை கவனத்தில் நிறுத்த வேண்டும்.

ஒரு வழியாக இந்த இணை-முரணுக்குத் தீர்வு கண்டாயிற்றா? அடுத்த இதழில் சந்திப்போம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com