தாய்மை
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் "உன்கூட யாரும் வரலையா?" என்று கேட்டாள்.

"இல்ல டாக்டர், என் கணவருக்கு திடீர்னு ஒரு மீட்டிங், நான் ஆபீஸ்லேந்து நேரா வந்தேன். அதனால அம்மா கூட வரமுடியல. ஏன் டாக்டர் என்ன விஷயம்? குழந்தை ஆரோக்கியமா இருக்கு இல்லையா?"

"இல்ல அது வந்து...."

"டாக்டர், ஸ்கேன் பார்த்ததுக்குப் பிறகு உங்க முகம் மாறிப்போச்சு. இப்போ நீங்க என்கிட்ட விஷயம் சொல்லலைனா நான் என்னவோ ஏதோன்னு பயந்து ராத்திரி பூரா தூங்கமாட்டேன். என்கிட்டே என்ன விஷயம்னாலும் சொல்லுங்க டாக்டர்," சசியின் குழந்தை போன்ற முகத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி மைதிலி, "சசி உன் ஸ்கேன்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கம்மா" என்றார்.

"என்ன டாக்டர்?"

"குழந்தையோட உறுப்புகள் சரியா வளரலை" திடுக்கென்று வயற்றில் பிசைந்தது போல் உணர்ந்த சசி நடுங்கிய குரலில், "இது அஞ்சாவது மாசம்தானே டாக்டர் போகப்போக சரியாயிடும் இல்லையா?" என்றாள்.

"சரியாயிடும்னா நான் சொல்லி இருக்கவே மாட்டேன் சசி. குழந்தையோட இருதயம் சரியா வளரல. குழந்தைக்கு கிட்னி வளர்ச்சி சரியா இல்ல. இப்படி நிறைய குறை இருக்கு" என்று சங்கடத்துடன் கூறினாள் மைதிலி.

சசியின் முகம் இருண்டு போனது. அவளின் கரங்களைப் பிடித்து மைதிலி,"சசி இந்த கர்ப்பம் முடியற வரைக்கும் வெயிட் பண்றது அனாவசியம்னு நான் நினைக்கறேன். நீ வேணும்னா வேற டாக்டர்கிட்ட இன்னொரு ஒபீனியன் கேட்டுக்கோ. ஆனா இந்தக் குழந்தை நல்லபடியா உயிரோட பிறக்கறது கஷ்டம். அப்படியே பிறந்தாலும் ரொம்ப நாள் தாங்காது" என்றாள்.

சிறிது நேரம் அமைதியாக டாக்டர் கூறியதை உள்வாங்கிய சசி, "மைதிலி, நீ டாக்டர் மட்டும் இல்ல என்னோட ஃபிரெண்டும் கூட. நீ என்ன சொன்னாலும் நான் நம்பறேன். இன்னொரு டாக்டர்ட்ட போக வேண்டாம்" என்றாள்.

"அதான் ஒரு ஃபிரெண்டா நான் சொல்றேன் சசி, குழந்தை... கஷ்டம்."

"மைதிலி எதுவும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியாதா?"

"சரி செய்ய முடியுமா முடியாதாங்கறது இப்போ சொல்றது கஷ்டம். குழந்தை பிறந்த பின்னாடி குழந்தையப் பார்த்துதான் சொல்ல முடியும். ஆனா என்னோட அனுமானம் குழந்தை நல்லபடியா பிறக்கறதே கஷ்டம்".

"குழந்தைக்குச் சிகிச்சை செஞ்சு சரி செய்யக்கூடிய சதவிகிதம் எவ்ளோ மைதிலி?"

"ஒரு சதவிகிதம்தான் சசி. குழந்தை ஆரோக்கியமா பிறக்கும் அப்படிங்கற சதவிகிதம்கூட ஒரு அரைதான். நீ வீட்டுக்குப் போய் உன் கணவர்கிட்ட பேசு. நீ சரின்னு சொன்னா இன்னும் ஒரு வாரத்தில கலைக்க முயற்சி பண்ணலாம்.அதுக்கு அப்புறம் முடியாது."

"எதுக்குக் கலைக்கணும் மைதிலி?"

"நான் சொல்றது புரியலையா சசி? குழந்தை சிகிச்சை மூலம் பிழைச்சாலும் ரொம்ப நாள் தாங்காது சசி. இவ்ளோ குறைகளோட ஒரு குழந்தை பிறக்கறதே கஷ்டம். அதனால இப்போவே கலைச்சுட்டா உன்னோட துக்கம் ஓரளவுக்குக் குறையும். நீ வேணும்னா இன்னொண்ணு பெத்துக்கலாம்."

"அரை சதவிகிதம் சான்ஸ் இருக்கு இல்ல. அதுக்கு முயற்சி செஞ்சா என்ன?"

"ம்ம்.... வீட்டுக்குப் போய் யோசிச்சு சொல்லு சசி."

"என்ன யோசிச்சாலும் குழந்தையைப் பெத்துக்கற முடிவுதான் எடுப்பேன் மைதிலி" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

*****


ஏதோ முள்படுக்கை மீது படுத்த பீஷ்மர் போல், மீதி ஐந்து மாத கர்ப்ப காலத்தைக் கடந்தாள் சசி. மைதிலியின் அரை சதவிகிதம் உண்மையாகி, குழந்தை உயிருடன் பிறந்தது. குழந்தைக்கு யுகா என்று பெயரிட்டாள். தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையின் உடல்நலம் பேணுவதில் செலவழித்தாள்.

குழந்தை யுகாவிற்கு ஒன்பது மாதம் ஆயின. எத்தனையோ சிகிச்சை செய்தும் யுகா ரொம்ப நோஞ்சானாகவே இருந்தாள்.

"சசி, நீ கொஞ்சம் சாப்பிடு" இது சசியின் அம்மா. "இரும்மா யுகாவுக்குக் கொஞ்சம் சளி பிடிக்கறாப்பல இருக்கு, நான் எதுக்கும் விக்ஸ் தடவிட்டு வரேன்."

"இந்தக் குழந்தையை பார்த்துக்கிட்டே இருக்கியே தவிர உன் உடம்பை கவனிக்கறியா? அந்த குழந்தை இன்னும் எத்தனை நாள் தாங்கப் போகுதோ அதுக்காக உன் உயிரை விடறியே."

திடுக்கென்று நிமிர்ந்தாள் சசி, "என்னம்மா சொல்ற? யோசிச்சுதான் பேசறியா? நாளைக்கே எனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தா, எனக்குச் சரி பண்ண நினைப்பியா இல்ல அதவிட்டு உன் உடம்பப்பத்தி யோசிப்பியா? உனக்கு உன் பொண்ணு உடம்பு மாதிரி, எனக்கு என் பொண்ணு உடம்பு முக்கியம் அம்மா. இனிமே இப்படி தத்துபித்துன்னு பேசாதே."

*****


என்னன்னவோ செய்தும், எப்படிப் பார்த்துக்கொண்டும் விதிப்படி யுகா தன்னுடைய பத்தாவது மாதத்தில், தன்மீது உயிராக இருந்த சசியை விட்டுப் போனாள். சசியைத் தேற்ற வந்தவர்கள் விக்கித்துப் போனார்கள்.
என்ன சொல்வது என்று அறியாமல் பலரும் அமைதியாகச் சென்றனர். "நானும் ரொம்பநாள் சொன்னேன் போகப்போற குழந்தைக்காக நீ தேயாதேன்னு, கேட்டாளா?" என்று அம்மா புலம்ப, வெடுக்கென்று எழுந்து வந்தாள் சசி.

"அம்மா பிறப்பும், இறப்பும் நம்ம கையில இல்ல. மனுஷனாப் பிறந்தா எல்லோருமே இறக்க வேண்டியதுதான். அது கடவுளோட தீர்ப்பு. நானே ஒரு மாசம் கழிச்சு இறக்கப்போறதா உனக்கு தெரிஞ்சா, அடுத்த மாசம் போற நீ இப்போவே போடின்னு அனுப்பி வைப்பியா சொல்லு? டாக்டர் அஞ்சு மாசத்துல கலைக்கச் சொன்ன கருவ என்னால முடிஞ்ச வரைக்கும் உயிர் கொடுத்தேன். அதனால எனக்கு துக்கம் அதிகமா இருக்கறதப் பத்தி யோசிக்கற நீ யுகாவால எனக்குத் தாய்மைங்கிற நிறைவு கிடைச்சுதே அதப்பத்தி யோசிக்க மாட்டியா?. எல்லா உயிர்களுக்கும் இறப்பு என்ற முடிவைக் கடவுள் கொடுத்தாலும் தாயால் பிறப்பைத்தான் கொடுக்கமுடியும். என்னால முடிஞ்சவரை நான் என் யுகாவுக்கு உயிர் கொடுத்துப் பார்த்துகிட்டேன்" என்று சொன்னபடி அழுதாள் சசி.
அன்றுவரை மகளாக மட்டுமே சசியைப் பார்த்த அம்மா, அவளை முதன்முதலாக ஒரு தாயாகப் பார்த்தாள்.

லக்ஷ்மி சுப்ரமணியன்,
மின்னசோட்டா

© TamilOnline.com