மாகாளியின் மகிமை
சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் நான், என் பெண் ஈஷா, கணவர் ராம் மூவரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளேன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். என் அம்மா, அப்பா திருச்சியிலிருந்து

வருகிறார்கள். இந்தத் தடவை அவங்களை வரவச்சது பெரிய விஷயம். அவங்க நல்லபடியா வரணும்னு வேண்டாத தெய்வம் இல்லை. யார் வீட்டிலேயும் போய் தங்கக் கூடாதுன்னு அவங்களுக்கு ஒரு கொள்கை.

அதோட 93 வயதுப் பாட்டியைப் பார்த்துக்கணும்.

எல்லா அப்பா, அம்மாக்கள் மாதிரி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கூட மூட்டுவலி வேற. அம்மாவுக்கு ஒரு காலில் முட்டி மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இன்னொரு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

அப்பா ரயிலேவேலேருந்து ஓய்வு பெற்றவர். அம்மா 30 வருடம் டீச்சராக இருந்தாங்க. என்னோட ரெண்டு குழந்தைகளும் பிறக்கும்போது மட்டும் இங்கே வந்தாங்க. வெளியில வயதான இந்திய பெற்றோர்களைப்

பார்க்கும் போதெல்லாம், நம்ம அப்பா, அம்மா இங்க வந்து இருந்தால் நல்லாயிருக்குமே என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொள்வேன். இந்த தடவை அவங்களை வர வைப்பதற்கு நான் பயன் படுத்திய அஸ்திரம்

"எனக்கு ஃபிசியோதெரபி பண்ணணும்னு டாக்டர் சொல்றாங்க. ஒருநாள் விட்டு ஒருநாள் போகணுமாம். ராம் வேறு மார்ச்மாதம் டெக்சாஸ் போறார். நீங்க ஒரு மாதம் பாட்டியைச் சித்தி வீட்டில் விட்டுட்டு

வந்த்தீங்கன்னா உதவியா இருக்கும்" என்று ஒரு பொய் சொன்னேன். எனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் அம்மாவால் தாங்க முடியாது.

இதோ ஏர்போர்ட்டில் என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சக்கர நாற்காலிகளில் வயதானவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒருமணி நேரம் ஆகிவிட்டது. ஒரு வழியாக வந்துவிட்டனர். குணா படத்தில

யேசுதாஸ் பாடுவாரே "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க," அந்த உணர்வுதான் எனக்கு வந்தது. இந்தத் தடவை இன்னும் வயதான கோலம், தளர்ச்சி இரண்டு பேரிடமும்

தெரிந்தது. அம்மா என்னைக் கட்டிக் கொண்டாள். அம்மா என்னைக் கேட்ட முதல் கேள்வி, "என்ன தலையில நரைச்ச முடி? கண்ணெல்லாம் குழி விழுந்து, நீ வேலை வேலைன்னு உடம்பைப் பார்த்துக் கொள்வதே

இல்லை" என்றாள். "அட போம்மா.எனக்கும் 40 வயசு ஆகப்போகுது. ஒண்ணு ரெண்டு நரைமுடி வரத்தானே செய்யும். நீ மட்டும் என்ன .நல்லா கிழவி ஆயிட்ட" என்றேன் சிரித்தபடி, அழுகையை அடக்கிக்

கொண்டு.

ராம் கேட்டார் "உங்களுக்கு பிளேன்ல, கஸ்டம்ஸ்ல ஒண்ணும் பிராப்ளம் இல்லயே?" அப்பா சொன்னார் "பிளேன்ல சௌகர்யமாகத்தான் இருந்தது. கஸ்டம்ஸ்லதான் சூட்கேசைத் திறக்க சொன்னார்கள். காபி பௌடர்

சீல்டாக இருந்ததால் ஒண்ணும் சொல்லவில்லை. ஒரே ஒரு மாகாளிக் கிழங்கு ஊறுகாய் மட்டும் மாட்டிவிட்டது" என்றார்.

அம்மா சொன்னாள் "ஒரே ஒரு டப்பாதானே. போனா போகுதுன்னு நினைச்சோம். அப்பாவும் இங்கிலீஷும், தமிழும் கலந்து முட்டியைக் காட்டி டெமோ செய்து முட்டிவலிக்கு ஆயுர்வேத மெடிசன்னு சொல்லிட்டார்.

அவங்களும் விட்டுட்டாங்க".

அப்பா "உங்க அம்மா 10 டப்பால தசாவதார வேஷம் போட்டு துணி சுத்தி ஒளிச்சு வச்சிருக்கா.ஆனால் ஒண்ணும் மாட்டவில்லை," என்று சிரித்தார். எனக்கு பிடிக்குக்கும்னு அம்மா கஷ்டப்பட்டு செய்திருக்கா.

அதனால்தான் அது கஸ்டம்ஸில் சிக்கவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டே சொன்னேன், "ஏம்மா, உனக்கு உடம்பு முடியலை, ஓண்ணும் பண்ண வேணாம்னு சொன்னேன்ல?" என்றேன்.

வீட்டுக்கு வந்தவுடன், 10 மாகாளி ஊறுகாய் டப்பாகளையும் தேடி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தாள். அத்துடன் வடு மாங்காய், ரவா உருண்டை, கை முறுக்கு, மைசூர்ப்பாக்கு எல்லாம் பத்திரமாக உடையாமல்

வந்ததால் அம்மாவுக்குச் சந்தோஷம். வீடே கல்யாணக் களைகட்டியது. அம்மா எது செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும், முழுமையும் இருக்கும். கோலம் போடுவதிலிருந்து, பூத் தொடுப்பது, வீணை வாசிப்பது,

பூர்ணக் கொழுக்கட்டை செய்வது, கை முறுக்கு சுத்துவது, வடகம் இடுவது, பாடம் சொல்லிக் கொடுப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். அம்மா வேலை பார்த்தபோது கூடத் தன்னை ஒரு வேலை செய்யும்

பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டதே இல்லை. எந்தப் பண்டிகையும் விடமாட்டாள். ஸ்கூல் விடுமுறை இல்லை என்றால்கூடச் சீக்கிரம் எழுந்து அந்தந்தப் பூஜைகளை முறையுடன் செய்துவிட்டுத்தான்

வேலைக்குப் போவாள்.

இப்ப என் பெண் ஈஷா வடுமாங்காய், மாகாளி கிழங்கு உபயத்தில் நன்றாகச் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். எனக்கு "Makali is very tasty. thx" என்று ஈமெயில் அல்லது ஃபோன் வர ஆரம்பித்தது. எல்லாம்

அம்மாவின் கை வண்ணம். அக்கம் பக்கத்தில் நட்பான பஞ்சாபி, குஜராத்தி ஆன்டிகளுக்கு இனிப்புகள், மாகாளி ஊறுகாய் செய்வதுபற்றி டெமோ செய்து சாம்பிள் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஈஷா பாட்டி

தாத்தாவிடம் மாகாளி எங்கே வளரும், என்ன தாவரக் குடும்பம், அதன் இயல்புகள், மருத்துவ குணம் போன்ற விவரங்களை வாங்கி, கொஞ்சம் விக்கிபீடியா, கூகுளிலும் பார்த்து, ஊறுகாய் டப்பாவை ஃபோட்டோ

எடுத்து ஒட்டி ‘மாகாளி என்ற மாமருந்து’ என்று அறிவியல் புராஜக்ட் ஒன்றைச் சமர்ப்பித்தாள். இவள் புராஜக்டை மிகவும் ரசித்த கிளாஸ் டீச்சருக்கும், பிரின்சிபாலுக்கும் அம்மா மாகாளி ஊறுகாய்

கொடுத்தனுப்பினாள்.

ராம், "ஈஷா. இந்த ஊரில் ஏதாவது ஒத்துக் கொள்ளவில்லை என்றால் கேஸ் போட்டுடுவாங்க. கேட்டுக்கொண்டு கொடு" என்று எச்சரித்தார். ஒருநாள் நான் ஆபீசிலிருந்து வந்தபோது அம்மா காபியை என்னிடம்

நீட்டியபடி யாரோ நிறைய தடவை கால் செய்ததாகவும், தனக்கும் அப்பாவுக்கும் ஒன்றும் புரியவில்லை என்றும் சொன்னாள். அப்பா "ஏதோ மக்கு, மக்குன்னாரு! என்று சொல்லிச் சிரித்தார். நான் காலர் ஐடியை

வைத்துக் கூப்பிட்டே. "ஹை மை நேம் ஈஸ் ராஜி. டிட் ஸம்படி கால் ஃப்ரம் திஸ் நம்பர்?"

"ஆமாம், என் பெயர் ஜான். நான் நிதின் கூட வேலை செய்கிறேன்," என்று ஆங்கிலத்தில் பேசினார். தொடர்ந்து, "எனக்கு நிதின் மேக் ஆல்லி கொடுத்தார்" என்று ஏதோ மேக் கம்ப்யூட்டர் போல உச்சரித்தார்.

நிதின் பக்கத்து வீட்டுப் பையன். எனக்குத் தலை சுற்றியது. ராம் சொன்னதுபோல் எதாவது அலர்ஜி ஆகி, கேஸ் போடப் போகிறாரோ என்று நினைத்தேன். "எனக்கு மேக் ஆல்லி ரொம்பப் பிடித்தது. இரண்டு பேக்

தரமுடியுமா?" என்றார். "உங்களுக்கு அது பிடித்துப் போனதில் எனக்கு சந்தோஷம். ஆனால் அதை நாங்கள் விலைக்கு விற்பதில்லை. என் அம்மா இந்தியாவிலிருந்து எனக்காகக் கொண்டு வந்தது அது" என்று

சொல்லி ஃபோனை வைத்தேன். மாகாளி இப்படியாகக் கொல்லிமலை, பச்சைமலை அடிவாரங்களில் பயிராகி, திருச்சியில் ஊறுகாயாக மாறி அமெரிக்காவில் மணம் பரப்பியது.

ராஜேஸ்வரி ஜெயராமன்

© TamilOnline.com