எம்.ஆர். ரங்கஸ்வாமி
'எம்.ஆர்' என்று பரவலாக அறியப்படும் மாதவன் ஆர். ரங்கஸ்வாமி மிக வெற்றிகரமான ஏஞ்சல் முதலீட்டாளர். இவருடன் ஒரு விரிவான நேர்காணல் தென்றல் ஜூலை 2007 இதழில் வெளியாகியிருந்தது. சென்னையில் சட்டம் பயின்று, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து, ஆரக்கிள் போன்ற பிரபல நிறுவனங்களில் உயர்நிலையில் பணி செய்தபின்னர், தன் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதன் அவசியம் கருதி 'ஏஞ்சல் முதலீட்டளார்' ஆனார். தொட்டதைப் பொன்னாக்கும் 'மைதாஸ் 100' பட்டியலில் இவர் பெயர் Forbes இதழில் இடம்பெற்றதுண்டு. கணினித் துறையில் மிகச் செல்வாக்கானவர் வரிசையிலும் இவர் வந்ததுண்டு. இவற்றைத் தாண்டி, அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கையும் செயல்பாடும் வலுப்பட்டு வரும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அதைச் சரியான திசையில் ஒருங்கிணைத்து நெறிப்படுத்திச் செல்லும் பொது நோக்கத்தோடு இவர் இண்டியாஸ்போரா (Indiaspora.org) என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளார். அதைப்பற்றி அறியும் ஆர்வத்தோடு அவரிடம் பேசினோம். அதிலிருந்து...

*****


கே: இண்டியாஸ்போரா (Indiaspora) அமைப்பை நீங்கள் தொடங்கக் காரணமாக அமைந்தது என்ன?
ப: கடந்த சில வருடங்களாகச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. முதல் படியாக இந்தியாவில் செய்யலாம் என்ற எண்ணத்தில் NASSCOM அமைப்புடன் இணைந்து பங்களூரில் தொழில்நுட்பத் தொழில் முனைவோருக்கான ஒரு கருத்தரங்கை 4 வருடங்களுக்கு முன் நடத்தினேன். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1500 பேர் இதில் பங்கு கொள்கின்றனர். அமெரிக்காவிலிருந்து CEOக்கள், உயர்நிலை நிர்வாகிகள் ஆகியோரை அழைத்துச் சென்று உரை நிகழ்த்தச் செய்வதோடு விவாதங்களையும் ஏற்பாடு செய்கிறோம். இது இந்தியத் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் எனச் சொல்லலாம். தொழில் தொடங்குவது எப்படி, முதலீடு பெறும் வழிமுறைகள், புதிய பொருட்கள் உருவாக்கல், நுகர்வோரை ஈர்க்கும் வழிகள் ஆகியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்.

இந்த 4 வருடங்களில் 5000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். பங்களூர் மட்டுமல்லாமல் சென்னை, ஹைதராபாத், தில்லி என இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளோர் இதில் கலந்து கொள்கின்றனர். இது வருடாந்திர நிகழ்வாகிவிட்டது.

கே: That is great!
ப: அடுத்த கட்டமாக இந்திய அமெரிக்கர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் இதைத் தொடங்கினேன். எனது ஆராய்ச்சியில் 3 மில்லியன் இந்தியர்கள் இங்குள்ளது தெரிந்தது. இது அமெரிக்க மக்கட்தொகையில் 1 சதவீதம்! இது ஒரு பெரிய சிறுபான்மைக் குழுதான். தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், கல்வி, சமூக சேவை ஆகிய துறைகளில் இவர்கள் தனிப்பட்ட முறையில் நிறைய சாதித்திருந்தாலும் மற்ற சிறுபான்மைக் குழுவினருடன் ஒப்பிடும்போது, நமது சாதனைகள் வெளியே தெரியாமல் உள்ளன. போதிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை.



ஒரு குழுவாக நமது அடையாளம் என்ன என்று ஆராய்ந்ததில், நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் எனத் தெரிந்தது. அதனால் இந்திய அமெரிக்கர்களை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். இந்தியர்கள் லாப நோக்கற்ற நிறுவனங்கள் (non-profits), ஒருமுனைப்பான (very focused) தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள், தொழில் முனைவோருக்கான TAI போன்ற நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்குவதில் வல்லவர்கள் என என் ஆராய்ச்சியில் தெரியவந்தது.

மருத்துவர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள், முதன்மை நிர்வாக இயக்குனர்கள், லாப நோக்கற்ற சங்கங்கள் ஆகிய வெவ்வேறு பிரிவினரை ஒருங்கிணைக்கும் நோக்த்துடன் இண்டியாஸ்போராவைத் தொடங்கும் எண்ணம் எழுந்தது. India, diaspora என்ற இரு வார்த்தைகளையும் இணைத்து Indiaspora எனப் பெயரிட்டோம். மேலும் தியா (Dia) என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு வெளிச்சம் என்ற பொருள்.

எங்கள் அடுத்த முயற்சி நம் சமூகத் தலைவர்களை ஒன்று திரட்டுவதாக இருந்தது. இந்தியாவுக்காக, இந்திய அமெரிக்கர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு உள்ளவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டேன். கடந்த செப்டம்பரில் அத்தகைய 100 பேருடன் முதல் கூட்டம் நடைபெற்றது. குழு சிறியதாக, அதே சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு பெரியதாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டேன்.

கே: நல்லது.....
ப: நியூ யார்க்கில் இரண்டரை நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்வி, மருத்துவம், இந்திய-அமெரிக்கக் கூட்டுறவு, அமெரிக்கத் தேர்தல்களில் இந்திய அமெரிக்கர்கள் அதிக அளவில் போட்டியிட ஊக்குவித்தல் போன்றவை விவாதிக்கப்பட்டன. பல குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் உள்ள நன்மைகளை எல்லோரும் உணர்ந்தனர் என்றுதான் கூறவேண்டும்.

அதன் பின் எனது தொழில்முனைவோர் கூட்டத்திற்காக இந்தியா சென்றிருந்தேன். அப்போது தில்லியில் சில அமைச்சர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒபாமா தேர்தலில் ஜெயித்திருந்த நேரம் அது. எனக்கு ஒரு பால் நடனத்திற்கு (Inaugural Ball) ஏற்பாடு செய்யும் எண்ணம் அப்போதுதான் ஏற்பட்டது. ஒபாமாவுக்கு இந்தியர்களின் ஆதரவு நிறைய இருந்தது. யாரவது செய்தாக வேண்டும், நாமே செய்தால் என்ன என நினைத்தேன். அமெரிக்கா திரும்பிய பிறகு இதை ஏற்பாடு செய்ய 60 நாட்களே கிடைத்தன.

கே: வாவ்! அறுபதே நாட்களில் எப்படிச் செய்தீர்கள்?
ப: 24/7 வேலை செய்தேன். எனக்கு உதவ ஒரு நல்ல குழு இருந்தது. இது இந்தியச் சமுதாயத்தின் கூட்டு முயற்சி. வெவ்வேறு இடங்களில் இருந்த தலைவர்களை ஒருங்கிணைத்தோம். அவர்கள் உதவியுடன் இந்தியர்களை எட்டினோம். TAI, USIBC, CII போன்றவை, IIT, IIM, BITS பிலானி ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு இவற்றுடன் தொடர்பு கொண்டோம். இதில் கிட்டத்தட்ட 10 சதவிகித இந்திய அமெரிக்கர்களை, அதாவது 300,000 பேரைத் தொடர்பு கொண்டு 'இண்டியாஸ்போரா'வைப் பற்றி கூறியிருப்போம் என்பது என் கணிப்பு. இதன் பலனாக நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுப் போயின.

1200 பேருக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுநர்கள், மேயர்கள், ஒபாமாவின் சகோதரி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். நம் சமூகத்தின் நலன் விழைவோர், அரசியல்வாதிகள் ஆகியோர் நம்மை ஆதரித்து, நம்மீது அவர்கள் கொண்ட மதிப்பு, எவ்வாறு நம்மோடு இணைந்து செயல்பட விரும்புகிறார்கள் என்பவை பற்றிப் பேசினர். இதன்மூலம் இந்திய அமெரிக்கர்கள் சக்தி வாய்ந்த, துடிப்புடைய, அரசாங்கத்துடன் ஒத்துழைக்க விரும்பும் ஒரு சமூகம் என ஜனாதிபதி, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோருக்குப் புரியவைக்கும் எமது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.

கே: பிரமாதம்! இண்டியாஸ்போராவின் நோக்கங்கள் என்ன?
ப: நியூ யார்க் கூட்டத்தில் 5 முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நான் முன்னர் சொன்னபடி எப்படி இந்திய அமெரிக்கர்களை தேர்தலில் பெருமளவில் போட்டியிட வைப்பது என்பது முதல் விஷயம்.

இரண்டாவதாக ஏழை இந்திய அமெரிக்கர்களுக்கு எப்படி உதவுவது என்பது. இந்திய அமெரிக்கர்கள் பணக்காரர் என்பது பொதுவான கருத்து. ஆனால் 300,000 இந்தியர்கள், அதாவது 10 சதவிகிதம் பேர் வறுமையில் உள்ளனர் என்று எங்கள் ஆய்வு கூறியது. இவர்களுக்கு உதவும் வழிமுறைகள் ஆராயப்பட்டன.

அடுத்ததாக வலுவான இந்திய-அமெரிக்க உறவை ஏற்படுத்துவதன் அவசியம். தொழில், பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஆகியவை வலுவான உறவை ஏற்படுத்தும் .



அடுத்ததாக, இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்தில் எப்படி நாம் உதவமுடியும் என்பது அலசப்பட்டது. 'இந்தியாவில் சாதகமான சூழல் நிலவுகிறது, நம் முதலீடு சரியான விதத்தில் பயன்படும்' என்ற நம்பிக்கை போன்றவை ஏற்பட்டால்தான், அங்கே அதிக அளவில் பணம், நேரம் ஆகியவற்றை முதலீடு செய்ய இந்திய அமெரிக்கர்கள் முன்வருவார்கள்.

நிறைய இந்திய அமெரிக்கர்கள் மனிதநேயப் பணிகளுக்காக பணம் மட்டுமல்லாமல், நேரம், வழிகாட்டுதல், சேவை ஆகியவற்றையும் இந்தியாவுக்கு வழங்க விரும்புகின்றனர். அவர்கள் தகுதியான நற்காரியங்களை தேர்ந்தெடுக்க உதவுவது எப்படி எனக் கடைசியாக விவாதிக்கப்பட்டது.

இவற்றை நம்மவர்களிடம் எடுத்துச் செல்ல இந்த பால் நடனம் ஒரு வழியாக இருந்தது. அவர்கள் இதைப்பற்றி விவாதித்து, கருத்துச் சொல்ல இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

கே: இந்தத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள்? செயற்குழு மற்றும் ஆங்காங்கே கிளைகள் அமைக்கத் திட்டம் உள்ளதா?
ப: இண்டியாஸ்போரா இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. இதில் புதிதாக எதுவும் உடனடியாகச் செய்ய விரும்பவில்லை. யாராவது மேற்சொன்ன 5 திட்டங்களைச் நல்ல முறையில் செயல்படுத்தி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளித்து, ஊக்கியாகச் செயல்படுவது எங்கள் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும். இவற்றில் ஏதாவதொரு களத்தில் வேறு யாரும் ஈடுபடவில்லை எனத் தெரிந்தால், அதை மட்டும் செய்ய வழிமுறைகளை ஆராய்வோம்.

எந்தத் திட்டத்தையும் அமல்படுத்துவது சுலபமல்ல. 5 அல்லது 10 வருட உழைப்பு தேவைப்படும். நாங்கள் இப்போதுதான் முதல் வருடத்தில் உள்ளோம். சில துறைகளில் செயற்குழுக்கள் அமைக்கப்படலாம். சில முயற்சிகளைப் பற்றி விவாதிக்க இங்கும், இந்தியாவிலும் மாநாடுகள் நடக்கலாம். அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலும் இண்டியாஸ்போரா செயல்படலாம். ஆனால் இப்போதுதான் தகவல்களையும் கருத்துக்களையும் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இந்திய சமூகத்தின் கருத்துக்களை அறியாமல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

கே: பத்து வருடங்களில் இண்டியாஸ்போரா என்ன செய்திருக்கும்? இந்திய அமெரிக்கர்களின் தாக்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாமீது என்னவாக இருக்கும்?
ப: பத்து வருடங்களில் எதுவும் நடக்கலாம். பத்து வருடங்களில் இந்திய அமெரிக்கர் அமெரிக்க ஜனாதிபதியாகலாம். ஏன் கூடாது? மிகத் திறமையும், தகுதியும் உடைய இந்தியர்கள் நிறையப் பேர் இங்கு உள்ளனர். ஆளுநர்களாக, செனட்டர்களாக, காங்கிரஸ் உறுப்பினர்களாகப் பலர் வரக்கூடும். அடுத்ததாக, இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் முதல் 5 பங்குதாரர்களில் (trading partner) ஒன்றாக வரக்கூடும். தற்சமயம் முதல் 10 இடத்திற்குள் உள்ளது. சீனா, மெக்ஸிகோ, கனடா போன்று அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

சுகாதாரத் துறையில் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இங்குள்ள மருத்துவ முறைகள் இந்தியாவிற்கும், இந்திய மருத்துவ முறைகள் இங்கும் வர வாய்ப்புகள் உள்ளன. அதேபோல கல்வித்துறையிலும். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளைகள் துவங்கலாம். ஏன், நம் ஐ.ஐ.டி. கூட இங்கு வரலாம். இணை நகரங்கள் (sister cities) நிறைய வரும் வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லியனுக்கு மேல் மக்கட்தொகை கொண்ட நகரங்கள் 53 இந்தியாவில் உள்ளன. இங்கு 50 நகரங்களைத் தெரிவு செய்து நகரங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தலாம். மாநிலங்களுக்கிடையே கூட்டுறவு ஏற்படுத்தலாம்.



கே: கடந்த பத்து வருடங்களில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வளர்ச்சியில் இந்திய அமெரிக்கர்களின் பங்கு நிறையவே இருந்திருக்கிறது. அடுத்த பத்து வருடங்கள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கணிப்பு என்ன?
ப: அடுத்த பத்து வருடங்களில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நிச்சயம் அதிகரிக்கும். இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால் அடுத்த பத்து ஆண்டுகள் ஓர் சுவாரஸ்யமான பயணமாக இருக்கும் எனலாம்.

கே: நிச்சயமாக! நீங்கள் முதன்முதலாக ஏற்பாடு செய்த பால் நடனம் இது. மேலும் இதைப்பற்றிச் சொல்லுங்கள்....
ப: இந்த பால் நடனம் மூலமாக இந்திய அமெரிக்கர்களின் கலாசாரத்தை வெளிச்சமிட்டுக் காட்டுத்துவது நோக்கமாக இருந்தது. ஆயிரம் பேர் கூடினோம், பேசினோம் என்பதோடல்லாமல், நம் உணவு, பாரம்பரியம் ஆகியவற்றையும் மற்றவர்கள் அறியச் செய்தோம். டி.வி. நிகழ்ச்சிகள் செய்யும் பிரபல இந்திய சமையல் வல்லுநர் மனீத் சௌஹான் அவர்கள் விருந்து தயாரித்தார். இந்தியாவின் எல்லாப் பகுதி உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எப்படி ஒரு தேசத்தவராகச் செயல்படுகிறோம் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

இதில் சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள் என எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர். வண்ணமயமான புடவைகள், சல்வார் கமீஸ், ஷேர்வானி போன்ற ஆடைகளை அணிந்து வந்தது கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

கே: நிறைய கேளிக்கை நிகழ்ச்சிகளும் இருந்ததாகக் கேள்விப்பட்டேனே?
ப: இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளின் ஃப்யூஷன் இசை வழங்கப்பட்டது. ஷங்கர் தாக்கர் குழுவினர் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய மரபிசை ஆகியவற்றை இணைத்து நல்ல நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். இதில் மூன்று, நான்கு தமிழ்ப் பாடல்களும் பாடினர்.

விரிகுடாப் பகுதியின் மோனா கான் மற்றும் குழுவினர் பாலிவுட் நடன நிகழ்ச்சியைச் சிறப்பாக வழங்கினர். கடைசியாக பஞ்சாபிய பாங்க்ரா மற்றும் நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் இரண்டையும் குழைத்து ஒரு குழு வழங்கிய பாடல்கள் அனைவரையும் எழுந்து ஆடவைத்தது. அமெரிக்க இந்தியர்களின் கலை, உணவு, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ப: கேட்கச் சுவையாக இருக்கிறதே! மிகவும் நன்றி. இண்டியாஸ்போராவின் வளர்ச்சிக்கும் உத்வேகமான செயல்பாட்டுக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்!

உரையாடல்: அம்பாள் பாலகிருஷ்ணன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com