கேமரா ராணி: ராமலக்ஷ்மி
பெங்களூரில் வசிக்கும் ராமலக்ஷ்மிக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. பிறந்தது திருநெல்வேலியில். இக்னேஷியஸ் கான்வென்டில் படிக்கும்போதே கேமராக் காதல் பிறந்து விட்டது. தந்தையின் யாஷிகாவில் படமெடுக்கத் தொடங்கியவர், புதுக் கேமராக்களில் விதவிதமாகப் படங்கள் எடுத்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில். பெற்ற இவரது படங்கள் வெளியாகாத தமிழ் இதழே இல்லை என்னுமளவிற்கு இன்று பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் இவரது ஒளிப்படங்கள் வெளியாகி வருகின்றன. படம் எடுப்பதில் மட்டுமல்லாமல் எழுத்திலும் தேர்ந்தவர். 80களிலேயே 'நண்பர் வட்டம்' சிற்றிதழில் இவர் எடுத்த படைப்புகள் வெளியாகியுள்ளன. கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் என படைப்பின் சகல களங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம் தோழி, கல்கி, மல்லிகை மகள், தேவதை, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், தினமணி கதிர், இவள் புதியவள் போன்ற பத்திரிகைகளிலும் வடக்கு வாசல், இலக்கியப்பீடம், அகநாழிகை, நவீனவிருட்சம், புன்னகை போன்ற சிற்றிதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. திண்ணை, வல்லமை, உயிரோசை, யூத்ஃபுல் விகடன், நவீனவிருட்சம், சொல்வனம், கீற்று, வார்ப்பு, அதீதம், பண்புடன் போன்ற இணைய இதழ்களிலும் சிறந்த பங்களிப்புகளைத் தந்துள்ளார்.

tamilamudam.blogspot.com என்ற தனது வலைப்பதிவில் தனது நெல்லை, பெங்களூர் வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை வளர்ப்பு, கவிதைகள் எனப் பலவற்றைச் சுவைபட எழுதி வருகிறார். 'தமிழில் புகைப்படக் கலை' (photography-in-tamil.blogspot.in) என்ற வலைப்பதிவின் உறுப்பினர் குழுவில் ஒருவர். அதன்மூலம் மாதந்தோறும் புகைப்படப் போட்டிகளை நடத்தி ஊக்குவிக்கிறார். புகைப்படம் எடுப்பது குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தனிக் கட்டுரைகள் மூலம் விளக்கமளிக்கிறார். அதீதம் www.atheetham.com இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.

பயணத் தொடராக இவர் பகிர்ந்து கொண்ட சிங்கப்பூர் ஒளிப்படப் பதிவுகள் இணையப் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றவை. பெங்களூர் லால்பாக் பூங்காவில் நடக்கும் சுதந்திர தின, குடியரசு தின மலர்க் கண்காட்சிகளைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். மைசூர் தசராவில் இவர் எடுத்த படங்கள் பாராட்டுப் பெற்றவை. இவரது படங்களை விளம்பர நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஒளிப்படங்களை flickr.com எனும் பக்கத்தில் கண்டு மகிழலாம்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com