ஆளுக்கொரு ஐட்டம்
வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற தயாரிப்புகளைக் கூற வந்திருக்கிறார் நித்யா நவீன். அவரது வலைமனையில் (nithyasnalabagam.com) வெகு சுவையாகப் பந்தி விரித்திருக்கிறார். இவை தென்றல் வாசகர்களுக்கென்றே அவர் பரிமாறியவை....

சப்பாத்தி-காய்கறி ரோல்
இது வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். சாதாரணமாகக் காய்கறிகள் சிலவற்றை விலக்குபவர்கள் கூடக் கண்ணை மூடிக்கொண்டு இந்த ரோலைக் கடித்துச் சுவைப்பார்கள்!

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/2 கிண்ணம்
கேரட் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம்
முட்டைக்கோஸ் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம்
குடைமிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 1/2 கிண்ணம்
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
சப்பாத்தி – 3

செய்முறை
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆனதும், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அத்துடன் உப்பு, சிவப்பு மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வதக்கிய காய்கறிகளைச் சப்பாத்தியில் வைத்து ரோல் செய்யவும். அப்புறம் என்ன செய்யணும்னு சொல்லித் தரணுமா என்ன!

நித்யா நவீன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com