தென்றல் பேசுகிறது...
அமெரிக்க அதிபரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் சீக்ரட் சர்வீஸ் அமைப்பின் தலைவராக ஜூலியா பியர்சனை ஒபாமா நியமித்துள்ளது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் ஆண்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்தப் பின்னணியில், ஒரு பெண்மணியை நியமித்ததே வரலாறு படைக்கும் செயல்தான். தன்னையும் தன் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வதென்ற செயலில், வெறும் கை தட்டலுக்காக அல்லாமல், உண்மையாகவே ஜூலியா திறமை உள்ளவர் என்பதற்காகத்தான் செய்திருப்பார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது. இந்தத் துறையில் ஜூலியா 30 ஆண்டு பழம் தின்று கொட்டை போட்டவர். அத்தோடு, அண்மைக் காலத்தில் சீக்ரட் சர்வீஸ் ஏஜண்டுகள் அதிபரின் பாதுகாப்பை விடத் தமது தகாத கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது ஒபாமாவின் இந்த முடிவுக்கு வித்திட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், மிகச் சிறந்த தலைமையை இந்த முக்கியப் பிரிவுக்கு வழங்கி ஜூலியா வெற்றி பெற வேண்டுமென்பதே நம் அனைவரின் விருப்பம். பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த இத்தகைய துறைகளில் பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் போக்கை இது விரைவுபடுத்த வாய்ப்பு உண்டு.

*****


திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே நடத்தப்படுவது மட்டுமே என்ற அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே பல்வேறு வகை சட்டபூர்வமான அரசு உதவிகளுக்கும் ஏற்புடையதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் ஒருபாலினத் திருமணங்கள் சில அமெரிக்க மாகாணங்களில் ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் அத்தகைய உறவில் வாழ்வோர் அரசு உதவி/சலுகை பெறத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். மாறிவரும் சமுதாயக் கருத்து, இது ஒருபாலின ஜோடிகளுக்கு இழைக்கப்படும் அநீதி, அல்லது சமநீதியின்மை என்ற நிலைப்பாட்டின் பக்கம் சாய்வது அதிகரித்து வருகின்றது. ஒபாமா அரசு, முதலில் கூறிய திருமண வரையறை ஒன்றே ஏற்புடையது என இனி அதிகாரபூர்வமாக நீதிமன்றங்களில் வாதிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது வரவேற்கத் தக்கது. ஒரு காலத்தில் தவறாகக் கருதப்பட்டவை பிறிதொரு காலத்தில் சரியாகக் கருதப்படலாம். அல்லது தலைகீழாகவும் மாறலாம். ஆனால் அரசுகளும் சட்டங்களும் சமூகவியல் கண்ணோட்டத்தோடு தமது பார்வையைத் திருத்தியமைத்துக் கொள்வது சமநீதிக்கான முக்கியப் படியாகும். தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் கருக்கலைப்பையும் இந்தக் கோணத்தில் பார்ப்பது அவசியம்.

*****


பல நல்ல வாசகர்கள்/எழுத்தாளர்களின் நாற்றங்காலாக இருந்தது 'அம்புலிமாமா' சிறுவர் இதழ். கற்பனை வளம் மிக்க சிறுவர் கதைகளை இது வழங்கி வந்துள்ளது. இதன் கதைகளோடு போட்டியிட்டு வாசிப்பை ஊக்குவித்ததில் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் வந்த ஓவியங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. 60 ஆண்டுக்காலமாக இந்த அற்புத ஓவியங்களை வரைந்து வரும் கலைஞர் 'சங்கர்' அவர்களின் பேட்டியைத் தருவதில் எமக்குப் பெருமகிழ்ச்சி. ஏஞ்சல் முதலீட்டாளர் எம்.ஆர். ரங்கஸ்வாமி அமெரிக்க இந்தியர்களின் ஆற்றலை ஒன்று திரட்டி அதை இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையே ஒரு நல்ல வளர்ச்சிப் பாலமாக வடிவமைக்க 'இண்டியாஸ்போரா' (Indiaspora) என்ற அமைப்பைத் தோற்றுவித்துள்ளார். அதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்த அவரது உற்சாகமான கருத்துக்களை இந்த இதழ் நேர்காணல் தருகிறது. சாதனையாளர் பட்டியலுக்கும் குறைவில்லை. எப்போதும் போலச் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், எழுத்தாளர், ஒரு வித்தியாசமான முன்னோடி இன்னும் பிற பயனுள்ள தகவல்களோடு உங்களை வந்தடைகிறது தென்றல்.

வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!

ஆசிரியர் குழு

ஏப்ரல் 2013

© TamilOnline.com